ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொண்ட புதிய டொயோட்டா எஸ்யூவி அறிமுகம்
சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் 'யாரிஸ் கிராஸ்' (Yaris Cross) காம்பேக்ட் எஸ்யூவி மாடலை அப்டேட் செய்துள்ளது டொயோட்டா. இந்தப் பெயரைக் கேட்ட உடனேயே எங்கேயோ கேட்டது போல் இருக்கலாம். ஆம், 2021ம் ஆண்டு வரை யாரிஸ் (Yaris) என்ற பெயரில் செடான் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனை செய்து வந்தது டொயோட்டா. குறைவான வரவேற்பு காரணமாக இந்தியாவில் அதன் விற்பனை நிறுத்தப்பட்டது.
சர்வதேச அளவில் டொயோட்டா விற்பனை செய்து வருவது முற்றிலும் வேறாக ஒரு காம்பேக்ட் எஸ்யூவி மாடல். 2024ல் தான் இந்தக் காரை நிறைய வகைகளில் மேம்படுத்தியது அந்நிறுவனம். எனவே தற்போது குறிப்பிடத்தக்க அளவில் சில மாற்றங்களை மட்டுமே செய்திருக்கிறது. தற்போது இந்தப் புதிய ஃபேஸ்லிப்ட் மாடலில் செய்யப்பட்டிருக்கும் மேம்பாடுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

பார்த்தவுடன் புதிய காரின் கிரில் மாறியிருப்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். மாறியிருப்பது மட்டுமின்றி வழக்கமாக கார்களில் பார்க்கப்படும் கிரில்லைப் போன்று இல்லாமல் வேறு மாதிரியாக இருக்கிறது. வழக்கமாக கிரில் தனியாகப் பொருத்தப்பட்டிருப்பதைப் போல இருக்கும். ஆனால் இந்தக் காரில் பாடி பேனலிலேயே வடிவமைககப்பட்டதைப் போல வித்தியாசமாக இருக்கிறது. இந்த டிசைன் பிடிக்குமா இல்லையா என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது.
ஷார்ப்பான டிசைன் கொண்ட லைட்டிங் எலமெண்ட்களுடன், முகப்பு விளக்கு டிசைன் சற்று மாற்றப்பட்டிருக்கிறது. முன்பக்க பம்பரின் டிசைன் கொஞ்சம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருப்பதோடு, முன்பை விட இன்னும் கொஞ்சம் காரின் அகலத்திற்கு நீள்கிறது. டொயோட்டா லோகோ பானெட்டிற்கு சற்று கீழே இன்னும் சற்று மேலே ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக எட்டு நிறங்களுடன் இந்த காம்பேக்ட் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், புதிதாக இரண்டு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இனி பெர்சியன் சால்ட் மற்றும் பிரிஷியஸ் பிரான்ஸ் ஆகிய இரண்டு புதிய நிறங்களில் யாரிஸ் கிராஸ் எஸ்யூவியை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். புதிய 17 இன்ச் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள் உயர்நிலை மற்றும் இடைநிலை வேரியன்ட்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
காரின் உட்புறமும் சின்னச் சின்ன மாற்றங்களே செய்யப்பட்டிருக்கின்றன. டோர்கள், டேஷ்போர்டு மற்றும் இன்ஜின் இக்னிஷன் பட்டனைச் சற்றியும் பிளாட்டினம் இன்ஸர்ட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது காரின் உள்ளே ப்ரீமியமான உணர்வைக் கொடுப்பதாக இருக்கிறது. இடைநிலை 'டிசைன்' வேரியன்டில் இப்போது ஸ்போர்டியான சீட்களைக் கொடுத்திருக்கிறது டொயோட்டா. முன்னதாக இது டாப் எண்டு 'எக்ஸல்' வேரியன்டில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்தது.
டாப் எண்டுக்கும் மேலான GR ஸ்போர்ட் வேரியன்டில் கருமையான இன்டீரியர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து அம்சங்களும் டார்க்காக இருக்கின்றன. ஹெட்ரெஸ்ட் மற்றும் ஸ்டீயரிங் வீலிலும் GR லோகோ பொறிக்கப்பட்டிருக்கிறது. GR ஸ்போர்ட் மற்றும் எக்ஸல் வேரியன்ட்களில் பவர்டு டெயில்தேட் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், எக்ஸல் வேரியன்டில் பனோரமிக் ரூஃப் கிளாஸும் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மெக்கானிக்கலாகப் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 1.5 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய ஹைபிரிட் பவர்ட்ரெயின் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த செட்டப்பானது e-CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. லித்தியம் அயன் பேட்டரியுடன், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வரை கொண்டிருக்கிறது இந்த ஹைபிரிட் செட்டப்.
இந்த ஃபேஸ்லிப்டிற்கு முந்தைய மாடலில் இதே பவர்ட்ரெயின் இரண்டு வகையான ட்யூன்களில் கொடுக்கப்பட்டு வந்தது. ஒரு ட்யூன் 116 hp பவரையும், மற்றொரு ட்யூன் 130 hp பவரையும் உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருந்தன. தற்போது 130 hp ட்யூன் கொண்ட பவர்ட்ரெயினை மட்டுமே கொடுத்துள்ளது டொயோட்டா. ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரண்டு டிரைவ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த யாரிஸ் கிராஸ் காம்பேக்ட் எஸ்யூவி மாடலானது பிரதானமாக ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஃபேஸ்லிப்டிற்கு முந்தைய மாடலானது இந்திய மதிப்பிற்கு ரூ.29.87 லட்சம் முதல் ரூ.36.31 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய ஃபேஸ்லிப்ட் மாடலானது இதனை விட சற்று கூடுதல் விலையில் வெளியாகும் எனத் தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனை 4,100 மிமீ முதல் 4,200 மிமீ அளவிலான நீளத்தில் சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்கும், மிட்-சைஸ் எஸ்யூவிக்கும் இடைப்பட்ட ஒரு அளவில் இந்த டொயோட்டா யாரிஸ் கிராஸ் இருக்கிறது.
இதனை இந்தியாவிற்கு டொயோட்டா கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. ஆனால் இதே போன்று ஹைபிரிட் பவர்ட்ரெயின்களை இந்திய மாடல்களில் டொயோட்டா பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
ஆனால் இந்தியாவில் டொயோட்டாவின் குறைவான விலை கொண்ட கார் மாடலே ரூ.19 லட்சம் விலையைக் கொண்டிருக்கும் இன்னோவா எம்பிவி தான். ரூ.20 லட்சத்திற்கும் கீழான விலையில் நான்கு மாஸ் மார்க்கெட் கார் மாடல்கள் டொயோட்டாவின் லைன்-அப்பில் இருக்கின்றன தான். ஆனால் அவை எல்லாமே மாருதியின் ரீபேட்ஜ்டு மாடல்கள். அவற்றின் தயாரிப்பையும் மாருதி தான் மேற்கொள்கிறது. எனவே இந்தக் கார் இந்தியாவிற்கு வராது என்றே நாம் உறுதியாக நம்பலாம்.


Click it and Unblock the Notifications








