சிறிய கார்களில் பணத்தை செலவு பண்ண வேண்டாம்... ஒரே சமயத்தில் 8-9 பேர் போகக்கூடிய 7 புதிய எம்பிவி கார்கள்!
எஸ்யூவி (SUV) வகை கார்களுக்கு ஒருபக்கம் மார்க்கெட் தொடர்ந்து பெரியதாகி கொண்டு வரும் நிலையில், மறுப்பக்கம் எம்பிவி (MPV) வகை கார்களுக்கும் மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. ஏனெனில், உட்புறத்தில் அதிக இடவசதியை வழங்கும் எம்பிவி வகை கார்களை வாங்கவும் கடந்த சில வருடங்களில் பலர் விரும்ப ஆரம்பித்துள்ளனர். அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்குவர உள்ள எம்பிவி கார் மாடல்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி ஒய்.எம்.சி (YMC) & அதன் டொயோட்டா வெர்சன்: முதல் எலெக்ட்ரிக் காராக இ-விட்டாராவை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்திய மாருதி சுஸுகி அதனை தொடர்ந்து இரண்டாவது எலெக்ட்ரிக் காரை எம்பிவி உடலமைப்பில் இந்த ஆண்டின் செப்டம்பர்- அக்டோபர் சமயத்தில் களமிறக்க தயாராகி வருகிறது.

தற்போதைக்கு ஒய்எம்சி என்கிற குறியீட்டு பெயரால் அழைக்கப்பட்டுவரும் இந்த எலெக்ட்ரிக் கார் இ-விட்டாராவின் அதே 'ஹார்டெக்ட்-இ' பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டா எலெக்ட்ரிக் எம்பிவி காரும் மார்க்கெட்டிற்கு வரலாம். ஆனால், இதன் அறிமுகத்தை இந்த ஆண்டிற்குள் எதிர்பார்க்க முடியாது.
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Innova Hycross Facelift): 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்த 2026ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இதன்படி, இன்னோவா ஹைகிராஸின் தோற்றத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதுடன், புதியதாக பெரிய அளவிலான டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படலாம்.

மாருதி சுஸுகி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் & டொயோட்டா ரூமியன் ஃபேஸ்லிஃப்ட் (Maruti Suzuki Ertiga Facelift & Toyota Rumion Facelift): இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எம்பிவி (MPV) ரக காரான எர்டிகாவும், எர்டிகாவின் அடிப்படையில் டொயோட்டா உருவாக்கிய ரூமியன் காரும் இந்த வருடத்திற்குள்ளாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடின் மூலம், எர்டிகா காரில் ஸ்ட்ராங் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனை மாருதி சுஸுகி அறிமுகம் செய்யலாம். ஃபேஸ்லிஃப்டிற்கு எர்டிகா அப்கிரேட் செய்யப்பட்ட உடன், அடுத்த சில மாதங்களில் ரூமியன் ஃபேஸ்லிஃப்ட் காரையும் டொயோட்டா அறிமுகப்படுத்தும். ஏனெனில், சுஸுகி- டொயோட்டா கூட்டணியில்தான் இந்த இரு எம்பிவி கார்களும் உருவாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கியா கார்னிவல் ஹைப்ரீட் (Kia Carnival Hybrid): இந்தியாவில் கியாவின் லக்சரியான எம்பிவி காரான கார்னிவல் புதியதாக ஸ்ட்ராங்க் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனை விரைவில் பெறவுள்ளது. ஏனெனில், வெளிநாடுகளில் 1.6 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரீட் என்ஜின் ஆப்ஷனிலும் கார்னிவல் விற்பனை செய்யப்பட்டுவரும் நிலையில், அந்த என்ஜின் ஆப்ஷன் அப்படியே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
ஹூண்டாய் எம்பிவி (Hyundai MPV): ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தைக்காக எலெக்ட்ரிக் எம்பிவி கார் ஒன்றை களமிறக்க கடந்த சில வருடங்களாகவே தயாராகி வருகிறது. இருப்பினும், ஹூண்டாயின் இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் இந்த 2026ஆம் வருடத்தில் அறிமுகம் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. மேலும், இந்த எலெக்ட்ரிக் எம்பிவி கார் ஆனது சில வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் ஸ்டாரியா (Staria) எலெக்ட்ரிக் கார் என்றும் கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பின்படி பார்க்கும்போது, புதிய எம்பிவி கார்கள் அதிகமாக மாருதி சுஸுகி, டொயோட்டா பிராண்டில் இருந்துதான் வெளிவரவுள்ளன. மேலும், அவை தான் பலத்தரப்பட்ட மக்கள் வாங்கக்கூடிய வகையில் பட்ஜெட் விலையில் வெளிவரவுள்ளன. தென்கொரிய நிறுவனங்களான ஹூண்டாய், கியாவில் இருந்து அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய எம்பிவி கார்கள் சற்று அதிக விலையில், பிரீமியம் தரத்தில் களமிறக்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications