ஈரானை அமெரிக்கா தாக்கியதால் நிலை குலைந்து போன டாடா! காசு குடுத்து கார் 'புக்' பண்ணவங்கலாம் ரொம்ப பாவம்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் (US - Israel) ஆகிய நாடுகள் ஒன்றாக இணைந்து, ஈரான் (Iran) மீது போர் தொடுத்துள்ளன. இதில், ஈரான் அதி உயர் தலைவராக (Supreme Leader) பதவி வகித்து வந்த அலி காமேனி (Ali Khamenei) கொலை செய்யப்பட்டார்.
இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்கு ஆசியாவில் நிலைமை மோசமாக மாறியுள்ளது. மேற்கு ஆசியாதான் உலக பொருளாதாரத்தின் மிக முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது.

தற்போது அங்கு போர் வெடித்துள்ளதால், கச்சா எண்ணெய் (Crude Oil), இயற்கை எரிவாயு (Natural Gas) மற்றும் ப்ரோப்பேன் (Propane) ஆகியவற்றின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹார்மூஸ் நீர்வழியை (Strait Of Hormuz) ஈரான் முடக்கியுள்ளதால், அந்த வழியாக கப்பல் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.
இதனால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் ப்ரோப்பேன் ஆகியவற்றின் விலை கடுமையாக உயரும் சூழல் உருவாகியிருப்பதுடன், அவற்றுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் மட்டுமல்லாது, பெரு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அப்படி மிக கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிறுவனங்களில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் ஒன்றாகும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு குஜராத் (Gujarat) மாநிலம் சனந்த் (Sanand) பகுதியில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு ஒட்டுமொத்தமாக 2 பிளாண்ட்கள் (Plants) இருக்கின்றன. டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா சியரா (Tata Sierra), டாடா கர்வ் (Tata Curvv), டாடா டியாகோ (Tata Tiago) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) ஆகிய கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டுக்கு 4.50 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சனந்த் தொழிற்சாலையில் 50 சதவீத உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இயற்கை எரிவாயு மற்றும் ப்ரோப்பேன் பற்றாக்குறைதான் இதற்கு காரணம்.
கார் தொழிற்சாலைகளில் உள்ள பெயிண்ட் ஷாப் ஓவன்களை சூடாக்குவதற்கு இவை மிகவும் அவசியம். ஆனால் அவற்றுக்கு தற்போது கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சனந்த் தொழிற்சாலையில் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
சனந்த் பகுதியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு, குஜராத் கேஸ் லிமிடெட் (Gujarat Gas Ltd) நிறுவனம்தான், இயற்கை எரிவாயு மற்றும் ப்ரோப்பேன் ஆகியவற்றை சப்ளை செய்து வருகிறது. அவர்களின் சப்ளை குறைந்திருப்பதன் காரணமாகவே, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சனந்த் தொழிற்சாலையின் உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்கும் சூழல் உருவாகியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.
இது குறித்து இன்ஃபார்மிஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சனந்த் தொழிற்சாலை தவிர, மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலம் புனேவிலும் (Pune) தொழிற்சாலை இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அங்கு ஒரு ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.
அந்த தொழிற்சாலையின் நிலை என்ன? என்பது உறுதியாக தெரியவில்லை. இதற்கிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியை குறைத்தால், அதன் எதிரொலியாக கார்களின் காத்திருப்பு காலம் (Waiting Period) உயரும். அதாவது கார்களை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள், டெலிவரிக்காக நீண்ட காலம் காத்திருக்கும் சூழல் உருவாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மேற்கு ஆசியாவில் போர் தொடர்ந்து நடைபெற்றால், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள இந்தியா போன்ற உலக நாடுகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே போரில் சம்பந்தப்பட்ட நாடுகள், பிரச்சனையை அமைதியான முறையில் பேசி தீர்த்து கொள்வதே சிறந்தது.


Click it and Unblock the Notifications








