360டிகிரி கேமரா, அடாஸ் பாதுகாப்பு... ரூ.6.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டொயோட்டா கிளான்ஸா அறிமுகம்!
பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக விளங்கும் டொயோட்டா கிளான்ஸா (Toyota Glanza) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அண்மையில் சந்தைக்கு வந்த மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ரீபேட்ஜ் மாடலாக வந்துள்ள இந்த காருக்கு ரூ.6.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. புதிய வடிவமைப்பு, கூடுதல் வசதிகள் மற்றும் புதிய எஞ்சின் ஆகியவற்றுடன் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.
மாருதி சுஸுகி பலேனோ காரை அடிப்படையாகக் கொண்ட கிளான்ஸா கார், தற்போது அதன் புதுப்பிக்கப்பட்ட மாடலிலும் பலேனோ காருடன் முக்கிய தொழில்நுட்ப அம்சங்களைப் பகிர்ந்து கொள்கிறது. குறிப்பாக, புதிய பெட்ரோல் எஞ்சின், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள் மற்றும் முன்புற இருக்கைகளுக்கான குளிரூட்டும் வசதி ஆகியவை இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களாக உள்ளன.

புதிய கிளான்ஸா விலை
புதிய டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார் இ கிரேடு, எஸ் கிரேடு, ஜி கிரேடு, வி கிரேடு மற்றும் வி ஆப்ஷனல் என 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இந்த காரின் பேஸ் வேரியண்ட் ரூ.6.99 லட்சம் முதல் டாப் வேரியண்ட் ரூ.10.49 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டாப் வேரியண்ட்டில் மட்டும் அடாஸ் பாதுகாப்புத் தொகுப்பு கூடுதலாக வழங்கப்படுகிறது.
முந்தைய மாடலின் ஆரம்ப விலை ரூ.6.73 லட்சமாக இருந்த நிலையில், புதிய மாடலின் ஆரம்ப விலை ரூ.26,000 அதிகரித்துள்ளது. கூடுதல் வசதிகள் மற்றும் புதிய எஞ்சின் உள்ளிட்ட கூடுதல் சிறப்பம்சங்களை கருத்தில் கொண்டு இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வடிவமைப்பு மாற்றங்கள்
புதிய கிளான்ஸா காரின் முன்புற வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் புதிய மெஷ் வடிவிலான கிரில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் மற்றும் சாட்டின் சில்வர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன. முன்புற பானெட்டின் விளிம்பில் டொயோட்டா லோகோ இடம்பெற்றுள்ளது. இதனைச் சுற்றி குரோம் அலங்காரமும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்புறத்தில் புதிய வடிவமைப்பிலான காற்று உட்புகும் ஏர்டேம் அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டு வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை. இருப்பினும், புதிய 16 அங்குல டூயல் டோன் அலாய் வீல்கள் அதன் தோற்றத்தை மேம்படுத்துகின்றன. பின்புற வடிவமைப்பிலும் பெரிய மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்த கார் ஏழு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது.

புதிய வசதிகள் என்னென்ன?
புதிய கிளான்ஸா காரில் 9 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்டுகள் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரின் முக்கியமான புதிய வசதிகளில் ஒன்று குளிரூட்டப்பட்ட முன்புற இருக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கது. வெப்பமான காலநிலையில் நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு இது கூடுதல் வசதியை வழங்கும். மேலும், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் வசதியுடன் ஆக்டிவ் கூலிங் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளது.
பார்க்கிங் வசதிக்காக 360 டிகிரி கேமரா மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. டயர்களில் காற்றழுத்தத்தைக் கண்காணிக்கும் டிபிஎம்எஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்
பாதுகாப்பைப் பொறுத்தவரை, புதிய கிளான்ஸா காரில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் குழந்தைகளுக்கான ஐஎஸ்ஓஃபிக்ஸ் இருக்கை பொருத்தும் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், 360 டிகிரி கேமரா மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்கள் நெரிசலான இடங்களில் காரை நிறுத்த உதவும்.
புதிய எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ்
புதிய கிளான்ஸா காரில் மூன்று சிலிண்டர்கள் கொண்ட புதிய 1.2 லிட்டர் இசட்12இ (Z12E) என்ற பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் இருந்த நான்கு சிலிண்டர் எஞ்சினுக்குப் பதிலாக இந்த புதிய எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 எச்பி பவரையும் 112 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிஎன்ஜி மாடலிலும் ஆட்டோமேட்டிக் வசதி
பெட்ரோல் மாடலுடன் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி தேர்வும் கிடைக்கிறது. சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது இந்த எஞ்சின் சுமார் 69 எச்பி பவரையும் 102 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. சிஎன்ஜி மாடலிலும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நகரப் போக்குவரத்தில் கிளட்ச் பயன்படுத்தாமல் காரை ஓட்ட விரும்புபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
போட்டி கார்கள்
புதிய டொயோட்டா கிளான்ஸா கார் பங்காளியான மாருதி சுஸுகி பலேனோ கார் மற்றும் ஹூண்டாய் ஐ20, டாடா அல்ட்ராஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடுகிறது. புதிய வசதிகள், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் பெட்ரோல், சிஎன்ஜி என இருவிதமான எரிபொருள் தேர்வுகள் காரணமாக இந்த கார் பிரீமியம் ஹேட்ச்பேக் சந்தையில் தொடர்ந்து கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications



