பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இந்த டொயோட்டா கார்... ஊர்ல இருக்குற எல்லா விஐபி கிட்டயும் இருக்கு!
டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த காரான வெல்ஃபையரின் விற்பனை எண்ணிக்கை இந்தியாவில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு இந்த சாதனையை டொயோட்டா நிகழ்த்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
அளவில் பிரம்மாண்டமான MPV வகை கார்களை லக்சரியான தரத்தில் வாங்குவதற்கு பணக்காரர்கள் விரும்புகின்றனர். இதனாலேயே அவ்வாறான எம்பிவி கார் மாடலை இந்தியாவில் பல கார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. அவற்றுள் ஒரு நிறுவனம் தான், டொயோட்டா ஆகும். ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் அதன் பிரபலமான வெல்ஃபையர் காரை இந்தியாவிலும் விற்பனை செய்கிறது.

இந்த நிலையில், வெல்ஃபையர் கார்களின் விற்பனையில் டொயோட்டா நிறுவனம் வெற்றிக்கரமாக 5 ஆயிரம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. இதற்கு 6 வருடங்கள் டொயோட்டா நிறுவனத்திற்கு தேவைப்பட்டுள்ளது. முதல்முறையாக 2020ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வெல்ஃபையர் இந்தியாவில் 5,001 யூனிட்கள் விற்பனை ஆகியுள்ளது.
இது கடந்த 2026 மார்ச் மாதம் வரையிலான விற்பனை எண்ணிக்கை ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் 118 வெல்ஃபையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. 2020 பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்ட பின் 2020 மார்ச் மாதம் முடிவதற்கு உள்ளாக 168 வெல்ஃபையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

அதன்பின் 2020 ஏப்ரல்- 2021 மார்ச் வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் 294 வெல்ஃபையர் கார்களும், 2021 ஏப்ரல்- 2022 மார்ச் வரையில் 416 வெல்ஃபையர் கார்களும் விற்பனை செய்யப்பட்டன. இவ்வாறு, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கணிசமான எண்ணிக்கையில் வெல்ஃபையர் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக 5,001 வெல்ஃபையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2025 ஏப்ரல்- 2026 மார்ச் வரையிலான ஒரு வருடத்தில் சுமார் 1,483 வெல்ஃபையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு வருடத்தில் அதிகப்பட்ச வெல்ஃபையர் கார்கள் விற்பனையானது 2025-26ஆம் ஆண்டில் ஆகும். இதற்கு முன்னதாக, 2024 ஏப்ரல்- 2025 மார்ச் வரையில் 1,155 வெல்ஃபையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் 118 வெல்ஃபையர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 20 வெல்ஃபையர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. வெல்ஃபையர் காரில் அதன் பெரிய உடலை இழுத்துச் செல்வதற்கு ஏற்ப அளவில் பெரியதான, பவர்ஃபுல்லான 2.5 லிட்டர், 4-சிலிண்டர் ஸ்ட்ராங் ஹைப்ட்ரீட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
அதிகப்பட்சமாக 193 எச்பி மற்றும் 240 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடிய இந்த ஹைப்ரீட் என்ஜின் உடன் இ-சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. வெல்ஃபையரின் மைலேஜ் லிட்டருக்கு 19.28கிமீ என டொயோட்டா தெரிவிக்கிறது. 5 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட வெல்ஃபையரில் முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் மட்டுமே 3 மீட்டர் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெல்ஃபையரின் ஆரம்ப விலையே சுமார் ரூ.1.20 கோடி ஆகும். இது இல்லாமல், ஆர்டிஓ பதிவு கட்டணம், இன்ஸ்சூரன்ஸ், சாலை வரி உள்ளிட்டவை எல்லாம் இன்னும் பல லட்ச ரூபாய்க்கு வரும். அப்படியிருந்தும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான வெல்ஃபையர் கார்கள் இதுவரையில் இந்தியாவில் விற்பனையாகி இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications