கம்மி விலையில் 7 சீட்டர் எஸ்யூவி வாங்கனுமா.. அப்போ இதைப் பாருங்க முதல்ல!
முன்பை விட இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் இந்தியாவில் கார் வாங்க முன்வருகிறார்கள். இந்தியாவில் கார் என்பது ஒரு சொகுசுப் பொருள், ஒரு முறை வாங்கக்கூடிய ஒரு பொருள். எனவே முதல் முறை வாங்கும் போதே அனைத்து விதமான தேவைகளுக்கும் ஏற்ப இருக்க வேண்டும் என்று திட்டமிட்டே வாங்குவார்கள். அதில் நீண்ட தூரம் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடனும் செய்யும் கோயில் பயணமும் அடங்கும்.
அப்படி நிறைய பேர் செல்லக்கூடிய ஒரு கார் வேண்டும் என்னும் போது 7 சீட்டர் கார்களே சிறந்த தேர்வாக இருக்கும். ஒரு வேளை ஆட்கள் குறைவாக இருந்தாலும் அந்த சீட்கள் லக்கேஜை வைத்துக் கொள்ளலாம் என்று தான் இந்திய வாடிக்கையாளரின் மனது கணக்கிடும்.

மேலும் எம்பிவிக்களை விட எஸ்யூவிக்களே இந்திய வாடிக்கையாளர்களுக்கு தற்போது பிடித்தமான ஒன்று என்பதால் 7 சீட்டர் எஸ்யூவியை வாங்க விரும்புவார்கள். அப்படி இந்திய சந்தையில் தற்போது அனைத்து வாடிக்கையாளர்களும் வாங்கும் வகையில் விற்பனையில் இருக்கும் 7 சீட்டர் எஸ்யூவி கார்கள் எவை எவை என்று பார்க்கலாம்.
மஹிந்திரா XUV 7XO
எஸ்யூவி என்றவுடனேயே மஹிந்திராவின் பக்கம் ஒருமுறை வண்டியை திருப்பிவிடலாம். இந்தியாவின் எஸ்யூவி கிங் என்றால் அது மஹிந்திரா தான். அனைத்து விதமான தேவைகளுக்கும் மஹிந்திராவிடம் ஒரு எஸ்யூவி விற்பனையில் இருக்கும். அப்படி நம்முடைய மேற்கூறிய தேவைக்கும் அந்நிறுவனம் வைத்திருக்கும் ஒரு கார் தான் XUV 7XO.

2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இரண்டு விதமான இன்ஜின் தேர்வுகளுடன் இந்த XUV 7XO இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த 7 சீட்டர் எஸ்யூவியை 14.96 லட்சம் முதல் 24.92 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் வாங்கலாம். இந்தியாவில் விற்பனையில் இருக்கும் 7 சீட்டர் எஸ்யூவிக்களிலேயே மூன்றாவது வரிசையில் கொஞ்சம் தாராளமான இடவசதி கொண்ட காராக இந்த XUV 7XO-வை சொல்லலாம்.
டாடா சஃபாரி
டாடாவின் லைன்-அப்பில் ப்ரீமியமான ஒரு காராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது மூன்று வரிசையாக 7 சீட்கள் கொண்ட சஃபாரி எஸ்யூவி. 13.29 லட்சம் முதல் 26.39 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தக் காரை நாம் வாங்கலாம். கடந்தாண்டு வரை இந்தக் காரை வாங்க வேண்டும் என்றால் வாடிக்கையாளர்களுக்கு சில தேர்வுகள் மட்டுமே இருந்து வந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.
கடந்தாண்டு வரை டீசல் இன்ஜின் கொண்ட சஃபாரியை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்து வந்தது டாடா. ஆனால் இப்போது டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட சஃபாரி எஸ்யூவியும் விற்பனையில் இருக்கிறது. பவர்ஃபுல்லான பெட்ரோல் இன்ஜினுடன் 7 சீட்டர் எஸ்யூவி வேண்டும் என்பவர்கள் டாடாவின் இந்த சஃபாரி எஸ்யூவியை தேர்ந்தெடுக்கலாம்.
ஹூண்டாய் அல்கஸார்
ஹூண்டாயின் கிளாஸியான மற்றும் ரக்கடான தோற்றம் கொண்ட 7 சீட்டர் எஸ்யூவி காராக அல்கஸாரை 14.50 லட்சம் முதல் 21.20 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் வாங்கலாம். 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகள் இந்த எஸ்யூவியில் கொடுக்கப்பட்டுள்ளன.
ப்ரீமியமான லுக்குடன் இருந்தாலும், போட்டியாளர்களுடன் ஒப்பிடும் இது சற்று சிறிய எஸ்யூவி தான். அதுவும் இந்தக் காரின் மூன்றாம் வரிசை இருக்கை தான் 7 சீட்டர் எஸ்யூவிக்களிலேயே குறைவான இடவசதி கொண்டதாக இருக்கிறது. எனவே எல்லா நேரங்களிலும் 7 நபர்களுடன் பயணம் செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் சற்று யோசிக்கலாம்.
மஹிந்திரா ஸ்கார்பியோ N
மஹிந்திராவின் லைன்-அப்பில் இருக்கும் மற்றொரு 7 சீட்டர் எஸ்யூவி இந்த ஸ்கார்பியோ N. முறையான எஸ்யூவிக்கான லுக்குடன் ஒரு 7 சீட்டர் எஸ்யூவியை வாங்க வேண்டும் என்றால் உங்கள் சாய்ஸ் இந்த மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலாகத் தான் இருக்க வேண்டும். 13.49 லட்சம் முதல் 21.97 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த டஃப்பான எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
XUV 7XO-வைப் போலவே இந்த ஸ்கார்பியோ N மாடலிலும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 4X4 டிரைவ் வசதியுடன் ஆஃப்-ரோடிங் திறனையும் இந்த எஸ்யூவி கொண்டிருக்கிறது. மஹிந்திராவின் பெயர் சொல்லும் எஸ்யூவியாக இது இருக்கிறது.
மேலும், அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காராக இந்த ஸ்கார்பியோ N இருக்கிறது. ஆனாலும், 7 சீட்களுக்காக இந்தக் காரை வாடிக்கையாளர்கள் வாங்குவதில்லை எனக் கூறலாம். ஏனெனில் இந்தக் காரிலும் மூன்றாம் வரிசை இருக்கையின் இடவசதி மிகவும் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜி ஹெக்டர்
இந்த லைன்-அப்பிலேயே அதிக தொடக்க விலை கொண்ட 7 சீட்டர் எஸ்யூவி இந்த ஹெக்டர் தான். 17.29 லட்சம் முதல் 19.49 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தக் காரை இந்தியாவில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. நல்ல வசதிகளை இந்த எஸ்யூவி கொண்டிருந்தாலும், இதன் இன்ஜின் போதுமான பன்ச்சைக் கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. இந்தியாவில் குறைவாக விற்பனை செய்யப்படும் 7 சீட்டர் எஸ்யூவியாகவும் இந்த ஹெக்டர் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
ஒரு 7 சீட்டர் எஸ்யூவிக்கான முழுமையான அம்சங்களை அனுபவிப்பதோடு பெர்ஃபாமன்ஸிலும் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்றால் எங்களுடைய தேர்வு மஹிந்திரா XUV 7XO-வாகவே இருக்கிறது. அது வேண்டாம் என்றால் டாடாவின் சஃபாரியை முயற்சி செய்யலாம். ஹூண்டாய் அல்கஸார் மற்றும் ஸ்கார்பியோ N சிறந்த கார்கள் தான் என்றாலும், 7 பேர் வரை எல்லா நேரமும் அமர்ந்து பயணம் செய்யும் சொகுசை அந்தக் கார்கள் அளிக்குமா என்பது சந்தேகம் தான்.


Click it and Unblock the Notifications