இன்னும் சரியா ஒரு மாசத்துல.. அறிமுகமாகிறது டொயோட்டா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட்! இந்தியாவின் முதல் E100 கார்?
இந்தியாவில் குடும்பப் பயன்பாட்டுக்கான பிரீமியம் கார்களை வாங்க நினைப்பவர்களின் முக்கியத் தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Toyota Innova Hycross) காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வரும் நவம்பர் 26ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, காரின் வெளிப்புறத் தோற்றம் மற்றும் உட்புற வசதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மேலும், இந்தியாவின் முதல் E100 எரிபொருளுக்கு இணக்கமான மாடலாகவும் வர இருக்கிறது.
தற்போது விற்பனையில் இருக்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் முதல்முறையாக பல்வேறு மாற்றங்கள் மற்றும் கூடுதல் அம்சங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் வாடிக்கையாளர் மத்தியிலும் அதிக ஆவல் இருந்து வருகிறது. இந்தியச் சாலைகளில் இந்த கார் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எஸ்யூவி தோற்றம்?
புதிய இன்னோவா ஹைகிராஸ் காரில் முன்பக்க வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புதிய தலைமுறை டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux) பிக்கப் டிரக்கின் வடிவமைப்பு தாத்பரியங்களுடன், அதிக கம்பீரமான முன்பக்க தோற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலில் இருக்கும் கிரில் மாற்றப்பட்டு, பெரிய செவ்வக வடிவ கிரில் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதனுடன், புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய பம்பர் வடிவமைப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பனி விளக்குகள் அமைப்பு ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம். காரின் பக்கவாட்டுத் தோற்றத்திலும் அலாய் வீல்களின் வடிவமைப்பிலும் மாற்றங்கள் இடம்பெறும். பின்புறத்தில் டெயில் லைட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பம்பரில் சில திருத்தங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், காரின் ஒட்டுமொத்த அளவு மற்றும் அடிப்படை வடிவமைப்பு பெரும்பாலும் மாற்றம் இருக்காது.
பெரிய டச் ஸ்கிரீன்
புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் கேபினிலும் சில முக்கியமான அப்டேட்டுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போதைய மாடலில் உயர்நிலை வேரியண்ட்டுகளில் 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட மாடலில் இதைவிடப் பெரிய, அகலமான தொடுதிரை வழங்கப்படலாம். இது சுமார் 12.3 அங்குல அளவில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஹைபிரிட் வேரியண்ட்டுகளில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதிகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் இடம்பெற வாய்ப்புள்ளது. முன்பக்க இருக்கைகளில் வென்டிலேஷன் வசதி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் இருக்கைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேபின் அலங்கார அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
எஞ்சின் விபரம்
இது ஃபேஸ்லிஃப்ட் மாடலாக வருவதால் எஞ்சின் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய இன்னோவா ஹைகிராஸ் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் ஸ்ட்ராங் ஹைபிரிட் பவர்டிரெயின் என இரண்டு தேர்வுகள் உள்ளன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 173 எச்பி பவரையும், 204 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ராங் ஹைபிரிட் மாடலில் பெட்ரோல் எஞ்சினுடன் மின்சார மோட்டாரும் இணைந்து செயல்படுகிறது. இந்த அமைப்பு 184 எச்பி ஒருங்கிணைந்த பவரை வழங்குகிறது. இதில் இ-சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறுகிறது. புதுப்பிக்கப்பட்ட மாடலிலும் இதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் தொடரலாம்.
E100 எரிபொருளில் ஓடுமா?
புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலுடன் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் தொழில்நுட்பத்தையும் டொயோட்டா அறிமுகப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, பெட்ரோலுடன் அதிக அளவு எத்தனால் கலந்த எரிபொருளைப் பயன்படுத்தக்கூடிய E85 ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் ஹைபிரிட் மாடல் அறிமுகமாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாடல் அறிமுகமானால், இந்தியாவில் மாற்று எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் கார்களின் வளர்ச்சியில் முக்கியமான விஷயமாக இருக்கும். மேலும், E85 தவிர்த்து,100 சதவீத எத்தனாலில் இயங்கும் E100 எரிபொருளிலும் இயங்கும் மாடலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இந்த ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடல் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
புதிய இன்னோவா ஹைகிராஸ் காரின் வலிமையே அதன் விசாலமான கேபின், குடும்பப் பயன்பாட்டுக்கு ஏற்ற வசதிகள் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பமாக உள்ளன. எனவே, புதிய தோற்றத்துடன் பெரிய திரை மற்றும் கூடுதல் வசதிகளையும் டொயோட்டா இந்த காரில் வழங்கும்போது மேலும் மதிப்புமிக்க மாடலாக மாறும். அதற்கு தக்கவாறு விலையும் அதிகரிக்கப்படும். ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் மாடலும் வந்தால், அது இந்த ரக கார்களுக்கான வரவேற்பையும், முக்கியத்துவத்தையும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications


