இந்த மாதமே எத்தனாலில் இயங்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் வருகிறது: கட்காரி!
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 100% எத்தனால் எரிபொருளில் இயங்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் இந்த மாதமே அறிமுகமாக உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஏற்கனவே இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு இந்திய ஆட்டோமொபைல் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல் செலவைக் குறைக்கவும், மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கவும் விரும்புவோருக்கு இந்த புதிய முயற்சி முக்கியமானதாக செய்தியாக இருக்கும்.

மீண்டும் உறுதிப்படுத்திய கட்காரி
டெல்லியில் நடைபெற்ற ENRich 2026 மாநாட்டில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, டொயோட்டாவின் 100% பயோ எத்தனால் எரிபொருளில் இயங்கும் இன்னோவா கார் இந்த நவம்பர் மாதத்திலேயே அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த கார் அறிமுகம் குறித்த தகவல் மீண்டும் உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் மாற்று எரிபொருள் தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் கட்காரி, எத்தனால் பயன்பாடு விவசாயிகளுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் உதவக்கூடியது என வலியுறுத்தி வருகிறார். தற்போது இந்த முயற்சி பயணிகள் கார்களிலும் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
100% எத்தனால்
E100 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய வாகன எரிபொருள் என்பது 100% எத்தனால் கொண்டு இயங்கும் வாகன எரிபொருளை குறிக்கிறது. தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக முழுமையாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்துவது முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாயப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் உயிரி எரிபொருள் வகையை சேர்ந்தது. இதன் பயன்பாடு கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க உதவுவதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருமான வாய்ப்பையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் ஹைகிராஸ்
கடந்த 2023ம் ஆண்டு இன்னோவா ஹைகிராஸ் அடிப்படையிலான எத்தனால் ஹைபிரிட் முன்மாதிரியை டொயோட்டா காட்சிப்படுத்தியது. இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மின்சார மோட்டார் இணைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தொழில்நுட்பம் உற்பத்தி நிலையை எட்டியிருப்பதால் அறிமுகத்திற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், 100% எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு எஞ்சின், எரிபொருள் டேங்க், எரிபொருள் செல்லும் குழாய்கள் மற்றும் சில முக்கிய பாகங்களில் மாற்றங்கள் அவசியமாக உள்ளது. எனவே, சாதாரண இன்னோவா ஹைகிராஸ் காரில் எத்தனால் எரிபொருளை நேரடியாக நிரப்ப முடியாது. இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மாடல்தான் எத்தனாலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
விற்பனை எப்போது?
இந்த புதிய எத்தனால் இன்னோவா ஹைகிராஸ் காரின் விலை, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் விற்பனை தொடங்கும் தேதி குறித்து டொயோட்டா இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேநேரத்தில் வரும் 25 அல்லது 26ந் தேதி இந்த 100 சதவீத எத்தனாலில் இயங்கும் ஹைகிராஸ் கார் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுடன், இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அறிமுகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய வசதிகள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்களுடன் இந்த மாடல் வரலாம்.


Click it and Unblock the Notifications


