ஒரு காலத்துல சிங்கம் மாதிரி இருந்த கம்பெனி! இப்ப 5 ஆயிரம் கார் விக்கவே முக்குது! அதிரடி முடிவை எடுத்த ஹோண்டா!
இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) போன்றவை இந்த செக்மெண்ட்டை சேர்ந்தவைதான்.
வாடிக்கையாளர்கள் மத்தியில் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், தொடர்ந்து ஏராளமான நிறுவனங்கள் இந்த செக்மெண்ட்டில் தங்கள் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது இதற்கு ஒரு உதாரணம்.

ஆனால் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டருடன் இந்த செக்மெண்ட்டில் புதிய கார்களின் அறிமுகங்கள் நிற்க போவதில்லை. தொடர்ந்து ஏராளமான புத்தம் புதிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இதில், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2 கார்கள் குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
நிஸான் டெக்டான் (Nissan Tekton): நிஸான் டெக்டான் கார் வரும் ஜூலை 9ம் தேதி பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து ஜூலை மாத இறுதிக்குள்ளாகவே முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிஸான் மற்றும் ரெனால்ட் ஆகிய 2 நிறுவனங்களும் ஏற்கனவே கூட்டணியில் இருந்து வருகின்றன. எனவே புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரின் அடிப்படையில்தான் நிஸான் டெக்டான் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காருக்கும், நிஸான் டெக்டான் காருக்கும் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கும்.
புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் தற்போதைய நிலையில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகியவை ஆகும். இதே இன்ஜின் ஆப்ஷன்கள்தான், நிஸான் டெக்டான் காரிலும் வழங்கப்படவுள்ளன.
புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் 1.8 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் ஆப்ஷன் நிஸான் டெக்டான் காரில் அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் வழங்கப்பட்டுள்ள அதே 25.65 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 26.03 செமீ டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்பிளே, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், லெவல் 2 அடாஸ் (ADAS) ஆகிய அம்சங்கள் எல்லாம் அப்படியே நிஸான் டெக்டான் காரிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நிஸான் டெக்டான் காரானது, இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விற்பனையில் இருந்த நிஸான் டெரானோ (Nissan Terrano) காரின் வாரிசாக இருக்கும். அத்துடன் சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள நிஸான் பேட்ரல் (Nissan Patrol) காருக்கும், நிஸான் டெக்டான் காருக்கும், டிசைனில் (Design) நிறைய ஒற்றுமைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் நிஸான் டெக்டான் காரின் ஆரம்ப விலை வெறும் 10-10.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும்.
ஹோண்டா எலவேட் ஃபேஸ்லிஃப்ட் (Honda Elevate Facelift): இந்திய சந்தையில் பிரபலமாக உள்ள மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ஹோண்டா எலவேட். இது கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஹோண்டா நிறுவனம் எலவேட் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
அனேகமாக நடப்பு 2026 காலண்டர் ஆண்டின் 3வது காலாண்டில், அதாவது வரும் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில், ஹோண்டா எலவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் மட்டுமே என்பதால், இன்ஜின் ஆப்ஷன்களில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்தான், ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்படவுள்ளது. இருப்பினும் டிசைனில் நிறைய மாற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். அத்துடன் பல்வேறு புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா எலவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 12 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம்.
ஹோண்டா நிறுவனம் தற்போது இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் கார்களை விற்பனை செய்வது என்பதே பெரிய விஷயமாக உள்ளது. எனவே விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே, எலவேட் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் முடிவை ஹோண்டா நிறுவனம் எடுத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிஸான் டெக்டான் மற்றும் ஹோண்டா எலவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் மட்டுமல்லாது, டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் போன்ற கார்களும் கூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளன. எனவே இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் வரும் மாதங்களில் போட்டி அனல் பறக்க போவது உறுதி.


Click it and Unblock the Notifications