டொயோட்டா கிளான்ஸா vs மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட்: இரண்டில் எது பெஸ்ட்?
இந்தியாவில் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கு டொயோட்டா கிளான்ஸா (Toyota Glanza), மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) ஆகிய இரண்டு கார்களும் முக்கியமான தேர்வுகளாக உள்ளன. இரண்டு கார்களும் ஒரே கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்களாக இருக்கும் நிலையில், தற்போது இரு கார்களும் புதிய மாற்றங்களுடன் வந்துள்ளன. இந்த நிலையில், இதில் எதை வாங்குவது என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
இரண்டு கார்களும் ஒரே அடிப்படைத் தளத்தையும், ஒரே எஞ்சினையும் பகிர்ந்துகொள்கின்றன. மைலேஜ், முக்கியமான வசதிகள், பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் ஒற்றுமைகள் உள்ளன. இருப்பினும், விலை, வடிவமைப்பு, வேரியண்ட்டுகள் மற்றும் பிராண்டின் அடிப்படையில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை விரிவாகப் பார்க்கலாம்.

விலை ஒப்பீடு
2026 டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.6.99 லட்சம் முதல் ரூ.10.49 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. மறுபுறம், புதிய மாருதி சுஸுகி பலேனோ கார் ரூ.5.99 லட்சம் முதல் 9.99 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது. இதில், கிளான்ஸா காரைவிட மாருதி பலேனோ காரின் பேஸ் வேரியண்ட் ரூ.1 லட்சம் வரையிலும், டாப் வேரியண்ட் ரூ.50,000 வரை குறைவான விலையிலும் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
ஒரே எஞ்சின்
புதிய கிளான்ஸா மற்றும் பலேனோ ஆகிய இரண்டு கார்களிலுமே மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் Z12E பெட்ரோல் எஞ்சின்தான் இடம்பெறுகிறது. இது அதிகபட்சமாக 83 எச்பி பவரையும் 112 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இரண்டு கார்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன.
மைலேஜ்
பெட்ரோல் மேனுவல் மாடல்கள் லிட்டருக்கு 23.80 கிமீ மைலேஜையும், ஏஎம்டி மாடல்கள் லிட்டருக்கு 24.77 கிமீ மைலேஜையும் வழங்குவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சிஎன்ஜி மேனுவல் மாடலின் மைலேஜ் கிலோவுக்கு 33.61 கிமீ என்றும், சிஎன்ஜி ஏஎம்டி மாடல் கிலோவுக்கு 34.41 கிமீ மைலேஜ் தரும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, எஞ்சின் செயல்திறன் மற்றும் அதிகாரப்பூர்வ மைலேஜ் அடிப்படையில் மட்டும் பார்த்தால், இரண்டு கார்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை.
வசதிகள்
இரண்டு கார்களிலுமே ஒரே மாதிரியான வசதிகள்தான் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. புதிய கிளான்ஸாவில் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 9 அங்குலத் தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா, குளிரூட்டும் வசதியுடன் கூடிய வயர்லெஸ் சார்ஜர் மற்றும் லெவல் 2 ADAS போன்ற வசதிகள் இடம்பெறுகின்றன. புதிய பலேனோவிலும் லெவல் 2 ADAS, வென்டிலேட்டட் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், விலை அடிப்படையில் இங்கு பலேனோ கார் முன்னிலை பெறுகிறது.

எது வசீகரமான தோற்றம்?
புதிய கிளான்ஸா காரின் முன்பக்கத்தில் பெரிய கிரில், மாற்றியமைக்கப்பட்ட பம்பர் மற்றும் புதிய வண்ணத் தேர்வுகள் இடம்பெறுகின்றன. டொயோட்டாவின் வடிவமைப்பு பாணிக்கு ஏற்ப இதன் முன்பக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பலேனோவிலும் புதிய கிரில், முன்பக்க பம்பர் மற்றும் வண்ண மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு கார்களின் பக்கவாட்டு மற்றும் பின்புற வடிவமைப்புகளில் பல ஒற்றுமைகள் உள்ளன. ஆனால், கிளான்ஸா காரின் முகப்பு பலேனோ காரைவிட வசீகரமாக உள்ளது. டொயோட்டா பேட்ஜ் கூட கூடுதல் மதிப்பை பெறுகிறது.
பராமரிப்பு மற்றும் மறுவிற்பனை
மாருதி சுஸுகியின் பரந்துவிரிந்த சர்வீஸ் மையங்கள் கொண்ட நெட்வொர்க், உதிரிபாகங்கள் கிடைக்கும் வசதி, உதிரிபாகங்கள் விலை ஆகியவை பலேனோ வாங்குபவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். அதேபோல், டொயோட்டாவின் விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் உரிமையாளர் அனுபவத்தை விரும்புபவர்கள் கிளான்ஸா கார் சிறந்த தேர்வாக இருக்கும்.
வாரண்டி
மாருதி பலேனோ மற்றும் டொயோட்டா கிளான்ஸா கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களுக்கு 3 ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டருக்கான வாரண்டி காலம் வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், மாருதி பலேனோ காருக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தில் 6 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டியும், டொயோட்டா கிளான்ஸா காருக்கு 5 ஆண்டுகள் அல்லது 2,20,000 கிமீ தூரத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.
எது சிறந்தது?
மாருதியின் சிறந்த விற்பனைக்கு பிந்தைய சேவை, குறைவான விலை போன்றவற்றை விரும்புபவர்களுக்கு மாருதி பலேனோ காரை வாங்கலாம். அதேநேரத்தில், மாருதி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் காரின் முகப்பு டிசைனைவிட டொயோட்டா கிளான்ஸா முகப்பு மிக வசீகரமாகவும், லெக்சஸ் சொகுசு கார்கள் போன்ற தோற்றத்துடன் கூடுதல் வசீகரத்தை பெற்றிருக்கிறது.
எனவே, பட்ஜெட் பிரச்னை இல்லை, தனித்துவமான டிசைனில் பிரிமீயமான பிராண்டு தேர்வை விரும்புபவர்களுக்கு வேரியண்ட்டை பொறுத்து ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கூடுதலாக இருந்தாலும், டொயோட்டா கிளான்ஸா கார் சிறந்ததாக இருக்கும். இந்த கார்களை வாங்க விரும்புபவர்கள் நேரில் டீலர்களுக்கு சென்று இரண்டு கார்களையும் நேரிடியாக பார்த்து, டெஸ்ட் டிரைவ் செய்வதன் மூலமாக சரியாக முடிவு எடுக்க வழிவகுக்கும். ஏனெனில், ஒவ்வொரின் விருப்பத் தேர்வும் மாறுபடலாம்.


Click it and Unblock the Notifications


