தூத்துக்குடியில் உற்பத்தியாகும் காரை வாங்குவதற்கு சலுகை வேறயா! பெட்ரோல் கார் ஓனர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
வின்ஃபாஸ்ட் (VinFast), வியட்நாம் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம். எடை குறைவான ஸ்கூட்டர்களில் இருந்து லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) வரையில் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பிரம்மாண்டமான வியட்நாம் ஆட்டோமொபைல் நிறுவனம் இது ஆகும். இத்தகைய நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்குகிறது என்கிற போதே பெரியதாக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்தோம்.
அதன்படி, வின்ஃபாஸ்ட் இந்தியாவில் தனது வேலையை செய்ய ஆரம்பித்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என்பதை புரிந்துக் கொண்ட வின்ஃபாஸ்ட் அதனை ஊக்குவிக்கும் விதமாக ஒரு சிறப்பான அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது, பெட்ரோல் வாகனங்களில் இருந்து தங்களது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுபவர்களுக்கு 'வாயுவை மின்சாரத்திற்கு மாற்றவும்' என்கிற பெயரில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இதன்படி, பெட்ரோல் காரை வின்ஃபாஸ்ட் டீலர்ஷிப் ஷோரூமில் கொடுத்து வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறுபவர்களுக்கு பழைய பெட்ரோல் காரின் மதிப்புடன் சேர்த்து அதன் விலையில் 3% குறைத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு வாங்கும் வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் காரின் விலை ரூ.15 லட்சம் என்றால், அதில் 3 சதவீதமான ரூ.45,000 குறைத்துக் கொள்ளப்படும்.
அதுவே, பெட்ரோல் 2-வீலர்களை எக்ஸ்சேஞ்ச் (Exchange) செய்து வின்ஃபாஸ்ட்டின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குபவர்களுக்கு 5% தள்ளுபடி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 'வாயுவை மின்சாரத்திற்கு மாற்றவும்' திட்டம் ஆனது இந்திய மார்க்கெட்டிற்கு என்று பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டது கிடையாது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதன் வாகனங்களை விற்பனை செய்யும் குறிப்பிட்ட நாடுகளில் இதனை அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவும் இந்த திட்டத்தின் கீழ் வருகிறது.

இந்தியா மட்டுமின்றி, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களும் இந்த திட்டத்தின் பலனை பெறுகிறார்கள். வியட்நாம் மற்றும் இந்தோனேசிய நாடுகளில் கூடுதலாக வாகனங்களின் விலையில் சுமார் 10% வரையிலான குறைப்பையும் வின்ஃபாஸ்ட் அறிவித்துள்ளது. இந்திய மார்கெட்டில் கடந்த 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில் நுழைந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம், மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க பல விதமான சலுகைகளை அறிவித்துள்ளது.
அந்த சலுகைகளை பெற்றாலும், புதிய 'வாயுவை மின்சாரத்திற்கு மாற்றவும்' திட்டத்தின் பலனையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் இந்தியாவில் வி.எஃப்6 (VF6) மற்றும் வி.எஃப்7 என்கிற இரு எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வரிசையில் புதியதாக வி.எஃப் இ34, விஎஃப்8, லிமோ க்ரீன், விஎஃப்3 மற்றும் விஎஃப்9 உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களை இந்த 2026ஆம் வருடத்திற்கு உள்ளாக இந்தியாவில் வின்ஃபாஸ்ட் அறிமுகம் செய்ய உள்ளது.
இதில், விஎஃப்3 எலெக்ட்ரிக் கார் ஆனது அளவில் சிறியதாக ரூ.7- 8 லட்சத்தில் பெரும்பாலான மக்கள் வாங்கக்கூடியதாக விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் அறிமுகம் இந்த 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்பட்சமாக அடுத்த 2027ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் பதற்ற சூழலினால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு மத்தியில் வின்ஃபாஸ்ட் இந்த சலுகையை அறிவித்து இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. இது எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி பலத்தரப்பட்ட மக்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அதிக எண்ணிக்கையில் டீலர்ஷிப் ஷோரூம்கள் (Dealership Showrooms) இல்லையென்றாலும், இந்த புதிய சலுகை அறிவிப்பு இந்தியாவில் இந்த வியட்நாம் நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்களை பெற்று தரும் என கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications









