பைக் வாங்குற விலையில் எத்தனை பேரது தொழிலை மாற்ற போகுதோ!! மணிக்கு 60கிமீ வேகத்தில் 'பறக்கும்'!
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி (TVS Motor Company), சரக்கு போக்குவரத்து தேவைக்காக வடிவமைக்கப்பட்ட புதிய டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி சிஎன்ஜி (TVS King Kargo HD CNG) என்கிற மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.2,70,648 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு சரக்கு வாகனம், முதல் கட்டமாக டெல்லி என்சிஆர், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் கிடைக்கும்.
லாஸ்ட்-மைல் டெலிவிரி சேவைகளை மேற்கொள்ளும் வணிகர்களுக்கு அதிக சுமை கொள்ளளவு மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நோக்கில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி சிஎன்ஜி வாகனத்தில் 301.1சிசி லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9.1 கிலோவாட் ஆற்றலையும், 22.4 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

பின்பக்கத்தில், பொருட்களை வைக்க 6.6 அடி நீள மேடை இடவசதியுடன் வந்துள்ளது. இதன் பிரிவில் இவ்வளவு பெரிய லோடு பகுதியை கொண்ட வாகனம் இதுவென்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது கேபின் வசதியை மேம்படுத்தும் வகையில், பிரிவிலேயே முதல்முறையாக முழுமையாகத் திறந்து மூடும் ஜன்னல்களையும் கொண்டுள்ளது.
இந்த வாகனத்தில் பவர் கியர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஏறுமுகமான சாலைகளில் சிறப்பாக செயல்படவும், சுமை இருக்கும் நிலையிலும் அதிக மைலேஜை பெறவும் உதவுகிறது. இந்த வாகனத்தின் உச்சப்பட்ச வேகம் மணிக்கு 62 கிமீ ஆகும். மேலும், 235 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரையில் இருந்து வாகனத்தின் அடிப்பகுதியின் உயரம்) மற்றும் 3,420 மிமீ டர்னிங் ரேடியஸ் (திரும்பும் ஆரம்) கொண்டுள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் இந்த வாகனத்திற்கு மூன்று ஆண்டுகள் அல்லது 1.5 லட்சம் கிலோமீட்டர் விரிவான வாரண்டியை வழங்குகிறது. இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள், கிளைகள் மற்றும் சேவை மையங்கள் உட்பட 470க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் டிவிஎஸ் மோட்டார் கம்பெனிக்கு உள்ளன. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு உறுதி செய்யப்படுகிறது.
கூடுதலாக, மூன்று வருடத்திற்கு பயணத்தின் போது தேவைப்படும் அவசரகால உதவிகளையும், தனியார் கேரேஜ் மெக்கானிக்களுக்கான ஆதரவையும் டிவிஎஸ் வழங்குகிறது. லாஸ்ட்-மைல் டெலிவிரி என்பது இந்தியாவில் மின் வணிக வளர்ச்சியாலும், நகர்ப்புறமயமாக்கலாலும் வேகமாக வளர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைக் கருத்தில் கொண்டு, தூய்மையான மற்றும் செலவு குறைந்த வணிக வாகனங்களுக்கான தேவையை இவ்வாறான சிஎன்ஜி (CNG) வாகனங்கள் பூர்த்தி செய்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வணிக வாகனங்களில் போக்குவரத்து சேவைகளை வழங்குபவர்களுக்கு செயல்பாட்டுத் திறனையும், சிறந்த வாழ்வாதாரத்தையும் இது வலியுறுத்துகிறது. இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் உலக அளவில் முன்னணி வகிக்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் முதல் டெமிங் பரிசு வென்ற இருசக்கர வாகன நிறுவனம் இதுவாகும். மேலும், ஜே.டி. பவர் ஐ.க்யூ.எஸ் (J.D. Power IQS) மற்றும் ஏபிஎல் (APEAL) ஆய்வுகளில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டிருப்பதுடன், உலகளவில் 80 நாடுகளுக்கும் மேலாக தனது தயாரிப்புகளை விநியோகம் செய்கிறது.
நோர்டன் மோட்டார்சைக்கிள்கள் (இங்கிலாந்து) மற்றும் டிவிஎஸ் இ-பைக் கம்பெனி ஏஜி (சுவிட்சர்லாந்து) போன்ற துணை நிறுவனங்களையும் கொண்டுள்ளது. புதிய டிவிஎஸ் கிங் கார்கோ எச்டி சிஎன்ஜி வாகனம், ஆரம்பக்கட்ட சந்தைகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டிவிஎஸ் மோட்டார் டீலர்ஷிப்கள் மூலம் முன்பதிவு மற்றும் டெலிவிரிக்கு தற்போது கிடைக்கிறது. வரும் மாதங்களில் இதன் டெலிவிரிகள் விரிவுப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








