மிகவும் மலிவான விலையில் வென்டிலேஷன் சீட்கள் வசதி கொண்ட டாப் 5 கார் மாடல்கள் இவை தான்!
இந்த வசதி காரில் இருந்தா சூப்பரா இருக்கும் என வாடிக்கையாளர்கள் நினைக்கும் சில வசதிகளில் ஒன்று வென்டிலேஷன் செய்யப்பட்ட சீட்கள். நீண்ட தூரப் பயணங்களின் போது, அதிக நேரம் காரில் அமர்ந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது காற்றோட்ட வசதி கொண்ட சீட்கள், அந்தப் பயணங்களை இலகுவாக்கும். குறிப்பாக ஓட்டுநருக்கு. காரை ஓட்டுபவர், ஒரே பொசிஷனிலேயே அமர்ந்து ஓட்ட வேண்டியிருக்கும். அப்போது இந்த வசதி இருப்பது பயணம் இலகுவாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சன்ரூஃப் எப்படி டாப் எண்டு வேரியன்ட்களிலேயே அதிகம் கொடுக்கப்பட்டு வந்ததோ, அது போல தற்போது இந்த வென்டிலேஷன் கொண்ட சீட்கள் வசதி உயர்நிலை வேரியன்ட்களிலேயே நிறுவனங்கள் அதிகமாகக் கொடுத்து வருகின்றன. எனினும் சில கார்களில் குறைவான விலை வேரியன்ட்களிலும் இந்த வசதியினை நாம் பெற முடியும். அப்படி குறைவான விலையில் வென்டிலேஷன் வசதியுடன் கிடைக்கும் டாப் 5 கார் மாடல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

5. கியா சிராஸ் (Kia Syros)
ஐந்தாவது இடத்தில் கியாவின் இரண்டு சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களில் ஒன்றான சிராஸ் உள்ளது. HTX, HTX+ மற்றும் HTX+(O) ஆகிய உயர்நிலை வேரியன்ட்களில் வென்டிலேஷன் கொண்ட முன்பக்க சீட்கள் வசதியைக் கொடுத்துள்ளது கியா. இன்னொரு சிறப்பான அம்சம் என்னவென்றால், டாப் எண்டான HTX+(O) வேரியன்டில் பின்பக்க இருக்கைக்கும் வென்டிலேஷன் வசதியை கியா கொடுத்துள்ளது தான்.
டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளைப் பெற்றிருக்கும் நிலையில், HTX வேரியன்டில் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்டிருக்கும் ட்ரிம்மே ரூ.12.10 லட்சம் என்ற குறைவான விலையில் வென்டிலேஷன் வசதியுடன் கிடைக்கிறது. இதற்கு மேலே ரூ.15.94 லட்சம் வரையிலான விலையில் வென்டிலேஷன் வசதி கொண்ட சிராஸ் ட்ரிம்களை விற்பனை செய்து வருகிறது கியா.

4. ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue)
ஹூண்டாயின் ஒரேயொரு சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல். இதில் HX8 மற்றும் HX10 ஆகிய உயர்நிலை வேரியன்ட்களிலேயே வென்டிலேஷன் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உயர்நிலை வேரியன்ட்களில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் அல்லது 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
HX8 வேரியன்டின் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்மை ரூ.11.91 லட்சம் என்ற விலையில் வென்டிலேஷன் வசதியுடன் நாம் வாங்க முடியும். வென்யூ லைன்-அப்பில் வென்டிலேஷன் வசதியுடன் குறைவான விலையைக் கொண்டிருக்கும் வேரியன்ட் இது தான். இதற்கு மேலே ரூ.15.51 லட்சம் வரையிலான விலையில் வென்டிலேஷன் வசதி கொண்ட வென்யூ ட்ரிம்களை விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய்.
3. ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq)
ஸ்கோடாவின் விலை குறைவான கார் மாடல் கைலாக். இந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல் நான்கு வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், டாப் இரண்டு வேரியன்ட்களில் வென்டிலேஷன் வசதியைக் கொடுத்துள்ளது ஸ்கோடா. பிரஸ்டீஜ் மற்றும் பிரஸ்டீஜ்+ ஆகிய வேரியன்ட்களை வென்டிலேஷன் வசதி கொண்ட முன்பக்க சீட்கள் வசதியுடன் நாம் வாங்கலாம்.
இந்தக் காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ற ஒரே இன்ஜின் தேர்வு தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பிரஸ்டீஜ் ட்ரிம்மை ரூ.11.75 லட்சம் என்ற விலையில் வென்டிலேஷன் வசதியுடன் நாம் வாங்க முடியும். இதற்கு மேலாக ரூ.12.99 லட்சம் என்ற விலை வரையில் மூன்று ட்ரிம்களை வென்டிலேஷன் வசதியுடன் விற்பனை செய்து வருகிறது ஸ்கோடா.
2. கியா சோனெட் (Kia Sonet)
மேலே நாம் பார்த்த சிராஸுக்குக் (Syros) கீழே குறைவான விலையைக் கொண்டிருக்கும் கியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடல் சோனெட். இந்தக் காரின் உயர்நிலை வேரியன்ட்களில் ஒன்றான HTX வேரியன்டில் தொடங்கி வென்டிலேஷன் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள் வசதியைக் கொடுத்து வருகிறது கியா. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட சோனெட் HTX வேரியன்டை ரூ.11.65 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
1. ரெனோ கைகர் (Renault Kiger)
இந்தியாவிலேயே மிகவும் குறைவான விலையில் வென்டிலேஷன் வசதியைக் கொண்டிருக்கும் கார் மாடல் ரெனோவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவியான இந்த கைகர் தான். இதன் டாப் எண்டான எமோஷன் வேரியன்டிலேயே முன்பக்க சீட்களில் வென்டிலேஷன் வசதியைக் கொடுத்துள்ளது ரெனோ. 1.0 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கைகர் எமோஷன் வேரியன்டை வெறும் ரூ.8.42 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
இதுமட்டுமின்றி, இந்த கைகர் மாடலின் வென்டிலேஷன் வசதி கொண்ட மூன்று வேரியன்ட்களுமே இரண்டாவது இடத்தில் இருக்கும் கியா சோனெட்டின் வென்டிலேஷன் வசதி கொண்ட விலை குறைவான வேரியன்டின் விலையை விட மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. வென்டிலேஷன் வசதி கொண்ட 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மேனுவல் ட்ரிம்மை ரூ.9.33 லட்சம் என்ற விலையிலும், CVT கியர்பாக்ஸ் கொண்ட ட்ரிம்மை ரூ.10.33 லட்சம் என்ற விலையிலும் ரெனோ விற்பனை செய்து வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வென்டிலேஷன் வசதி தற்போது ஒரு சொகுசு வசதியாவே கருதப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு காரில் இருக்க வேண்டிய அடிப்படையான வசதிகளில் ஒன்றாக இருப்பதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டது இந்த வென்டிலேஷன் வசதி. தற்போது விலை குறைவான கார் மாடல்களிலும் சன்ரூஃப் வசதியை முக்கியமாக நிறுவனங்கள் கொடுத்து வருகிறது. அதற்கு மாற்றாக இந்த வென்டிலேஷன் வசதியைக் கொடுக்கலாம். சன்ரூஃப் போல இல்லாமல் இது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








