ரெட்ரோ டிசைனுடன் விற்பனைக்கு வந்தது டொயோட்டாவின் லேண்டு க்ரூஸர் 70 சீரிஸ்
எத்தனை புதிய கார் புதிய புதிய டிசைன்களில் வந்தாலும், 2000-களுக்கு முன்பிருந்த ரெட்ரோ டிசைனின் அழகே தனி தான். 2000-களுக்கு முன்பிருந்தே விற்பனையில் இருக்கும் நிறைய கார்கள் உலகமெங்கும் இருக்கின்றன. ஆனால் அவை தற்போதைய பயன்பாட்டிற்கும், சந்தைக்கும் ஏற்ற வகையில் மாடர்ன் வடிவங்களைப் பெற்றுவிட்டன.
ஆனால், டொயோட்டா நிறுவனங்கள் தங்களின் ஒரு கார் மாடலை மட்டும் ரெட்ரோ டிசைனை மாற்றாமல் அப்படியே தற்போது வரை மெயின்மென்ட் செய்து வருகிறது. அப்படியான ஒரு மாடல் தான் டொயோட்டாவின் லேண்டு க்ரூஸர் 70 சீரிஸ். பிக்-அப், வேகன் மற்றும் ட்ரூப் கேரியர் எனப் பல்வேறு வகைகளில் இந்தக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1984ம் ஆண்டில் இருந்து இந்தக் காரை உலகமெங்கும் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா.

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக 70 சீரிஸ் கார்கள் இருக்கின்றன. அதற்கு அதன் ரெட்ரோ டிசைன் மட்டும் முக்கிய காரணம் அல்ல, இப்போதும் இந்த 70 சீரிஸ் கொடுக்கும் அளவிற்கு பயன்பாட்டை வேறு எந்தக் காராலும் ஈடு செய்ய முடியவில்லை என்பது தான். கடந்தாண்டு இந்த 70 சீரிஸுக்கான முன்பதிவை டொயோட்டா அந்நாட்டில் நிறுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லேண்டு க்ரூஸர் 70 சீரிஸில், 4.5 லிட்டர், டர்போ டீசல், V8 இன்ஜின் பயன்படுத்தப்பட்டு வந்தது. கடுமையாக்கப்பட்டு வரும் மாசுக் கட்டுபாட்டு விதிமுறைகளின் காரணமாக இதற்கு மாற்றாக தற்போது 2.8 லிட்டர், 4 சிலிண்டர், டீசல் இன்ஜின் இந்தக் காரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஃபார்ச்சூனர் மற்றும் ஹைலக்ஸ் கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே டீசல் இன்ஜின் தான்.

இந்த இன்ஜினும் தற்போது மேம்படுத்தப்பட்டிருக்கும் யூரோ 6d மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் இருப்பதை உறுதிசெய்ய சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்ஜினிலேயே மாற்றம் செய்யப்படவில்லை. மாறாக காற்று மாசுவைக் குறைக்க சில மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிய 70 சீரிஸில் 20 லிட்டர் ஆட்ப்ளூ (Adblue) டேங்க் தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் யூரிலா மற்றும் அயோனைஸ்டு தண்ணீக் கலந்த கலவை இருக்கும். இதனை எக்சாஸ்ட் ஸ்ட்ரீமில் இன்ஜெக்ட் செய்வதன் மூலம் நைட்ரஜன் ஆக்ஸைடு மாசுவைக் கட்டுப்படுத்த வழிவகை செய்கிறது. இதன் மூலம் இன்ஜினில் மாற்றம் செய்யாமலேயே, தொடர்ந்து டீசல் இன்ஜின் பயன்பாட்டைக் கொடுக்க முடிகிறது. இன்ஜின் ஆயில் போல, இந்த ஆட்ப்ளூவையும் அவ்வப்போது நாம் நிரப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதால் பவர் மற்றும் டார்க அளவுகளில் மாற்றமில்லை. அதே 201 hp பவர் மற்றும் 500 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனையே 2.8 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. ஆனால் இந்த இன்ஜினுடன் தற்போது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களின் விற்பனையை டொயோட்டா மறுபடியும் இன்னும் தொடங்கவில்லை.
லேண்டு க்ரூஸர் 70 சீரிஸின் அனைத்து வகையான பிக்-அப் ட்ரக் மற்றும் கார்களையுமே தற்போது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் மட்டுமே வாங்கலாம். மேனுவல் கியர்பாக்ஸ் மீண்டும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது. இந்த 70 சீரிஸ் ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்கள் ஆஸ்தான சாய்ஸாக மீண்டும் மாறும் என நம்புகிறது டொயோட்டா.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது போன்ற மாட்னான ரெட்ரோ கார்கள் தற்போது உலகளவில் விற்பனையில் இருப்பது குறைவு தான். இந்தியாவில் இது போன்ற ஒரு காரை கண்டிப்பாக நாம் எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை. எனினும் இதுபோன்ற காரின் டிசைனை பல ஆண்டுகளாக ரெட்ரோ வடிவம் மாறாமல் பாதுகாத்து வருவதற்காக டொயோட்டாவை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications