நவ. 25ல் புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!
இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்ற பிரீமியம் எம்பிவி கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova HyCross) இருக்கிறது. குடும்பப் பயணங்களுக்கும், நீண்ட தூரப் பயணங்களுக்கும் ஏற்ற காராக இது விளங்குகிறது. இந்நிலையில், இந்த காரின் புதுப்பிக்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த டொயோட்டா நிறுவனம் தயாராகியுள்ளது.
இதற்கான முதல் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 25ம் தேதி இந்தியாவில் புதிய இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பு மாற்றங்கள் மட்டுமின்றி, அதிக தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற உள்ளது. குறிப்பாக, ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஹைபிரிட் தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்படும் என்ற தகவலால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

புதிய டிசைனில் ஹைகிராஸ்
டீசரில் காரின் முன்பக்க ஹெட்லைட் அமைப்பு ஓரளவிற்குத் தெளிவாகக் காட்சியளிக்கிறது. தற்போதைய மாடலை விட வித்தியாசமான வடிவமைப்பில் புதிய எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, டொயோட்டா டெய்சர் காரில் இடம்பெற்றுள்ளதைப் போன்ற பகல்நேர விளக்குகள் புதிய மாடலிலும் இடம்பெற வாய்ப்புள்ளது.
இதுதவிர, முன்பக்க கிரில் அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய வடிவமைப்பில் பம்பர் வழங்கப்படலாம். பின்பக்கத்திலும் மாற்றியமைக்கப்பட்ட எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெறலாம். புதிய அலாய் வீல் வடிவமைப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பனி விளக்குகள் அமைப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. இருப்பினும், காரின் ஒட்டுமொத்த தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது.
புதிய வசதிகள்
புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் உட்புறத்திலும் சில முக்கியமான மாற்றங்கள் இடம்பெற உள்ளது. தற்போதைய மாடலில் உயர்நிலை வேரியண்ட்டுகளில் 10.1 இன்ச் தொடுதிரை வழங்கப்படுகிறது. இதற்குப் பதிலாக, புதிய மாடலில் 12.3 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு வழங்கப்படும்.
மேலும், ஹைபிரிட் வேரியண்ட்டுகளில் 12.3 இன்ச் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இடம்பெறும் என தெரிகிறது. புதிய இருக்கை வடிவமைப்பு, உட்புற வண்ண மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் மென்பொருள் ஆகியவையும் எதிர்பார்க்கப்படுகின்றன. தவிரவும், 360 டிகிரி கேமரா மற்றும் அடாஸ் பாதுகாப்பு வசதிகளிலும் சில மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இடம்பெறலாம்.
E85 ஃப்ளெக்ஸ் ஃபியூயல் மாடல்
இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அதிகம் கவனம் ஈர்க்கும் விஷயமாக ஃப்ளெக்ஸ் ஃபியூயல் தொழில்நுட்பம் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வெளியானத் தகவல்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. டொயோட்டா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் E85 எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கக்கூடிய இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் முன்மாதிரி காரை அறிமுகப்படுத்தியிருந்தது.
இதில் பெட்ரோலுடன் 85 சதவீதம் வரை எத்தனால் கலந்து பயன்படுத்த முடியும். இதற்காக எஞ்சின் மற்றும் எரிபொருள் அமைப்புகளில் பிரத்யேக மாற்றங்கள் தேவைப்படும். இந்த தொழில்நுட்பம் தயாரிப்பு நிலைக்கு வந்தால், இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூயல் ஸ்ட்ராங் ஹைபிரிட் பயணிகள் காராக இன்னோவா ஹைகிராஸ் உருவெடுக்கும்.
இருப்பினும், நவம்பர் 25ம் தேதி அறிமுகமாகும் காரிலேயே E85 தொழில்நுட்பம் வழங்கப்படுமா அல்லது பின்னர் அறிமுகப்படுத்தப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதுகுறித்து டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. எனவே, அறிமுக நிகழ்ச்சியின்போதுதான் முழுமையான விபரங்கள் தெரியவரும்.
எஞ்சின் ஆப்ஷன்கள்
தற்போதைய மாடலில் வழங்கப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் எஞ்சின் ஆகியவை புதிய மாடலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சின் சிவிடி கியர்பாக்ஸுடனும், ஹைபிரிட் எஞ்சின் இ-சிவிடி கியர்பாக்ஸுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் எஞ்சின் 170 எச்பி பவரையும், ஸ்ட்ராங் ஹைபிரிட் அமைப்பு ஒருங்கிணைந்த முறையில் சுமார் 181 எச்பி பவரையும் வழங்குகிறது. தற்போதைய ஹைபிரிட் மாடல் லிட்டருக்கு 23.24 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக நிறுவனம் தெரிவிக்கிறது. புதிய மாடலின் மைலேஜ் இதனை ஒட்டியதாகவே இருக்கும் வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கும் விலை
தற்போதைய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் கார் ரூ.19.53 லட்சம் முதல் ரூ.32.95 லட்சம் வரை விலையில் விற்பனையில் உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய வசதிகள் சேர்க்கப்படுவதால் விலையில் சிறிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலின் ஆரம்ப விலை சுமார் ரூ.20 லட்சமாக இருக்கும் என தெரிகிறது. அதிகபட்ச எக்ஸ்ஷோரூம் விலை ரூ.34 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications


