34.41 கிமீ மைலேஜ்... அசத்தும் டொயோட்டா கிளான்ஸா சிஎன்ஜி மாடல்!!
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கூடிய புதிய கிளான்ஸா காரை நேற்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடலான இந்த கார் வாடிக்கையாளர்களிடத்தில் இதன் வேறுபட்ட டிசைன், சிறப்பம்சங்களுக்காக நல்ல வரவேற்பை ஏற்கனவே பெற்றுள்ளது.
வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் புதிய எஞ்சின் ஆகியவற்றுடன் வந்துள்ள இந்தக் காரின் மைலேஜ் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இதில், ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி மாடலின் மைலேஜ் அசத்தும் வகையில் உள்ளது.

2026 டொயோட்டா கிளான்ஸா காரில் புதிய 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.80 கிமீ மைலேஜ் வழங்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 24.77 கி.மீ மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய சிரமத்தைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு ஏஎம்டி மாடல் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், நடைமுறையில் கிடைக்கும் மைலேஜ் ஓட்டும் முறை, போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும்.
சிஎன்ஜி மைலேஜ்!
பெட்ரோல் செலவைக் குறைக்க விரும்புபவர்களுக்கு கிளான்ஸா சிஎன்ஜி எரிபொருள் மாடலும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் வசதியுடன் கூடிய மாடல் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 33.61 கி.மீ மைலேஜ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட சிஎன்ஜி மாடல் ஒரு கிலோவுக்கு 34.47 கி.மீ மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பெட்ரோல் மாடலைவிட சிஎன்ஜி மாடல் மிகச் சிறப்பான மைலேஜையும், எரிபொருள் செலவை குறைப்பதற்கான வாய்ப்பையும் வழங்கும். ஆனால், சிஎன்ஜி நிரப்பும் நிலையங்கள் எண்ணிக்கை, கிடைக்கும் வசதி, பயணிக்கும் தூரம் மற்றும் எரிபொருள் விலை ஆகியவற்றையும் கணக்கில் கொண்டே வாங்கும் முடிவை எடுக்க வேண்டி உள்ளது.
என்னென்ன மாற்றங்கள்?
புதிய கிளான்ஸாவில் எஞ்சின் மட்டுமின்றி, தோற்றம் மற்றும் வசதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க கிரில், புதிய பம்பர் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் ஆகியவை காரின் வெளிப்புறத்தில் கவனம் ஈர்க்கின்றன. காரின் உட்புறத்தில் குளிரூட்டும் வசதியுடன் கூடிய முன்பக்க இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜர், ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் மேம்படுத்தப்பட்ட இணைப்புத் தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பிற்காக ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ஏடிஏஎஸ் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

விலை எவ்வளவு?
புதிய டொயோட்டா கிளான்ஸாவின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வுகள், வெவ்வேறு கியர்பாக்ஸ் வசதிகள் மற்றும் வேரியண்ட்டுகளைப் பொறுத்து விலை மாறுபடும். மொத்தத்தில், தினசரி பயன்பாட்டிற்கு சிக்கனமான காரைத் தேடுபவர்களுக்கு புதிய கிளான்ஸா கவனிக்கத்தக்க தேர்வாக இருக்கிறது.
குறிப்பாக, அதிக தூரம் பயணிப்பவர்கள் சிஎன்ஜி மாடலையும், நகரப் போக்குவரத்தில் வசதியாக ஓட்ட விரும்புபவர்கள் ஏஎம்டி மாடலையும் பரிசீலிக்கலாம். இருப்பினும், அதிகாரப்பூர்வ மைலேஜ் என்பது சோதனை அடிப்படையிலான அளவீடு என்பதால், உண்மையான பயன்பாட்டில் அதே அளவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் சந்தையில் இருக்கும் மாடல்களில் பிரிமீயம் ஹேட்ச்பேக் ரகத்தில் சிறப்பானதாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications


