28 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா கார்! போட்டி நிறுவனங்கள் மிரளும் அளவுக்கு வித்துட்டு இருக்கு!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) காரின் உடன்பிறப்பான டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி பார்த்தால், நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் 8,664 அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்களை டொயோட்டா விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 14.4 சதவீத வளர்ச்சியாகும். இதன் மூலம் நடப்பு 2026ம் ஆண்டு மே மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியலில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 7வது இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் முதல் 6 இடங்களில் முறையே மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV 7XO) ஆகிய கார்கள் உள்ளன.
இந்த வரிசையில் 7வது இடம் பிடித்துள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் 3 வெர்ஷன்களில் கிடைத்து வருகிறது. இதில், பெட்ரோல் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 18.92 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.

மறுபக்கம் சிஎன்ஜி வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 13.38 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 15.34 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. அதே நேரத்தில் ஹைப்ரிட் வெர்ஷனின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 16.77 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 20.19 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.
இவை டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும். டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் 3 வெர்ஷன்களிலும் 1.5 லிட்டர் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் 2 வீல் டிரைவ்/5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடலானது ஒரு லிட்டருக்கு 21.12 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது.
மறுபக்கம் இதே இன்ஜினின் 2 வீல் டிரைவ்/6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலானது ஒரு லிட்டருக்கு 20.58 கிலோ மீட்டர் மைலேஜையும், ஆல் வீல் டிரைவ்/5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடலானது ஒரு லிட்டருக்கு 19.39 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்க கூடியவையாக இருக்கின்றன.
அதே நேரத்தில் இந்த காரின் 1.5 லிட்டர் சிஎன்ஜி இன்ஜினின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடலானது ஒரு கிலோவிற்கு 26.60 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்க கூடியதாக உள்ளது. இவை எல்லாவற்றையும் விட அதிக மைலேஜ் வேண்டும் என நீங்கள் நினைத்தால், இந்த காரின் 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இ-டிரைவ் மாடலை தேர்வு செய்யலாம்.
ஏனெனில் அதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் ஆகும். இவை அனைத்துமே டொயோட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும் அராய் மைலேஜ் (ARAI Mileage) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சரியான விலை நிர்ணயம் மற்றும் சிறப்பான மைலேஜ் ஆகிய சிறப்பம்சங்களுடன், அதிநவீன வசதிகளிலும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் அசத்துகிறது.
பனரோமிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்றவை எல்லாம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் தற்போதைய நிலையில் 5 சீட்டர் மாடலில் மட்டுமே கிடைத்து வருகிறது. ஆனால் டொயோட்டா நிறுவனம் இதன் 7 சீட்டர் மாடலையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 7 சீட்டர் மாடல் வந்தால், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications