இந்தியாவில் புதிய 7 சீட்டர் எஸ்யூவியை வெளியிடும் டொயோட்டா
இந்தியாவில் புதிய எஸ்யூவி ஒன்றை வெளியிடவுள்ளது டொயோட்டா. ஆம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியாவில் புதிய எஸ்யூவி ஒன்றை வெளியிட முயற்சி செய்தது அந்நிறுவனம். ஆனால் பல்வேறு காரணங்களினால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அந்தத் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது டொயோட்டா.
சர்வதேச அளவில் கொரெல்லா கிராஸ் (Corolla Cross) என்ற எஸ்யூவி ஒன்றை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. அது 5 சீட்டர் வடிவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் நீட்டிக்கப்பட்ட 7 சீட்டர் வடிவத்தை '340 D' என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கி வந்தது டொயோட்டா. இந்தியாவிற்காகவே இந்த 7 சீட்டர் வடிவத்தை டொயோட்டா உருவாக்கத் தொடங்கியது.

ஆனால், அப்போது இந்தியாவில் டொயோட்டாவினால் புதிய எஸ்யூவியை தயாரிக்கும் அளவிற்கு திறனில்லாமல் இருந்தது. டொயோட்டாவின் மற்ற கார் மாடல்களே அனைத்து தயாரிப்பு ஆலைகளையும் ஆக்கிரமித்திருந்தன. இதற்காக தொழிற்சாலையை மேம்படுத்தவும் திட்டமிட்டது டொயோட்டா. ஆனால் போதுமான அளவில் விற்பனையாகுமா என்ற சந்தேகம் எழவே, இந்தத் திட்டத்தை மொத்தமாகக் கைவிட்டது.
இந்த நிலையில் தான் மீண்டும் இந்தத் திட்டத்தை டொயோட்டா கையிலெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜி நகரில் (முன்னதாக அவுரங்காபாத்) புதிய தொழிற்சாலை ஒன்றைக் கட்டமைத்து வருகிறது டொயோட்டா. ஆண்டுக்கு 1 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனுடன் இந்தப் புதிய தொழிற்சாலை தயாராகி வருகிறது. இந்தத் தொழிற்சாலையிலேயே புதிய எஸ்யூவியை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது டொயோட்டா.

கொரொல்லா கிராஸ் எஸ்யூவின் 7 சீட்டர் வடிவமாகவே இந்தப் புதிய எஸ்யூவி இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்தத் தொழிற்சாலையை டொயோட்டா பயன்படுத்தவுள்ளதாகத் தகவல். கொரொல்லா கிராஸ் எஸ்யூவியை 5 சீட்டர் வடிவிலும் டொயோட்டா இந்தியாவில் வெளியிடலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
2029ம் ஆண்டு தொடக்கத்திலேயே மேற்கூறிய டொயோட்டா தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனையொட்டியே புதிய டொயோட்டா எஸ்யூவியின் வெளியீடும் இருக்கும் எனத் தெரிகிறது. இன்னும் மூன்றாண்டுகள் இருக்கும் நிலையில், வெளியீடு நெருங்கும் போது தான் எந்த எஸ்யூவியை, என்ன விதமான அம்சங்களுடன் டொயோட்டா திட்டமிட்டுள்ளது என்பது குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும்.
அனைத்து வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களையும் கொண்ட ப்ரீமியமான எஸ்யூவியாகவே கொரெல்லா கிராஸ் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவியில் 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் + ஹைபிரிட் என இரண்டு விதமான பவர்ட்ரெயின் தேர்வுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
2028ல் கொரொல்லா கிராஸின் இரண்டாம் தலைமுறை வெர்ஷனே சர்வதேச அளவில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய மாடலும் அந்தப் புதிய வெர்ஷனை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திரா XUV 7XO, டாடா சஃபாரி உள்ளிட்ட 7 சீட்டர் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக புதிய டொயோட்டா 7 சீட்டர் எஸ்யூவி இருக்கும் எனத் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு புதிய கார்கள் மற்றும் அப்டேட்களைத் திட்டமிட்டுள்ளது டொயோட்டா. அதில் ஒன்றாக இந்த கொரொல்லா கிராஸ் எஸ்யூவியும் இருக்கும். நாம் எதிர்பார்ப்பதை விட சற்று கூடுதல் விலையிலேயே இந்தப் புதிய டொயோட்டா எஸ்யூவி வெளியாகும் எனத் தெரிகிறது. 7 சீட்டர் எஸ்யூவிக்களுக்கு முன்பை விட இப்போது வாடிக்கையாளர்களிடையே ஆர்வம் அதிகரித்திருக்கும் நிலையில், அவர்களுக்குக் கூடுதல் தேர்வை வழங்கும் பொருட்டு புதிய காரை டொயோட்டா வெளியிடுகிறது.


Click it and Unblock the Notifications