35 கிமீ மைலேஜ் தரும் பெட்ரோல் காரெல்லாம் வருது! கூடிய சீக்கிரமே 4 புதிய தயாரிப்புகளை களமிறக்க போகும் மாருதி!
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் 4 புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாக இந்த 4 புதிய கார்களும் விற்பனைக்கு வரவுள்ளன. இந்த புதிய கார்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் (Maruti Suzuki Brezza Facelift): இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து பிரெஸ்ஸா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை மாருதி சுஸுகி நிறுவனம் வரும் ஜூலை 23ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதே நாளில்தான் கியா சைரோஸ் இவி (Kia Syros EV) எலெக்ட்ரிக் காரும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

சரி, விஷயத்திற்கு வருவோம். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிதாக 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் (Engine Option) வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் லெவல் 2 அடாஸ், 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முன் பகுதியில் வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் போன்ற வசதிகளையும் (Features) நாம் எதிர்பார்க்கலாம்.
இதுதவிர டிசைனிலும் (Design) நிறைய மாற்றங்களை நம்மால் எதிர்பார்க்க முடியும். மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை அனேகமாக 8.50-9 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, டாடா நெக்ஸான் (Tata Nexon), கியா சொனெட் (Kia Sonet), ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் ஸ்கோடா கைலக் (Skoda Kylaq) போன்ற கார்களுக்கு எல்லாம் விற்பனையில் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தலாம்.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் (Maruti Suzuki Fronx Facelift): மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிதாக ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது 1.2 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனாக இருக்கலாம்.
இதன் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 35 கிலோ மீட்டர் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 7-7.50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் (Maruti Suzuki Baleno Facelift): மாருதி சுஸுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்ஜின் ஆப்ஷன்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டிசைனில் நிறைய மாற்றங்களையும், புதிய வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 6.50-7 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.
மாருதி சுஸுகி எலெக்ட்ரிக் எம்பிவி (Maruti Suzuki Electric MPV): மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2வது எலெக்ட்ரிக் கார் இதுவாகும். இதன் சோதனை ஓட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ விட்டாராவில் (Maruti Suzuki e Vitara) வழங்கப்பட்டுள்ள அதே 49 kWh மற்றும் 61 kWh பேட்டரி ஆப்ஷன்கள்தான் (Battery Options) இதிலும் வழங்கப்படும் என தெரிகிறது.
இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 17-18 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி (Launch Date) மட்டுமே வெளியாகியுள்ளது. மற்ற கார்களுக்கான அதிகாரப்பூர்வமான அறிமுக தேதி எதுவும் இல்லை. இருப்பினும் அடுத்த 12 மாதங்களுக்கு உள்ளாக இவை அனைத்தும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனம் என்ற ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நாட்டி கொள்ள இந்த 4 புதிய கார்களின் வருகை மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு உதவி செய்யும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து ஆகும்.


Click it and Unblock the Notifications