டொயோட்டாவின் முதல் எலெக்ட்ரிக் காருக்கு வந்த சோதனை.. வெளியாகுமா ஆகாதா?
மாருதியின் e விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவி அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கார் டொயோட்டா எபெல்லா. இந்தாண்டு தொடக்கத்தில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். அடுத்த சில மாதங்களில் இந்த மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் டொயோட்டா வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் எபெல்லாவின் வெளியீட்டை அந்நிறுவனம் நிறுத்திவிட்டதாக தகவல்கள் சில தினங்களுக்கு முன்பிருந்து பரவத் தொடங்கியது. டொயோட்டா நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக அப்படி எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை. ஆனால் எபெல்லா காரை டொயோட்டா இந்தியாவில் வெளியிடவில்லை, அந்தத் திட்டத்தில் இருந்து பின்வாங்கி விட்டதாக நிறைய தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எபெல்லாவின் வெளியாகாது என்ற தகவல் முற்றிலும் தவறானது என மறுத்திருக்கிறது டொயோட்டா. ஜனவரி மாதம் எபெல்லாவை அறிமுகப்படுத்தியது போதே அந்த எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கான முன்பதிவையும் டொயோட்டா தொடங்கிவிட்டது. முன்பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டீலர்ஷிப்கள் பணத்தை வட்டியுடன் திரும்பக் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் கூறின. அதனையும் டொயோட்டா தற்போது மறுத்திருக்கிறது.
எதிர்பார்த்தபடியே எபெல்லா எலெக்ட்ரிக் காரை விரைவில் வெளியிடுவோம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட காலக்கட்டத்தை தாண்டியும் எபெல்லா வெளியாகாமல் இருப்பதாலேயே இது போன்ற வதந்திகள் பரவி வருவதாகத் தெரிகிறது. இதனால் முடிந்த அளவிற்கு விரைவாகவே இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை டொயோட்டா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எபெல்லா வெளியாகாது என்ற இந்த வதந்தி வேகமாகப் பரவியதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அது மாருதி e விட்டாராவின் விற்பனை தான். இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரை வெளியிடுகிறது என்பதால் e விட்டாராவின் விற்பனையின் மேல் அதிகளவு எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினருக்குமே இருந்தது.
ஆனால் பெரிய அளவில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் மற்ற எலெக்ட்ரிக் கார்களைப் போலவே குறைவான விலையிலேயே e விட்டாரா விற்பனையாகி வருகிறது. இந்தக் குறைவான விற்பனை அளவைப் பார்த்துத் தான் டொயோட்டா, எபெல்லாவின் விற்பனையை நிறுத்திவிட்டதாகத் தகவல்கள் கூறின. ஆனால் தற்போது அந்த வதந்தி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
e விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவியின் விற்பனையை பிப்ரவரி மாதம் தொடங்கியது மாருதி சுஸூகி. வெளியான முதல் மாதம் மிகவும் குறைவாக 230 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையானது e விட்டாரா. தொடர்ந்து மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முறையே 1,200 யூனிட்டுகள் மற்றும் 1,231 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையானது. மாருதி போன்ற பெருநிறுவனத்திற்கு இது மிகவும் குறைவான அளவேயாகும்.
வரும் மாதங்களில் e விட்டாராவின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. e விட்டாராவை அடிப்படையாகக் கொண்ட கார் என்பதால், எபெல்லாவில் பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் வசதிகள் ஆகியவை எல்லாம் e விட்டாராவில் கொடுக்கப்பட்டது தான் இருக்கும். வெளிப்புற டிசைனே இரண்டு எலெக்ட்ரிக் கார்களிலும் பிரதானமாக வேறுபட்டிருக்கும். இதனைத் தவிர மற்ற அனைத்து அம்சங்களும் இரண்டு எலெக்ட்ரிக் கார்களிலும் ஒரே மாதிரியாகவே கொடுக்கப்பட்டிருக்கும் என்றே தெரிவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவிலேயே நிறைய நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக 15 லட்சம் ரூபாய்க்கு மேலான விலையிலேயே அதிகளவிலான எலெக்ட்ரிக் கார் மாடல்களை வெளியிட அனைத்து நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களும் அதே பாதையையே தேர்ந்தெடுத்திருக்கின்றன. 15 லட்சத்திற்கும் கீழான விலையில் கையளவிலான எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications