அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகும் 5 முக்கிய கார்கள்! வால்வோ முதல் ரெனோ வரை!

அடுத்த வாரம் இந்தியாவில் பல முக்கிய புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. சொகுசு மின்சார கார்கள் முதல் ஹைப்ரிட் எஸ்யூவி வரை பல்வேறு பிரிவுகளில் புதிய தேர்வுகள் வரவுள்ளன. குறிப்பாக வால்வோ, டொயோட்டா, ஆடி மற்றும் ரெனோ நிறுவனங்களின் முக்கிய மாடல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் இந்த புதிய மாடல்களை பார்த்து கொண்டு முடிவு செய்வது பயனுள்ளதாக இருக்கும். சில மாடல்கள் ஏற்கெனவே வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள நிலையில், இந்தியாவுக்கான விலை மற்றும் வசதிகள் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாக வேண்டியுள்ளது. அடுத்த வாரம் கவனிக்க வேண்டிய முக்கிய மாடல்களை விரிவாகப் பார்க்கலாம்.

Volvo EX90

1. வால்வோ EX90

வால்வோ நிறுவனத்தின் பிரீமியம் மின்சார எஸ்யூவியான EX90, வரும் திங்கட்கிழமை (அக்டோபர் 12) இந்தியாவில் அறிமுகமாகிறது. மூன்று வரிசை இருக்கைகளைக் கொண்ட இந்தக் கார், அதிக இடவசதி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை விரும்பும் குடும்ப வாடிக்கையாளர்களைக் குறிவைக்கிறது. வால்வோவின் சர்வதேச மின்சார கார் வரிசையில் முதன்மையான இடத்தைப் பிடிக்கும் மாடலாக இது உள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் EX90 காரில் 106kWh பேட்டரி மற்றும் இரண்டு மின்மோட்டார்கள் கொண்ட அமைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இது 456 எச்பி சக்தியையும், 670 என்எம் டார்க்கையும் வழங்கும். முழுமையாக சார்ஜ் செய்தால் WLTP சோதனை முறையின்படி 625 கிமீ வரை பயணிக்க முடியும். இதன் விலை மற்றும் வேரியண்ட் விவரங்கள் வரும் திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது.

Volvo ES90

2. வால்வோ ES90

அடுத்து EX90 எஸ்யூவியுடன் வால்வோ ES90 மின்சார செடான் காரும் திங்கட்கிழமை இந்தியாவில் அறிமுகமாகிறது. வால்வோ நிறுவனம் தனது சொகுசு செடான் கார் பிரிவில் மீண்டும் கவனம் செலுத்துவதற்கு இந்த மாடல் முக்கியமானதாக இருக்கும். வழக்கமான எஸ்யூவிகளிலிருந்து மாறுபட்ட வடிவமைப்பையும் பிரீமியம் அனுபவத்தையும் விரும்புபவர்களுக்கு இது புதிய தேர்வாக அமையும்.

சர்வதேச மாடலில் 106kWh கொண்ட இரட்டை மின்மோட்டார் அமைப்பு இடம்பெறுகிறது. இது 456 ஹெச்பி சக்தியையும் 670 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. WLTP சோதனை முறையின்படி அதிகபட்சம் 696 கி.மீ. வரை பயணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இந்திய மாடலின் விலை, வசதிகள் மற்றும் டெலிவிரி விபரங்கள் அறிமுகத்தின்போது அறிவிக்கப்படும்.

Toyota Glanza

3. டொயோட்டா கிளான்ஸா ஃபேஸ்லிஃப்ட்

டொயோட்டா கிளான்ஸா பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் புதுப்பிக்கப்பட்ட மாடல் அக்டோபர் 14ம் தேதி அறிமுகமாக உள்ளது. மாருதி சுஸுகி பலேனோவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காரில், புதிய முன்பக்க வடிவமைப்பு, மாற்றியமைக்கப்பட்ட பம்பர்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் இடம்பெறும். அதிக இடவசதியுடன் கூடிய ஹேட்ச்பேக் காரை வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு இது சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கும்.

தற்போதைய மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. புதுப்பிக்கப்பட்ட மாடலில் புதிய எஞ்சின், கூடுதல் வசதிகள் மற்றும் சிஎன்ஜி பதிப்பில் மாற்றங்கள் இடம்பெறுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. வரும் 14ந் தேதி இந்த காரின் விலை உள்ளிட்ட முக்கிய தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் விரிவாக வழங்குகிறோம்.

Audi Q3

4. புதிய தலைமுறை ஆடி Q3

ஆடி நிறுவனத்தின் புதிய தலைமுறை Q3 எஸ்யூவி அக்டோபர் 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. முந்தைய மாடலைவிட நவீன தோற்றத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காரில், இரண்டாகப் பிரிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட் அமைப்பு, பெரிய முன்பக்க கிரில் மற்றும் பின்புறத்தை இணைக்கும் வகையில் தோற்றம் கொண்ட எல்இடி விளக்குகள் இடம்பெறுகின்றன. இது பிஎம்டபிள்யூ X1, மெர்சிடிஸ் பென்ஸ் GLA ஆகிய கார்களுக்குப் போட்டியாக இருக்கும்.

இந்திய மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 204 எச்பி சக்தியை வழங்கும். இதனுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் 12.8 அங்குல தொடுதிரை, 11.9 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் இடம்பெறுகின்றன.

Renault Duster

5. ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட்

ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவியின் ஹைப்ரிட் பதிப்பு அக்டோபர் 17-ம் தேதி அறிமுகமாக உள்ளது. ஏற்கெனவே இரண்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளுடன் விற்பனையில் உள்ள டஸ்ட்டர் வரிசையில், இந்தப் புதிய பதிப்பு எரிபொருள் சிக்கனத்தையும், அதிக செயல்திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நகர்ப்புறப் பயணங்களுக்கும் நீண்ட தூரப் பயணங்களுக்கும் ஏற்ற எஸ்யூவியைத் தேடுபவர்களுக்கு இது முக்கியமான தேர்வாக அமையலாம்.

சர்வதேச அளவில் விற்பனையில் உள்ள டஸ்ட்டர் ஹைப்ரிட் E-Tech 160 மாடலில் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இரண்டு மின்மோட்டார்கள் மற்றும் 1.4kWh பேட்டரி இணைந்து செயல்படுகின்றன. இந்த அமைப்பு 160 எச்பி சக்தியை வழங்குகிறது. நகர்ப்புறப் பயணங்களில் அதிக நேரம் பேட்டரியில் இயங்கும் வகையில் இருக்கும். இந்த மாடல் கணக்கீடுகளின்படி 29 கிமீ மைலேஜ் வழங்கும் என்று ரெனோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

எகிறும் எதிர்பார்ப்பு

அடுத்த வாரம் எதிர்பார்க்கப்படும் இந்த மாடல்களில், வால்வோ EX90 மற்றும் ES90 சொகுசு மின்சார வாகனப் பிரிவில் கவனம் பெறுகின்றன. டொயோட்டா கிளான்ஸா புதுப்பிக்கப்பட்ட பிரிமீயம் ஹேட்ச்பேக் தேர்வாகவும், ஆடி Q3 விலை குறைவான பிரீமியம் எஸ்யூவியாகவும் அமைகின்றன.

ரெனோ டஸ்ட்டர் ஹைப்ரிட் எரிபொருள் சிக்கனத்தையும், அதிக பெர்ஃபார்மென்ஸையும் ஒருங்கே விரும்புவோரிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விலை மற்றும் இந்தியாவுக்கான முழுமையான விவரங்களை அறிந்த பிறகு, எந்த மாடல் உங்களுக்கு ஏற்றது என்பதைத் தீர்மானிக்கலாம்.

Article Published On: Saturday, October 10, 2026, 9:14 [IST]
English summary
Upcoming car launches india between october 12 18 2026 duster hybrid glanza facelift new gen audi q3
மேலும்... #audi #toyota #renault #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out
X