விரைவில் இந்தியாவில் வெளியாகும் புதிய டொயோட்டா கார் இது தான்
வெளிநாடுகளில் வெளியிடப்பட்ட புதிய தலைமுறை ஹைலக்ஸ் (Hilux) பிக்-அப் ட்ரக்கை விரைவில் இந்தியாவிலும் வெளியிட டொயோட்டா திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஹைலக்ஸ் டிராவோ (Hilux Travo) என்ற பெயரில் 9ம் தலைமுறை மாடலை வெளியிட்டது டொயோட்டா. அதே மாடல் இந்தியாவிலும் விரைவில் வெளியிடப்படவிருக்கிறது.
நான்கு டோர்கள் கொண்ட 5 சீட்டர் ஹைலக்ஸ் ட்ரக்கையே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. புதிய ஹைலக்ஸ் ட்ரக்கும் டிசைன் மாற்றங்கள் மற்றும் புதிய வசதிகளை மட்டுமே கொண்டிருக்கும், கேபின் மற்றும் சீட்டிங் லேஅவுட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. புதிய ஹைலக்ஸ் ட்ரக்கின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹைலக்ஸ் மாடலுடன் ஒப்பிடும் மிகவும் மாடர்னான டிசைன் லாங்குவேஜை புதிய 9ம் தலைமுறை ஹைலக்ஸ் கொண்டிருக்கிறது. இதேபோன்ற முகப்புப் பக்க டிசைனையே ஃபார்சூனர் காருக்கும் டொயோட்டா கொடுக்கத் திட்டமிட்டு வருகிறது என்பது கொசுறுத் தகவல்.
புதிய ஹைலக்ஸ் மாடலில் முன்பக்கமும் பின்பக்கமும் டொயோட்டாவின் லோகோ இடம்பெறாமல், TOYOTA என ஆங்கிலத்தில் லெட்டரிங்கையே லோகோவாகக் கொடுத்திருக்கிறது டொயோட்டா. பின்பக்கம் இந்த லெட்டரிங் இன்னும் பெரிதாக இடம்பெற்றிருப்பது இந்த பிக்-அப் ட்ரக்கிற்கு இன்னும் ரக்கடான தோற்றத்தையும் சேர்த்துக் கொடுக்கிறது. இந்திய மாடலிலும் இதே போன்ற அம்சமே இருக்கும் எனத் தெரிகிறது.

புதிய ஹைலக்ஸ் டிராவோ மாடலானது 5,320 மிமீ நீளம், 1,885 மிமீ அகலம், 1,815 மிமீ உயரம் மற்றும் 3,085 மிமீ வீல்பேஸைக் கொண்டுள்ளது. 225 மிமீ கிரௌண்டு கிளியரன்ஸுடன், 6.3 மீட்டர் டர்னிங் ரேடியஸையும் கொண்டுள்ளது. 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 80 லிட்டர் எரிபொருள் டேங்கும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதே அம்சங்களுடனேயே இந்தியாவிலும் புதிய ஹைலக்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரக்கின் உட்புறம் 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புதிய ஸ்டீயரிங் வீல் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய மாடலில் பவர்டு சீட்கள், JBL சவுண்டு சிஸ்டம், பவர்டு ரியர் விண்டோ, டூயல் கிளவ்பாக்ஸ், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகிய அம்சங்களும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ஹைலக்ஸ் மாடலின் இன்ஜினே புதிய 9ம் தலைமுறை ஹைலக்ஸிலும் கொடுக்கப்படும். தற்போது 2.8 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜினானது அதிகபட்சமாக 204 hp பவர் மற்றும் 500 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய பவர்ட்ரெயினில் ஹைபிரிட் அம்சங்கள் எதுவும் இல்லை. ஆனால் புதிய ஹைலக்ஸ் மாடலின் பவர்ட்ரெயினில் 48V மைல்டு ஹைபிரிட் செட்டப்பையும் டொயோட்டா கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த பிக்-அப் ட்ரக்கின் மைலேஜை 10 சதவீதம் வரை உயர்த்தக்கூடும். அது நல்ல விற்பனைப் புள்ளியாகவும் இருக்கும்.
தற்போது விற்பனையில் இருக்கும் ஹைலக்ஸை விட கூடுதல் விலையில் புதிய ஹைலக்ஸ் வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போதைய மாடலானது ஸ்டாண்டர்டு மேனுவல், ஹை மேனுவல் மற்றும் ஹை ஆட்டோமேட்டிக் என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்டாண்டர்டு மேனுவல் வேரியன்டானது 28.52 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. ஹை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களானது முறையே 35.30 லட்சம் ரூபாய் மற்றும் 36 லட்சம் ரூபாய் என்ற விலையைக் கொண்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் தனிநபர் பயன்பாட்டு பிக்-அப் ட்ரக்குகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் இந்தியாவில் பிக்-அப் என்பது வணிகப் பயன்பாட்டு வாகனமாக மட்டுமே பிரதானமாகப் பார்க்கப்படுகிறது. எனவே தனிநபர் பயன்பாட்டிற்கு இதனை நிறைய வாடிக்கையாளர்கள் வாங்குவதில்லை. இது விற்பனையிலும் நன்றாகவே தெரிகிறது.
ஒவ்வொரு மாதமும் சராசரியாக 300 யூனிட்டுகள் வரையிலேயே இந்த டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக் விற்பனையாகி வருகிறது. ஃபார்ச்சூனருடன் ஒப்பிடும் போது இந்த விற்பனை அளவு மிகவும் குறைவு. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஃபார்ச்சூனரில் 10 சதவீதம் தான் ஹைலக்ஸ் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications