500கிமீ-க்கு சார்ஜ் கவலையே தேவையில்ல! ரூ.25,000 இருந்தால் புது டொயோட்டா காரை சொந்தமாக்கிடலாம்!
ஜப்பானிய வாகன உற்பத்தியாளரான டொயோட்டா (Toyota), இந்தியச் சந்தைக்கான தனது முதல் எலெக்ட்ரிக் காராக 'அர்பன் க்ரூஸர் எபெல்லா' (Urban Cruiser Ebella)-ஐ வெளியீடு செய்துள்ளது. அதாவது, விலையை தவிர்த்து காரை பற்றிய அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. எதிர்பார்த்தபடியே, இது ஒரு எஸ்யூவி வகையைச் சேர்ந்ததாகும். மாருதி சுஸுகி இவிட்டாரா (Maruti Suzuki eVitara) எலெக்ட்ரிக் காரை அடிப்படையாகக் கொண்ட இந்த டொயோட்டா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆனது வடிவமைப்பு, பேட்டரி பவர்டிரெய்ன்கள் மற்றும் தொழிற்நுட்ப & பாதுகாப்பு அம்சங்கள் எனப் பலவற்றை இவிட்டாராவில் இருந்து பெற்றுள்ளது.
வெளிப்புற வடிவமைப்பு: புதிய அர்பன் க்ரூஸர் எபெல்லா இ.வி ஆனது டொயோட்டாவின் தனித்துவமான 'ஹம்மர்ஹெட்' வடிவில் முன்பக்க கிரில் மற்றும் மெல்லிய எல்இடி விளக்கு அமைப்பைக் கொண்டுள்ளது. புருவம் போன்ற எல்இடி டிஆர்எல்கள் மற்றும் முக்கோண ஹெட்லைட்களுடன் கூடிய இந்த அமைப்பு, காரின் முன்பக்கத்திற்கு ஒரு தனித்துவமான மற்றும் பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. சிற்பம் போன்ற பொனெட் வடிவமைப்பு, கம்பீரமான எஸ்யூவி கார் உணர்வை வழங்குகிறது.

உட்புறம் மற்றும் தொழில்நுட்பம்: டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லாவின் உட்புறம் பழுப்பு மற்றும் கருப்பு என இரட்டை-வண்ண தீம் கொண்டுள்ளது. மென்மையான தொடு உணர்வுள்ள பொருட்கள் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் சக்கரம் ஆகியவை காரினுள் வசதியை மேம்படுத்துகின்றன. பியானோ-பிளாக் நிறத்தில் டயல்-வகையில் சுழற்றக்கூடிய சென்டர் கன்சோல் பகுதி காரின் கேபினுக்கு சற்று ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிக்கிறது. ஸ்டீயரிங் சக்கரம், ஏசி வென்ட்கள் மற்றும் கதவு கைப்பிடிகள் ஆகியவற்றில் சில்வர் நிற ஹைலைட்கள் காணப்படுகின்றன.
இந்த எஸ்யூவி காரில் 10.1-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. டொயோட்டா பிராண்டிற்காக யூஸர் இண்டர்ஃபேஸ் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்ட வசதியுடன் எலெக்ட்ரிக் மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய முன் இருக்கைகள், சாய்ந்து கொள்ளக்கூடிய மற்றும் 40:20:40 என்கிற விகிதத்தில் மடிக்கும் வசதி கொண்ட பின் இருக்கைகள் ஆகியவை பயணிகளுக்கு உச்சபட்ச வசதியை வழங்குகின்றன.

பவர்டிரெய்ன் மற்றும் செயல்திறன்: டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா, மாருதி சுஸுகி இவிட்டாராவின் அதே பவர்டிரெய்ன் அமைப்பைக் கொண்டுள்ளது. இது முன் சக்கர இயங்குதலுடன் (Front-Wheel-Drive) 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு LFP பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்பட உள்ளது. இரண்டு பேட்டரி தொகுப்புகளும் பேட்டரி வெப்ப மேலாண்மை அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளன.
49 kWh பேட்டரி அதிகப்பட்சமாக 106 kW (142-144 பிஎச்பி) பவரையும், 189 Nm டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. பெரிய 61 kWh பேட்டரி தொகுப்பு 128 kW (172-174 பிஎச்பி) பவரையும், 189 Nm டார்க் திறனையும் வழங்குகிறது. இந்த எஸ்யூவி ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 543 கி.மீ வரை அதிகப்பட்ச ரேஞ்சை (ARAI ஆய்வின் படி) வழங்குகிறது. இது ஏசி மற்றும் டிசி என இரு ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதிகளையும் ஆதரிக்கிறது.

பிரீமியம் உரிமையாளர் அனுபவம்: பேட்டரிக்கு 8 வருட வாரண்டி மற்றும் மூன்று வருடங்களுக்குப் பிறகு 60% கார் மதிப்பிற்கு உத்தரவாதம் வழங்கப்படுகிறது. மேலும், கார் வாங்குபவர்கள் 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (BaaS) திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இதன் மூலம் பேட்டரி இல்லாமல் காரை வாங்கி, அதற்கு மாதந்தோறும் சந்தா செலுத்தலாம்.
பாதுகாப்பு அம்சங்கள்: இந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் நிலையான 7 ஏர்பேக் சிஸ்டம் உள்ளது. லெவல்-2 அடாஸ் (ADAS) பாதுகாப்பு அம்சங்களான தானியங்கி அவசரகால பிரேக்கிங், லேன் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், ரியர்-கிராஸ் டிராஃபிக் அலர்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்றவையும் இதில் அடங்கும்.

வேரியண்ட்கள் மற்றும் வண்ணங்கள்: புதிய டொயோட்டா அர்பன் க்ரூஸர் எபெல்லா எலக்ட்ரிக் எஸ்யூவி இ1, இ2, இ3 என மூன்று வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இ1 வேரியண்ட் 49 kWh பேட்டரி ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கிறது. அதே நேரத்தில் இ2 மற்றும் இ3 வேரியண்ட்கள் பெரிய 61 kWh பேட்டரியைப் பெறுகின்றன. இந்த கார், ஐந்து மோனோடோன் மற்றும் நான்கு டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், மோனோடோன் வண்ணங்களில் கஃபே ஒயிட், ப்ளூயிஷ் பிளாக், கேமிங் கிரே, ஸ்போர்ட்டின் ரெட் மற்றும் என்டிசிங் சில்வர் ஆகியவை அடங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா தனது முதல் முழு எலெக்ட்ரிக் காராக எபெல்லாவை இந்திய சந்தையில் வெளியீடு செய்துள்ளது. முன்பதிவுகள் (Bookings) இன்று (ஜன.20) முதல் தொடங்கிவிட்டன; ஆர்வமுள்ளவர்கள் ரூ.25,000 முன்பணம் செலுத்தி இந்த எஸ்யூவி காரை முன்பதிவு செய்யலாம். இது ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக், மஹிந்திரா பிஇ 6 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்6 போன்ற போட்டியாளர்களுக்கு இணையாகக் களமிறங்குகிறது. இந்த அறிமுகத்தின் மூலம், டொயோட்டாவின் இந்திய கார்கள் வரிசையில் பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் மாடல்கள் என அனைத்தும் அடங்குகின்றன.


Click it and Unblock the Notifications









