காரின் வெளி தோற்றத்தை பார்த்து எடை போடாதீங்க! தமிழ்நாட்டில் உருவாகும் 7-சீட்டர் காருக்கு புக்கிங் ஓப்பன்!
வின்ஃபாஸ்ட் (VinFast) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அதன் 'விஎஃப் எம்பிவி 7' (VF MPV 7) எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை (Bookings) துவங்கியுள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் 7 இருக்கைகள் கொண்ட புதிய எலெக்ட்ரிக் எம்பிவி ரக காராக ரூ.20- 25 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இதனை பற்றியும், இந்த காரை எவ்வாறு முன்பதிவு செய்வது என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் 7 இருக்கைகள் கொண்ட கார்களுக்கான தேவை சமீப காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. வாங்கும் காரை நன்கு அளவில் பெரியதாக, அதிக பேர் அமரக்கூடியதாக வாங்கவே பலரும் விரும்ப ஆரம்பித்துள்ளனர். அதேநேரம், எலெக்ட்ரிக் கார்களுக்கும் இந்தியாவில் மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருவதால், 7-சீட்டர் காரை எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யும் முயற்சியில் பல கார் நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன.

அவற்றுள் ஒரு நிறுவனமாக வின்ஃபாஸ்ட் அதன் விஎஃப் எம்பிவி 7 என்கிற எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் களமிறக்க தயாராகி வருகிறது. அதிக உட்புற இடவசதி, ஸ்மார்ட் தொழிற்நுட்பங்கள் மற்றும் நடைமுறைக்கேற்ற அம்சங்களுடன் முழுக்க முழுக்க இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ள விஎஃப் எம்பிவி 7 ஆனது வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் இந்தியாவில் களமிறக்கும் மூன்றாவது கார் ஆகும்.
இத்தகைய விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் தான் தற்போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் இன்று (ஏப்ரல் 2) முதல் துவங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் 'https://vinfastauto.in/' என்கிற வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வின்ஃபாஸ்ட் டீலர்ஷிப் ஷோரூம் (Dealership Showroom) மையத்திலோ காரை முன்பதிவு செய்யலாம்.

தற்போதைக்கு இந்தியா முழுவதும் 50 வின்ஃபாஸ்ட் ஷோரூம்கள் மட்டுமே செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முன்பதிவிற்கான டோக்கன் தொகையாக ரூ.21,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை துவங்கியது மட்டுமின்றி, இந்த காரின் அறிமுக தேதியையும் வின்ஃபாஸ்ட் உறுதிப்படுத்தி உள்ளது. இதன்படி, வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஎஃப் எம்பிவி 7 கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அந்த அறிமுக தினத்தில்தான் காரின் விலைகளும் அறிவிக்கப்பட உள்ளன. எங்களுக்கு தெரிந்தவரையில், ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சம் வரையில் விலைகள் நிர்ணயிக்கப்படலாம். புதிய விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரின் டீசர் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், இந்த புதிய எலெக்ட்ரிக் எம்பிவி காரை 'கோல்டன் விகிதம்' என்கிற வடிவமைப்பில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்த டிசைனின்படி, சக்கரங்கள் காரின் நான்கு பக்கங்களிலும் முனைகளில் வழங்கப்பட்டுள்ளன. இதனால், காருக்குள் கேபினின் இடவசதி அதிகரித்துள்ளது. 4,740மிமீ நீளம், 1,872மிமீ அகலம், 1,734மிமீ உயரம் மற்றும் 2,840மிமீ நீளத்தில் வீல்பேஸ் கொண்டதாக புதிய விஎஃப் எம்பிவி 7 கார் உருவாக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் மூன்று வரிசைகளில் 7 இருக்கைகளை கொண்டதாக இந்த எலெக்ட்ரிக் கார் விளங்குகிறது.
19 இன்ச்சில் அளவில் நன்கு பெரியதான அலாய் சக்கரங்கள் உடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய விஎஃப் எம்பிவி 7 எலெக்ட்ரிக் காரில் 60.13kWh திறன் கொண்ட பேட்டரி பேக் கிடைக்கும். இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 500கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பயணிக்கலாம். ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி (Fast Charging Technology) மூலம் இதன் பேட்டரியை 10%-இல் இருந்து வெறும் 30 நிமிடங்களில் 70% சார்ஜ் நிரப்பிவிடலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்சமயம் விஎஃப்6 (VF6) மற்றும் விஎஃப்7 எலெக்ட்ரிக் கார்கள் உடன் செயல்பட்டுவரும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியாக புதியதாக விஎஃப் எம்பிவி 7 என்கிற அளவில் பெரியதான எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது. மற்ற இரு கார்களை போல், இதனையும் வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவந்து தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலையில் முழு காராக உருவாக்கி வின்ஃபாஸ்ட் விற்பனை செய்யும்.
காரின் எதிர்பார்க்கப்படும் விலை புதியதாக சேர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications








