இந்தியாவிலேயே அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய எஸ்யூவி இது தான்
இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு காரில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்சங்களுடன் மைலேஜும் மிகவும் முக்கியம். அதுவும் சிறப்பாக இருந்தால் மட்டுமே, அந்தக் கார் அதிகப்படியாக விற்பனை ஆவதை உறுதி செய்ய முடியும். அதிக மைலேஜ் என்று கூறும் போது முதலில் வந்து நிற்பது நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தான். இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடிய நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மிட்-சைஸ் எஸ்யூவி கார்களைப் பார்க்கலாம்.
1. மாருதி சுஸுகி விக்டோரிஸ்:
மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜினுடன் அதிக மைலேஜைக் கொடுக்கும் கார் என்றால் அது விக்டோரிஸ் தான். இந்தக் காரில் 103 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது லிட்டருக்கு 21.18 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கிறது. ரூ.10.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்த மிட்-சைஸ் எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்:
மாருதி கிராண்டு விட்டாராவின் ரீபேட்ஜ்டு மிட்-சைஸ் எஸ்யூவி மாடலான அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ARAI அமைப்பு சோதனை செய்ததன்படி, இந்தக் காரின் 103 hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினானது லிட்டருக்கு 21.12 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே நாம் பார்த்த விக்டோரிஸ் எஸ்யூவியின் இன்ஜினும் இந்த ஹைரைடரின் இன்ஜினும் ஒன்றுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
3. மாருதி சுஸூகி கிராண்டு விட்டாரா:
அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் ஒரிஜினல் மாடல் கிராண்டு விட்டாரா தான். மேலே நாம் பார்த்த இரண்டு கார்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் நேச்சுரலில் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தான் இந்த கிராண்டு விட்டாராவிலும் உள்ளது. இந்த இன்ஜின் முதல் முறையாக கிராண்டு விட்டாராவிலேயே பயன்படுத்தப்பட்டது. அதில் லிட்டருக்கு 21.11 கிமீ வரையிலான மைலேஜை இந்த இன்ஜின் கொடுக்கிறது. ரூ.10.76 லட்சம் என்ற விலையில் கிராண்டு விட்டாராவை நாம் வாங்கலாம்.

4. சிட்ரன் பஸால்ட்:
இந்தியாவில் சிட்ரன் விற்பனை செய்து வரும் கூபே எஸ்யூவி மாடல் பஸால்ட். இந்தக் காரில் 82 hp பவரை உற்பச்சி செய்யும் திறன் கொண்ட 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே கிடைக்கும் இந்த இன்ஜினானது லிட்டருக்கு 18 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுத்து வருகிறது. ரூ.8.55 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தக் கூபே எஸ்யூவி மாடலை வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.
5. ஹூண்டாய் கிரெட்டா:
ஐந்தாவது இடத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் மிட்-சைஸ் எஸ்யூவி மாடலான கிரெட்டா உள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 115 hp பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினானது அதிகபட்சமாக லிட்டருக்கு 17.70 கிமீ வரையிலான மைலேஜைக் கொடுப்பதாக ARAI அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. CVT கியர்பாக்ஸுடனே இந்த மைலேஜ் அளவை நாம் பெற முடியும். ரூ.10.79 லட்சம் விலையில் தொடங்கி இந்தக் கார் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தப் பட்டியலில் அதிக மைலேஜ் கொடுக்கும் இன்ஜினாக இருப்பது மாருதியின் 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் தான். இந்த இன்ஜினே விக்டோரில், கிராண்டு விட்டாரா மற்றும் ஹைரைடர் என மூன்று கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிரெட்டாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்ஜினே செல்டோஸிலும் கொடுக்கப்பட்டிருப்பது கொசுறுத் தகவல். மைலேஜின் அடிப்படையில் மட்டுமின்றி பல்வேறு அம்சங்களின் அடிப்படையிலும் மாருதி விக்டோரிஸ் மிட்-சைஸ் எஸ்யூவி சிறந்த காராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications