இன்னோவா கிரிஸ்டா விற்பனையை நிறுத்துகிறது டொயோட்டா.. அதுக்கு பதிலா இந்தக் காரைக் கொண்டு வரப் போறாங்க
2016ம் ஆண்டு முதல் இந்திய வாடிக்கையாளர்களிடம் மிகவும் பிரபலமான எம்பிவி கார் மாடலாக இருந்து வருகிறது இன்னோவா கிரிஸ்டா. டீசல் இன்ஜினுடன் விற்பனை கிரிஸ்டா விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 2022ல் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் பவர்ட்ரெயின்கள் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் மாடலையும் விற்பனைக்குக் கொண்டு வந்தது டொயோட்டா.
அப்போது இருந்து இரண்டு கார் மாடல்களுமே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. டொயோட்டாவின் அதிகம் விற்பனை செய்யப்படும் கார் மாடல்களாகவும் இவை இருக்கின்றன. இந்த நிலையில் இன்னோவா கிரிஸ்டா மாடலின் விற்பனை இந்தியாவில் நிறுத்த முடிவெடுத்துள்ளது டொயோட்டா.

இந்தியாவில் தற்போது இரண்டு விதமான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று BS மற்றொன்று CAFE. BS என்பது ஒரு தனி வாகனத்தின் எக்சாஸ்டில் இருந்து வெளியாகும் காற்று மாசு அவைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறையாகும். CAFE என்பது ஒரு நிறுவனம் விற்பனை செய்யும் கார்கள் சராசரியாக எவ்வளவு காற்று மாசுவை வெளிடுகின்றன என்பதனை ஆராய்ந்து, அதனைக் குறைப்பதற்கான நடைமுறைகளை கையாளும் விதிமுறையாகும்.
விரைவில் CAFE 3 விதிமுறைகள் இந்தியாவில் நடைமுறைக்கு வரவிருக்கும் நிலையிலேயே டீசல் இன்ஜின் கொண்ட இன்னோவா கிரிஸ்டாவின் விற்பனை நிறுத்த டொயோட்டா முடிவு செய்துள்ளது. பெட்ரோல் இன்ஜின்களை விட டீசல் இன்ஜின்கள் அதிக காற்று மாசுவை வெளியிடுபவை. டீசல் இன்ஜின் கொண்ட காரின் விற்பனை நிறுத்துவதன் மூலம், தங்களது சராசரி காற்று மாசு வெளியீட்டு அளவை டொயோட்டாவால் குறைக்க முடியும்.

இன்னோவா கிரிஸ்டா பெரும்பாலும் வணிகப் பயன்பாட்டிற்காக, டாக்ஸி உரிமையாளர்கள் அதிகம் விரும்பி வாங்கும் ஒரு கார் மாடலாகவே இருந்து வருகிறது. இன்னோவா ஹைகிராஸ் தனிநபர் பயன்பாட்டிற்கு அதிகம் விரும்பி வாங்கப்படும் கார் மாடலாக இருந்து வருகிறது. கிரிஸ்டாவின் விற்பனையை நிறுத்துவதன் மூலம் டாக்ஸி உரிமையாளர்கள், வணிகப் பயன்பாட்டிற்காக இன்னோவாவை வாங்கும் வாடிக்கையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
எனவே இன்னோவா ஹைகிராஸின் குறைவான விலை கொண்ட மாடலை, இன்னோவா கிரிஸ்டாவிற்கு மாற்றாகக் களமிறக்க டொயோட்டா திட்டமிட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டம் எந்தளவிற்கு நடைமுறையில் சாத்தியமாக இருக்கும் என்பது தான் இங்கே கேள்விக்குறி. அது ஏன் என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.
இன்னோவா கிரிஸ்டாவை வணிகப் பயன்பாட்டு வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று தொடக்க விலை. இன்னோவா கார் மாடல்களிலேயே குறைவான தொடக்க விலையைக் கொண்டிருப்பது டீசல் இன்ஜின் கொண்ட கிரிஸ்டா தான். மற்றொன்று மைலேஜ். பெட்ரோலை விட டீசல் அதிக மைலேஜ் கொடுக்கும் என்பதை நாம் தனியாக சொல்ல வேண்டியதில்லை.
மேலும், பெட்ரோலின் விலையை விட டீசலின் விலை கணிசமான அளவில் குறைவாக இருக்கும் போது பயன்பாட்டுச் செலவையும் அது குறைக்கிறது. இன்னோவா ஹைகிராஸின் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல்களில் வசதிகளைக் குறைத்து கிரிஸ்டாவின் விலைக்கே டொயோட்டாவால் கொடுக்க முடியும். ஆனால் பயன்பாட்டுச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவு கிரிஸ்டா அளவிற்குக் குறைவாக இருக்காது.
மேலும், அதன் 173 hp பவரை வெளிப்படுத்தும், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினானது மிகவும் குறைவாக லிட்டருக்கு 9.7 கிமீ அளவிற்கு மைலேஜையே கொடுக்கிறது. கிரிஸ்டாவின் டீசல் இன்ஜின் அளவிற்கான மைலேஜை ஹைகிராஸின், 184 hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்+ ஹைபிரிட் பவர்ட்ரெயினால் கொடுக்க முடியும். ஆனால் இதன் தொடக்க விலை மிகவும் அதிகம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் மாடலானது ரூ.26.30 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையை அடிப்படையாகவே கொண்டுள்ளது. இது பெட்ரோல் இன்ஜின் ஹைகிராஸை விட சுமார் ரூ.8 லட்சம் அதிகம் என்பது. இன்னோவா கிரிஸ்டாவின் விற்பனை நிறுத்தத்தால் ஒரு பெரிய வெற்றிடம் உருவாகப் போகிறது. அதனை டொயோட்டா எப்படி சமாளிக்கவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








