ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக இந்தியாவில் டொயோட்டா கார்கள் விலை உயர்வு
இந்தியாவில் ஐந்தாவது முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருந்து வரும் டொயோட்டா, இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் பட்ஜெட் கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக டொயோட்டாவின் லைன்-அப்பில் இருக்கும் நான்கு மாருதி ரீபேட்ஜ் கார்களின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டிருக்கின்றன. இன்று முதல் இந்த உயர்த்தப்பட்ட விலையிலேயே புதிய டொயோட்டா கார்களை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, டெய்ஸர், ரூமியான், ஹைரைடர் மற்றும் கிளான்ஸா ஆகிய நான்கு கார்களின் விலைகளையும் உயர்த்தியிருக்கிறது டொயோட்டா. இதில் டெய்ஸர் காரின் விலையே குறைந்தபட்சமாக 23,500 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. மாருதி ஃபிராங்க்ஸ் கிராஸ்ஓவர் எஸ்யூவியின் ரீபேட்ஜ்டு வெர்ஷனாக டெய்ஸர் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 7.25 லட்சம் ரூபாய் முதல் 12.63 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அடுத்ததாக ரூமியான் எம்பியிவின் விலையை 29,000 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது டொயோட்டா. இந்த 7 சீட்டர் காரானது 9.56 லட்சம் ரூபாய் முதல் 13.86 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. மாருதி எர்டிகாவின் ரீபேட்ஜ்டு வெர்ஷனாக இந்த ரூமியான் எம்பிவியை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா.
மூன்றாவதாக அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவியின் விலையை 32,000 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது டொயோட்ட. இது மாருதி கிராண்டு விட்டாராவின் ரீபேட்ஜ்டு வெர்ஷனாகும். ஹூண்டாய் கிரெட்டாவுக்குப் போட்டியாக மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் இந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தக் கார் 10.99 லட்சம் ரூபாய் முதல் 20.19 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இறுதியாக அதிகபட்ச விலை உயர்வைச் சந்தித்திருப்பது இந்தியாவில் டொயோட்டாவின் விலை குறைவான காரான கிளான்ஸா தான். மாருதி பெலினோவின் ரீபேட்ஜ்டு ஹேட்ச்பேக் காரான இதன் விலையை 33,000 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறது டொயோட்டா. இந்தக் கார் 6.46 லட்சம் ரூபாய் முதல் 9.64 லட்சம் ரூபாய் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது நடப்பு 2026ம் ஆண்டிலேயே டொயோட்டா மேற்கொள்ளும் மூன்றாவது விலை உயர்வு நடவடிக்கையாகும். உயர்ந்து வரும் உற்பத்தி செலவு காரணமாகவே இந்த விலை உயர்வை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிப்ரவரி மாதமே இந்த நான்கு கார்களின் விலையையும் இந்தாண்டு முதல் முறையாக உயர்த்தியது டொயோட்டா.
அதனைத் தொடர்ந்து ரூமியானைத் தொடர்ந்து மற்ற மூன்று கார்களின் விலைகளையும் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாவது முறையாக டொயோட்டா உயர்த்தியது. பின்னர் மூன்றாவது முறையாக தற்போது இந்தக் கார்களின் விலைகள் இந்தியாவில் உயர்த்தப்பட்டிருக்கின்றன. 2.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை மேற்கூறிய கார்களின் விலைகள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா மட்டுமின்றி பல்வேறு கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்களும் இன்று (ஜூலை 1) முதல் விலைகளை உயர்த்தவிருப்பதாக அறிவித்திருந்தன. அதன் அடிப்படையிலேயே டொயோட்டா கார்களின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சினைகளும் சிக்கல்களும் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருக்கும் நிலையில், இது போன்ற விலை உயர்வு அறிவிப்புகளை இனி நாம் அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும்.
தற்போதைய விலை உயர்வு கொஞ்சம் அதிகம் தான் என்றாலும், டொயோட்டா வாடிக்கையாளர்களின் வாங்கும் முடிவை மாற்றும் அளவிற்கு இந்த விலை உயர்வு அறிவிப்பு இருக்காது என்றே தெரிகிறது. இதனால் விற்பனையிலும் பெரியளவில் தொய்வு இருக்காது. கடந்த ஜூன் மாதம் டொயோட்டா 7.5 சதவீதம் விற்பனை உயர்வைப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications