ஜூலை விற்பனையில் அசத்திய இந்தியாவின் டாப் 15 கார்கள்.. பட்டியலில் 10 கார்களுடன் மாருதி ஆதிக்கம்!

கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் கார் விற்பனை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு திரும்பி பார்க்க வைத்தது. குறிப்பாக, பல முன்னணி கார் மாடல்களின் விற்பனை 50 முதல் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் விரைவில் துவங்க இருக்கும் நிலையில், டீலர்களுக்கு அதிக அளவில் கார்களை தயாரிப்பாளர்கள் அனுப்பியதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த நிலையில், கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 15 கார்கள் பற்றிய பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த பட்டியலில் முதல் 15 இடங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 9 கார்கள் இடம்பிடித்துள்ளன. டாடா, மஹிந்திரா இடையே கடும் போட்டி உள்ளது. மேலும், இந்த பட்டியலில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு தலா ஒரு இடங்களை பிடித்தன.எந்தெந்த கார் மாடல்கள் எவ்வளவு யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

Top Selling Cars

1. மாருதி டிசையர்

கடந்த மாதம் மட்டும் 23,791 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகி நாட்டின் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீதம் கூடுதலாகும். சிறந்த டிசைன், வசதிகள், அதிக எரிபொருள் சிக்கனத்துடன் சரியான பட்ஜெட்டில் கிடைப்பதால் மாருதி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பெட்ரோல் மட்டுமின்றி, சிஎன்ஜியிலும் இருப்பதால் டாக்ஸி மார்க்கெட்டிலும் இந்த காருக்கு அதிக வரவேற்பு உள்ளது.

2. மாருதி வேகன் ஆர்

இந்தியாவில் மிக நீண்டகாலமாக வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற சிறிய வகை கார் மாருதி வேகன் ஆர். கடந்த மாதம் மட்டும் 23,298 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் 59 சதவீதம் கூடுதலாகி உள்ளது. அடக்கமான வடிவமைப்பு, உயரமானவர்களுக்கும் போதிய ஹெட்ரூம் இடவசதியுடன் சிறப்பான பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதிக மைலேஜ், மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் கட்டமைப்பும் இதற்கு வலு சேர்க்கிறது.

3. மாருதி எர்டிகா

ஒரு 7 சீட்டர் எம்பிவி ரக கார் இந்தளவு விற்பனையில் சிறிய கார்களுடன் போட்டி போடுவது விந்தையான விஷயமாகத்தான் இருக்கிறது. அதுவும் மாதாமாதம் இந்தளவு விற்பனை என்பது போட்டியாளர்களையே மிரள வைக்கும் அம்சமாகவே உள்ளது. கடந்த மாதம் 21,606 எர்டிகா கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலையில் 16,604 எர்டிகா கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. 7 பேர் செல்வதற்கான சிறப்பான இடவசதி, நம்பகமான எஞ்சின், சரியான விலை இந்த காரின் விற்பனையை பெரிய அளவில் கொண்டு செல்கிறது.

4. மாருதி ஸ்விஃப்ட்

ஒருநேரத்தில் பல இந்தியர்களின் கனவு பட்ஜெட் கார் மாருதி ஸ்விஃப்ட். தற்போது சந்தைப் போட்டி அதிகரித்ததுடன் எஸ்யூவி பக்கம் வாடிக்கையாளர்கள் சென்றாலும் தனக்கென தனி இடத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. ஸ்போர்ட்டியான தோற்றம், சிறந்த கையாளுமையுன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் 21,538 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலையில் 14,190 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் 52 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது சிறிய கார்கள் பக்கம் வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டுவது இதன் விற்பனை மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

5. டாடா பன்ச்

முதல்முறை கார் வாங்குவோரின் கனவு மாடலாகவும், மதிப்புமிக்க தேர்வாகவும் டாடா பன்ச் கார் மாறி இருக்கிறது. சிறிய வகை கார் சந்தையில் மாருதியை மைக்ரோ எஸ்யூவி என்ற புதிய சந்தை அணுகுமுறையுடன் டாடா மோட்டார்ஸ் இந்த பன்ச் காரை நிலைநிறுத்தியது. அதற்கு கைமேல் பலன் கிடைத்து வருகிறது. அருமையான டிசைன், எஸ்யூவி போன்ற கம்பீர தோற்றம் என்பதுடன், பெட்ரோல், சிஎன்ஜி, எலெக்ட்ரிக் என பல எரிபொருள் வகைகளில் சரியான பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதனால், கடந்த மாதத்தில் மட்டும் 21,313 பன்ச் கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலையில் 10,785 பன்ச் கார்கள் விற்பனையான நிலையில், தற்போது 98 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

6. மாருதி ஃப்ரான்க்ஸ்

கடந்த மாதத்தில் மட்டும் 19,473 ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனையாகி உள்ளன. காம்பேக்ட் ரக எஸ்யூவியாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த மாடலின் க்ராஸ்ஓவர் வகை டிசைன் கம்பீரத்துடன் இருப்பதால் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை விற்பனையைவிட கடந்த மாதம் 51 சதவீதம் அதிகமாகி உள்ளது.

7. மாருதி பலேனோ

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக மாருதி பலேனோ கார் இருந்து வருகிறது. டிசைன், இடவசதி, நம்பகமான எஞ்சின் என அனைத்து விதத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 18,241 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது சென்ற ஆண்டு ஜூலையைவிட 46 சதவீதம் கூடுதலாகி இருக்கிறது.

Hyundai Creta

8. ஹூண்டாய் க்ரெட்டா

இந்தியாவின் ஆணழகன் பட்டத்துடன் வாடிக்கையாளர்களின் மனதை வென்று விற்பனையிலும் அசத்தி வருகிறது ஹூண்டாய் க்ரெட்டா. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் மதிப்புமிக்க நம்பர்-1 தேர்வாக தன்னை முன்னிறுத்தி வருகிறது. கடந்த மாதத்தில் 18,088 க்ரெட்டா கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலையை ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

9. டாடா நெக்ஸான்

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நம்பர்-1 தேர்வாக இருந்து வருகிறது. பாதுகாப்பு அம்சங்கள், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. கடந்த மாதத்தில் 17,471 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலையைவிட இது 36 சதவீதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

10. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மிக நெடிய பாரம்பரியத்துடன் கம்பீரமான மஹிந்திரா ஸ்கார்ப்பியோவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் 16,009 ஸ்கார்ப்பியோ கார்கள் விற்பனையாகி மலைக்க வைத்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

11. மாருதி ஈக்கோ

ஒருபுறம் பாதுகாப்பு, அதிக தொழில்நுட்ப அம்சங்கள், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகள் என வாடிக்கையாளர்களை கவர கார் நிறுவனங்கள் போட்டோ போட்டி வருகின்றன. ஆனால், இவற்றில் எதுவுமே அதிகம் இல்லாத ஒரு மாடல் சத்தமில்லாமல் மாதாந்திர விற்பனையில் கொடி கட்டி பறக்கிறது என்றால் அது மாருதி ஈக்கோதான். 5 முதல் 7 பேர் செல்வதற்கான வாய்ப்பை வழங்குவதுடன் அதிக இடவசதி, சிறப்பான மைலேஜுடன் தனக்கென பெரிய வாடிக்கையாளர் வட்டத்தை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. கடந்த மாதத்தில் 13,896 ஈக்கோ கார்கள் விற்பனையாகி உள்ளன.

12. கியா செல்டோஸ்

அழகான டிசைன், எக்கச்சக்க தொழில்நுட்ப அம்சங்களுடன் நம்பகமான எஞ்சின் தேர்வுகளுடன் கூடிய மாஸ் மார்க்கெட்டில் பிரிமீயம் பிராண்டாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது கியா நிறுவனம். இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கச்சிதமாக பூர்த்தி செய்யும் வகையில் உள்ள அந்நிறுவனத்தின் செல்டோஸ் கார் விற்பனையிலும் அசத்தி வருகிறது. கடந்த மாதத்தில் 12,541 செல்டோஸ் கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலையில் 6,010 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 109 சதவீதம் கூடுதலாகி இருக்கிறது.

Maruti Alto

13. மாருதி ஆல்ட்டோ

பட்ஜெட் குறைவான மார்க்கெட்டில் கார் வாங்க திட்டமிடுவோருக்கு நம்பகத்தன்மையை அதிகம் எதிர்பார்ப்பார்கள். தயாரிப்பு தரம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் இருப்பது இயல்புதான். இந்த எண்ணங்களை புறந்தள்ளி தன்னை ஒரு சிறந்த பட்ஜெட் கார் மாடலாக விற்பனையில் அசத்தி வருகிறது மாருதி ஆல்ட்டோ. கடந்த மாதத்தில் 12,534 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலையில் 5,910 ஆல்ட்டோ கார்கள் விற்பனையான நிலையில், மீண்டும் இந்த காருக்கு மவுசு கூடி இருப்பது தெரிய வந்துள்ளது.

14. மாருதி பிரெஸ்ஸா

கடந்த மாதத்தில் 12,055 பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகி உள்ளன. கவரும் டிசைன், எஞ்சின் தேர்வுகளுடன் போதிய வசதிகள் இருப்பதுடன் இந்த காருக்கு மாருதியின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இதனால், விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. அண்மையில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் பிரெஸ்ஸா கார் விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

15. மாருதி விக்டோரிஸ்

மாருதியிடம் இருந்து விற்பனையில் உள்ள புத்தம் புதிய மாடல் என்பதுடன் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் ஏராளமான அம்சங்கள் உள்ளன. தனித்துவமான டிசைன் அம்சங்கள், வசதிகளுடன் சரியான விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இது எஸ்யூவி ரக கார்களில் அதிக மைலேஜ் தரும் மாடலாகவும் இருப்பது கூடுதல் பலம். கடந்த மாதத்தில் மட்டும் 11,334 விக்டோரிஸ் கார்கள் விற்பனையாகி உள்ளன.

Article Published On: Friday, August 14, 2026, 18:30 [IST]
English summary
Top 15 best selling cars india july 2026
மேலும்... #maruti suzuki #car sales #tata motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X