மஹிந்திரா தாருக்கு விபூதி அடிக்கப் போகும் புதிய டொயோட்டா எஸ்யூவி இது தான்
இந்தியாவில் அதிகளவிலான கார்களை விற்பனை செய்யவில்லை என்றாலும் டொயோட்டாவின் (Toyota) எம்பிவி மற்றும் எஸ்யூவிக்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகளவிலான கார்களை விற்பனை செய்வது மாருதி சுஸூகி தான். அதனைத் தொடர்ந்து மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் 25,000 கார்கள முதல் 40,000 கார்கள் வரையிலான விற்பனையுடன் ஐந்தாம் இடத்திற்கு கியாவுடன் போட்டியிட்டு வருகிறது டொயோட்டா.
இந்த நிலையில் இந்தியாவில் தங்களின் விற்பனையை அதிகரிக்க புதிய எஸ்யூவி ஒன்றை வெளியிடவிருப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது டொயோட்டா. ஆனால் அந்த எஸ்யூவி அடுத்த சில வருடங்களுக்கு இந்தியவில் வெளியாகாது. ஆம், 2029ம் ஆண்டின் முதல் பாதியிலேயே இந்தப் புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் புதிய எஸ்யூவி குறித்த தகவல்கள் எதையும் அதிகார்பூர்வமாக டொயோட்டா பகிர்ந்து கொள்ளவில்லை.

எனினும் அந்நிறுவனம் இந்தியாவில் வெளியிடும் இந்தப் புதிய எஸ்யூவி எதுவாக இருக்கலாம் என்பது குறித்த தகவல்கள் வெளியே கசிந்திருக்கின்றன. அதன்படி 2025ம் ஆண்டு ஜப்பான மொபிலிட்டி ஷோவில் டொயோட்டா புதிதாக அறிமுகப்படுத்திய லேண்டு க்ரூஸர் FJ (Land Cruiser FJ) என்ற எஸ்யூவி மாடலையே இந்தியாவில் 2029ல் அந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த எஸ்யூவி மாடலானது FJ க்ரூஸர் (FJ Cruiser) எனவும் அழைக்கப்படுகிறது.
டொயோட்டாவின் லேண்டு க்ரூஸர் கார்களிலேயே மிகவும் விலை குறைவானதாக இந்த லேண்டு க்ரூஸர் FJ இருக்கும் எனக் கூறப்படுகிறது. லேண்டு க்ரூஸர் எஸ்யூவிக்களுடன் ஒப்பிடும் போது மிகவும் காம்பேக்டான காராக, அதே நேரம் அனைத்து வகையான ஆஃப்-ரோடிங் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த காராக இந்த FJ க்ரூஸர் இருக்கும்.

4.57 மீ நீளத்தில் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட எஸ்யூவிக்களுக்கும் டாடா ஹேரியர், மஹிந்திரா XUV 7XO உள்ளிட்ட எஸ்யூவிக்களுக்கும் இடைப்பட்ட அளவில் FJ க்ரூஸர் இருக்கிறது. மிகவும் ஷார்ட்டான வீல்பேஸ் மற்றும் காம்பேக்டான காராக இதனை டொயோட்டா வடிவமைத்திருப்பதால் மற்ற பெரிய ஆஃப்-ரோடிங் கார்களை விட சிறப்பான ஆஃப்-ரோடிங் எஸ்யூவியாக இந்த லேண்டு க்ரூஸர் FJ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகவில் பெட்ரோல், ஸ்ட்ராங் ஹைபிரிட், பிளக்-இன் ஹைபிரிட் உள்ளிட்ட பல்வேறு பவர்ட்ரெயின் தேர்வுகளை டொயோட்டா இந்த FJ க்ரூஸருக்குக் கொடுக்கலாம். இந்தியாவில் ஃபார்ச்சூனர், ஹைலக்ஸ் மற்றும் இன்னோவா கிரிஸ்டா ஆகிய கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வே FJ க்ரூஸரிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட கார்களுக்குப் பயன்படுத்தப்படும் அதே IMV லேடார் ஃபிரேம் பிளாட்ஃபார்மிலேயே FJ க்ரூஸர் காரையும் டொயோட்டா உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கர்நாடகாவின் பிடாடியில் டொயோட்டாவின் இரண்டு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மூன்றாவதாக மகாராஷ்டிராவின் சத்ரபதி சிவாஜி சாம்பாஜிநகரில் புதிய தொழிற்சாலையை அமைக்க டொயோட்டா திட்டமிட்டு வருகிறது. 2029ன் முதல் பாதியிலேயே இந்தத் தொழிற்சாலை செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. இந்த தொழிற்சாலையிலேயே புதிய லேண்டு க்ரூஸர் எஸ்யூவியைத் தயாரிக்கவும் டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கான கார்களை மட்டுமின்றி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கான கார்களையும் இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்க டொயோட்டா திட்டமிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லேண்டு க்ரூஸர் FJ அல்லது FJ க்ரூஸர் என அழைக்கப்படும் எஸ்யூவி மாடலை இந்தியாவில் டொயோட்டா வெளியிடவிருப்பதாக கடந்த சில காலமாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன. ப்ரீமியமான எஸ்யூவிக்களுடன் ஒப்பிடும் போது டொயோட்டாவின் எஸ்யூவிக்கள் இந்தியாவில் நன்றாகவே விற்பனையாகி வருகின்றன. எனவே ப்ரீமியமான அம்சங்களுடன் ஃபார்ச்சூனரை விட சற்று குறைவான விலையில் இந்தப் புதிய காரை டொயோட்டா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications