குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார் முதல் 7 சீட்டர் கார் வரை... இந்திய மார்க்கெட்டை அதிர வைக்க போகும் ஹூண்டாய்!
இந்தியாவின் எஸ்யூவி கார் சந்தை மிகவும் பெரியது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு ஏராளமான எஸ்யூவி கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதற்கு ஹூண்டாய் நிறுவனமும் விதிவிலக்கு அல்ல.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே ஏராளமான எஸ்யூவிக்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் அடுத்த 12-15 மாதங்களில் புதிதாக 4 எஸ்யூவிக்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

ஹூண்டாய் ஹெச்இ1ஐ (Hyundai HE1i): பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என நீங்கள் நினைப்பது தெளிவாக புரிகிறது. இது விற்பனைக்கு வரவுள்ள புதிய காரின் அதிகாரப்பூர்வமான பெயர் அல்ல. வெறும் குறியீட்டு பெயர் மட்டுமே. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது புதிய பெயர் சூட்டப்படும்.
ஹூண்டாய் நிறுவனம் ஹெச்இ1ஐ காரை, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 10 லட்ச ரூபாய்க்கு உள்ளேதான் இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை இது பெறவுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 ஆகியவை ஆகும். அவற்றின் ஆரம்ப விலை முறையே 18.03 லட்ச ரூபாய் மற்றும் 55.71 லட்ச ரூபாயாக இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ஹூண்டாய் பேயான் (Hyundai Bayon): இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா, டாடா சியரா, ரெனால்ட் டஸ்டர், நிஸான் டெக்டான் போன்ற கார்களுக்கு எல்லாம் போட்டியாக ஹூண்டாய் பேயான் விற்பனைக்கு வரவுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் லைன்-அப்பில் வெனியூ மற்றும் க்ரெட்டா கார்களுக்கு இடைப்பட்ட மாடலாக இது இருக்கும்.
1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை ஹூண்டாய் பேயான் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படலாம். ஹூண்டாய் பேயான் காரின் ஆரம்ப விலை அனேகமாக 9-10 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹூண்டாய் என்ஐ1ஐ (Hyundai Ni1i): இதுவும் குறியீட்டு பெயர்தான். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது புதிய பெயர் சூட்டப்படும். இது 3 வரிசை இருக்கை அமைப்பை கொண்ட கார் ஆகும். எனவே 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.
இந்திய சந்தையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ மற்றும் டாடா சஃபாரி போன்ற கார்களுக்கு எல்லாம் போட்டியாக இது வரவுள்ளது. ஹூண்டாய் டூஸான் லாங் வீல் பேஸ் கார் உருவாக்கப்பட்டுள்ள அதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் இந்த காரும் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் வேறு ஒரு சில இன்ஜின் ஆப்ஷன்களையும் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். இதன் ஆரம்ப விலை அனேகமாக 14 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா (New-gen Hyundai Creta): இந்த செய்தியில் நாம் பார்த்த முதல் 3 கார்களும் இந்திய சந்தைக்கு புத்தம் புதியவை. ஆனால் ஹூண்டாய் க்ரெட்டா ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் ஒரு கார்தான். அதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடலை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா காரை விட, அதன் புதிய தலைமுறை மாடல் அளவில் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தாராளமான இடவசதி கிடைக்கும். அத்துடன் புதிய பெட்ரோல் ஹைப்ரிட் ஆப்ஷனையும் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் டிசைன் அப்டேட்களையும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரில் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஆரம்ப விலை அனேகமாக 12 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புதிதாக ஒரு எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், ஹூண்டாயின் இந்த 4 தயாரிப்புகளுக்கு காத்திருக்கலாம். இந்த 4 கார்களின் வருகைக்கு பின்னர், இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
