மக்களிடம் வாங்கிய காசை வட்டியுடன் திருப்பி தரும் டொயோட்டா! கரண்ட் ஷாக் அடித்த நிலையில் டீலர்கள்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா (Toyota Urban Cruiser Ebella), கடந்த ஜனவரி மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதுதான் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.
பொது பார்வைக்கு கொண்டு வந்த உடனே, அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளையும் டொயோட்டா நிறுவனம் உடனடியாக தொடங்கியது. இந்த கார் நடப்பு 2026ம் ஆண்டின் 2வது பாதியில், அதாவது ஜூன்-டிசம்பர் காலகட்டத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல், இந்திய வாடிக்கையாளர்களுக்கு உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தை டொயோட்டா நிறுவனம் கை விட்டு விட்டது என்பதுதான் அந்த அதிர்ச்சிகரமான தகவல் ஆகும்.
vivekji05 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வைரல் வீடியோவில் பேசும் நபர்தான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா காரின் இந்திய அறிமுகம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த வீடியோவில் அவர் பேசியிருப்பது பின்வருமாறு:

டொயோட்டா நிறுவனம் செய்த மிகப்பெரிய தவறாக இபெல்லா இருக்கிறது. பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே, டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் பெற்ற முன்பதிவு தொகையை, வட்டியுடன் சேர்த்து திருப்பி அளிக்கும்படி, டீலர்களுக்கு டொயோட்டா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அர்பன் க்ரூஸர் இபெல்லா காரின் அறிமுகத்திற்காக, சேல்ஸ், சர்வீஸ் மற்றும் சார்ஜிங் நெட்வொர்க் போன்ற அம்சங்களில் டீலர்கள் செய்த முதலீட்டு தொகையை திருப்பி வழங்கவும் டொயோட்டா நிறுவனம் முன்வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா காரின் அறிமுகத்திற்காக காத்து கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால் டொயோட்டா நிறுவனம் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஒருவேளை டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா காரின் அறிமுகம் ரத்து செய்யப்பட்டது உண்மை என்றால், அதற்கு ஒரு சில காரணங்கள் இருக்கலாம்.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ விட்டாரா (Maruti Suzuki e Vitara), சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன் டொயோட்டா வெர்ஷன்தான், அர்பன் க்ரூஸர் இபெல்லா. டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்களுக்கு இடையே கூட்டணி இருந்து வருவதால், அவை தங்களுக்குள் கார்களை பரிமாறி கொள்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
சரி, இதற்கும், டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா காரின் அறிமுகம் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கும் என்ன தொடர்பு? என நீங்கள் கேட்பது புரிகிறது. இந்திய சந்தையில் மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம்தான் மாருதி சுஸுகி இ விட்டாராவின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்பட்டன.
அந்த மாதத்தில் வெறும் 230 மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதை தொடர்ந்து வந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் முறையே வெறும் 1,200 மற்றும் 1,231 மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. மாருதி சுஸுகி இ விட்டாராவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்பதை இந்த சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
எனவேதான் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் இபெல்லா காரின் அறிமுகத்தை ரத்து செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து கார்டாக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காரை விட, அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காருக்கு அதிகமான விலையை நிர்ணயம் செய்தாக வேண்டிய சூழலில் டொயோட்டா நிறுவனம் உள்ளது.
மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் காருக்கே வரவேற்பு கிடைக்காத நிலையில், அதை விட அதிக விலையில் வரும் அர்பன் க்ரூஸர் இபெல்லா காருக்கு எப்படி வரவேற்பு கிடைக்கும்? என டொயோட்டா நிறுவனம் கருதியிருக்கலாம். இதன் காரணமாக அதன் இந்திய அறிமுகத்தை ரத்து செய்திருக்கலாம். இருப்பினும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் வரை நாம் காத்திருப்பது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா அர்பன் க்ரூஸர் இபெல்லா எலெக்ட்ரிக் காரின் அறிமுகத்திற்காக காத்து கொண்டிருந்த இந்திய வாடிக்கையாளர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள தகவல் நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கும். இந்திய சந்தையில் தற்போதைக்கு எலெக்ட்ரிக் கார்களை காட்டிலும், ஹைப்ரிட் கார்களில் (Hybrid Cars) கவனம் செலுத்துவது சிறந்தது என்ற முடிவை கூட டொயோட்டா நிறுவனம் எடுத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications