இன்னும் 2- 3 மாதம் காத்திருந்தால் கார் மார்க்கெட்டே மாற போகுது! இந்த 4 கார்களுக்குதான் நாடே வெயிட்டிங்!
இந்தியாவில் எஸ்யூவி (SUV) கார் மார்க்கெட் கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதனாலேயே கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களும் புதிய, புதிய எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்குவர உள்ள புதிய எஸ்யூவி கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
டாடா சியரா இவி (Tata Sierra EV): பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சியரா பெயர் பயன்படுத்தப்பட்டதினாலேயே டாடா சியராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், இந்த சூட்டோடு சூடாக சியரா இவி எலெக்ட்ரிக் காரையும் மார்க்கெட்டில் களமிறக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய சியராவுக்கும், புதிய சியரா இவி-க்கும் தோற்றத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்க வாய்ப்பில்லை. எலெக்ட்ரிக் கார் என்பதால் முன்பக்க க்ரில் மூடப்பட்டதாக வழங்கப்படலாம் மற்றும் அலாய் சக்கரங்கள் புதிய டிசைனில் வழங்கப்படலாம். அத்துடன், உட்புற கேபினிலும் சில மாற்றங்கள் இருக்கலாம்.
டொயோட்டா இபெல்லா (Toyota eBella): மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாராவின் ரீபேட்ஜ்டு வெர்சன் தான், இபெல்லா ஆகும். இருப்பினும், இ-விட்டாரவில் இருந்து வித்தியாசமான தோற்றத்தில் இபெல்லா சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. அதாவது காரை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டன; இன்னும் இபெல்லாவின் விலைகள் அறிவிக்கப்பட்டு கார் அறிமுகம் செய்யப்பட வேண்டியதுதான் பாக்கி.

வெளிப்புற தோற்றத்தில் இபெல்லா கொஞ்சம் வேறுப்பட்டாலும், உட்புற கேபினின் தோற்றத்தில் இ-விட்டாராவை தான் பெரிதும் ஒத்துக் காணப்படுகிறது. மேலும், இ-விட்டாராவின் அதே 49kWh மற்றும் 61kWh பேட்டரி ஆப்ஷன்களில் தான் டொயோட்டா இபெல்லா காரும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் கார் அறிமுகங்களுள் ஒன்றான இதன் அறிமுகம் இன்னும் சில மாதங்களில் இருக்கும்.
எம்ஜி மெஜஸ்டர் (MG Majestor): ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் விலையுயர்ந்த எஸ்யூவி காராக இது சமீபத்தில் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக விளங்கினாலும், உண்மையில் இது ஃபார்ச்சூனரை விட அளவில் சற்று பெரியது ஆகும். முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட மெஜஸ்டர், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
உட்புறத்தில் வெண்டிலேஷன் வசதி மற்றும் எலெக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய இருக்கைகள் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை மெஜஸ்டர் கொண்டுள்ளது. இந்த காரில் வழங்கப்படவுள்ள 2 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 215 பிஎஸ் மற்றும் 478.5 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.
நிசான் டெக்டான் (Nissan Tekton): நீண்ட இடைவெளிக்கு பிறகு நிசானில் இருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்ஜெட் விலையிலான கார் இதுவாகும். இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் சந்தையில் நிலைநிறுத்தப்பட உள்ள டெக்டான் ஆனது உண்மையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரின் ரீபேட்ஜ்டு வெர்சன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மார்க்கெட்டில் அடுத்த சில வருடங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்த போகும் எஸ்யூவி கார்கள் இவை ஆகும். எம்ஜி மெஜஸ்டரை தவிர்த்து, இந்த தொகுப்பில் நாம் பார்த்த மீதி 3 எஸ்யூவி கார்களும் அளவில் மிகவும் சிறியதாகவும் இல்லாமல், பெரியதாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் இருக்கும் மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஆகும். இந்த தொகுப்பில் நாம் பார்க்காத ஏதேனும் ஒரு எஸ்யூவி கார் அடுத்த 2- 3 மாதங்களில் அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








