மாருதியை காப்பியடித்து கார்களை இறக்கிய கார் கம்பெனிக்கு கொட்டும் லாபம்! வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்குது
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனம் கடந்த 1 வருடத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவில் டொயோட்டாவின் வழக்கமான விற்பனையை விட அதிகமா அல்லது குறைவா என்பதையும், கடந்த மார்ச் மாதத்தில் டொயோட்டா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
ஜப்பானை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா இந்திய கார் சந்தையில் கிட்டத்தட்ட கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும், ஆரம்ப காலக்கட்டத்தில் இந்திய சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க போராடி வந்த டொயோட்டா நிறுவனம், கடந்த சில வருடங்களாக விற்பனையில் கவனிக்கத்தக்க முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

இதற்கு முக்கிய காரணம், மாருதி சுஸுகி (Maruti Suzuki) என சொன்னால் அது மிகையில்லை. இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகியின் கார்களின் அடிப்படையில் தனது கார்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்தது, டொயோட்டாவின் விற்பனையில் நேரடியாக எதிரொலித்தது. மாருதி சுஸுகி கார்களை வாங்க திட்டமிடுபவர்களில் சிலர் டொயோட்டாவின் பக்கம் செல்கின்றனர்.
அத்துடன், இன்னோவா (Innova), ஃபார்ச்சூனர் (Fortuner) போன்ற உலகளவில் பிரபலமான கார்களை விற்பனை செய்வதன் மூலமாக கடந்த ஒரு வருட காலத்தில் மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், 2025 ஏப்ரல்- 2025 மார்ச் வரையிலான ஒரு வருட காலத்தில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 81 கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது.

இது 2024 ஏப்ரல்- 2025 மார்ச் வரையில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கார்களின் எண்ணிக்கையான 3 லட்சத்து 37 ஆயிரத்து 148 யூனிட்களை விட 20% அதிகமாகும். இந்த 4,06,081 டொயோட்டா கார்களில் 3 லட்சத்து 67 ஆயிரத்து 107 கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை மற்றும் 38 ஆயிரத்து 974 கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும்.
| Sales in units | FY 2025-26 | FY 2024-25 | Growth |
| Domestic | 3,67,107 | 3,09,508 | 19% |
| Export | 38,974 | 27,640 | 41% |
| Total | 4,06,081 | 3,37,148 | 20% |
அதுவே, 2024 ஏப்ரல்- 2025 மார்ச் வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் 27,640 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும், 3 லட்சத்து 9 ஆயிரத்து 508 கார்களை மட்டுமே இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்தும் இருந்தது. இந்த வகையில் பார்த்தால், முந்தைய ஆண்டை விட கடந்த ஒரு வருடத்தில் டொயோட்டாவின் வெளிநாட்டு ஏற்றுமதி 41 சதவீதமும், உள்நாட்டு விற்பனை 19 சதவீதமும் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் டொயோட்டா 3,09,508 கார்களை விற்பனை செய்துள்ள நிலையில், சராசரியாக ஒவ்வொரு மாதமும் 25,792 டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2026 மார்ச் மாதத்தில் 35 ஆயிரத்து 125 கார்களை இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்துள்ளது. இது இல்லாமல், கடந்த மாதத்தில் 2,069 கார்களை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
| Sales in units | Mar'26 | Mar'25 | Growth |
| Domestic | 35,125 | 28,373 | 24% |
| Export | 2,069 | 1,670 | 24% |
| Total | 37,194 | 30,043 | 24% |
ஆக மொத்தமாக, கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 37 ஆயிரத்து 194 கார்கள் டொயோட்டா கிரிலோஸ்கர் மோட்டார் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 43 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது. ஏனெனில் அந்த மாதத்தில் உள்நாட்டில் 28,373 டொயோட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், 1,670 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி அளவிற்கு டொயோட்டா கார்கள் விற்பனை இல்லையென்றாலும், டொயோட்டா பிராண்டிற்கு என்று இந்தியாவிலும் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர்களது இலக்கு இன்னோவா, ஃபார்ச்சூனர் கார்கள் தான் என்றாலும், அதிகப்படியான விலையால் அவற்றை வாங்க முடியாத பட்சத்தில் அவர்கள் மற்ற டொயோட்டா கார்களை வாங்குகின்றனர். அதன் எதிரொலியாகவே கடந்த ஒரு வருடத்தில் டொயோட்டா கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இது வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








