7 பேர் சொகுசா போற மாதிரி எலெக்ட்ரிக் கார்.. அதுவும் கம்மி விலையில.. எப்போ வெளியாகுதுன்னு தெரியுமா?
MPV 7 எலெக்ட்ரிக் காரை ஏப்ரல் 15ம் தேதியன்று இந்தியாவில் வெளியிட்டது வின்ஃபாஸ்ட். வியட்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான இந்த வின்ஃபாஸ்ட், கடந்தாண்டு முதல் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யத் தொடங்கியது. கடந்த ஆண்டு VF 6 மற்றும் VF 7 ஆகிய எலெக்ட்ரிக் கார்களை வெளியிட்ட நிலையில், இந்தியாவில் தங்களது மூன்றாவது எலெக்ட்ரிக் காராக MPV 7-ஐ சமீபத்தில் வெளியிட்டது.
தற்போது இதனைத் தொடர்ந்து புதிதாக லிமோ கிரீன் (Limo Green) என்ற எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது வின்ஃபாஸ்ட். இந்த லிமோ கிரீன் கார் மாடலை இந்திய சாலைகளிலும் அந்நிறுவனம் தற்போது தீவிரமாக சோதனை செய்து வருகிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்தப் புதிய லிமோ கிரீன் எலெக்ட்ரிக் கார் குறித்த தகவல்களை விரிவாக இங்கே நாம் பார்க்கலாம்.

MPV 7 எலெக்ட்ரிக் காரை தனிநபர் பயன்பாட்டு வாகனமாக வெளியிட்டது வின்ஃபாஸ்ட். அதே மாடலையே வணிகப் பயன்பாட்டிற்காக லிமோ கிரீன் என்ற பெயரில் வெளியிடவுள்ளது. அதே மாடல் என்னும் போது, அதே கார் அப்படியே வெளியிடப்படும் என நினைக்க வேண்டும். டிசைன் முதல் வசதிகள் வரை அனைத்தும் அடிப்படையாகவே கொடுக்கப்படும். இதனால் குறைவான விலையிலும் இத்தகைய வணிகப் பயன்பாட்டிற்காக வெளியிடப்படும் கார்களை விற்பனை செய்ய முடியும்.
மாருதி சுஸூகி இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் வேகன் ஆர், ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் ஆகிய கார் மாடல்களின் வணிகப் பயன்பாட்டு வெர்ஷன்களையும் டூர் H3, டூர் H1 மற்றும் டூர் S என்ற பெயர்களில் குறைவான விலையில் விற்பனை செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ், டொயோட்டா மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களும் கூட இது போல வணிகப் பயன்பாட்டு கார்களை விற்பனை செய்து வருகின்றன.

சமீபத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் தங்களது விண்ட்ஸர் EV கார் மாடலின் வணிகப் பயன்பாட்டு வெர்ஷனை ரூ.60,000 வரை குறைவான விலையல் எம்ஜி கம்யூட் என்ற பெயரில் வெளியிட்டது. அந்த வகையில் வின்ஃபாஸ்ட் நிறுவனமும் இந்தியாவில் தங்களுடைய முதல் வணிகப் பயன்பாட்டு எலெக்ட்ரிக் கார மாடலாக லிமோ கிரீனை வெளியிடவுள்ளது.
MPV 7 எலெக்ட்ரிக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 60.13 kWh பேட்டரி பேக் மற்றும் அதே எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் ஆகியவையே புதிய லிமோ கிரீன் எலெக்ட்ரிக் காரிலும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேஞ்சும் 517 கிமீ என்ற அளவில் இருக்கலாம் என்றே தெரிகிறது. ஆனால், லிமோ கிரீன் எம்பிவி காருக்கு தனி ARAI ரேஞ்சைப் பெறுவோம் என வின்ஃபாஸ்ட் தெரிவித்திருக்கிறது. இதனால் கூடுதல் ரேஞ்சைக் கூட இந்தக் கார் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக MPV 7-ல் இருந்து வேறுபட்ட குறைவான பவர் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கூட லிமோ கிரீனில் கொடுக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. MPV 7 எலெக்ட்ரிக் காரில், 204 hp பவர் மற்றும் 280 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. லிமோ கிரீனின் செட்டப் என்னவென்று தெரிந்து கொள்ள வெளியீடு வரை நாம் காத்திருக்க வேண்டும்.
லிமோ கிரீனிலும் மூன்று வரிசையாக ஏழு சீட்கள் கொண்ட லேஅவுட்டே இருக்கும். MPV 7-ல் ப்ரீமியமான டூயல் டோன் இன்டீரியர் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், லிமோ கிரீனில் சிம்பிளாக கருப்பு நிற இன்டீரியர் கொடுக்கப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. மாருதி சுஸூகியின் வணிகப் பயன்பாட்டு கார்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருக்கும். வின்ஃபாஸ்ட் நிறுவனம் வெளிநாடுகளில் தங்கள் வணிகப் பயன்பாட்டு கார்களுக்கு சியான் நிறத்தைப் பயன்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் அதே நிறத்திலேயே புதிய காரை அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஸ்பைஷாட்டில் சிக்கியிருக்கும் புகைப்படத்திலும் சியான் நிறம் கொண்ட லிமோ கிரீன் மாடலே சோதனை செய்யப்பட்டு வருவது பதிவாகியிருக்கிறது. ஸ்டீல் வீல்களில் தொடங்கி, உட்புற வசதிகள் வரை அனைத்தும் அடிப்படையான ஒன்றாகவே புதிய காரில் கொடுக்கப்பட்டிருக்கும்.
இப்படி குறைவான வசதிகளைக் கொடுப்பதனால், மேலே கூறியது போல குறைவான விலையிலும் இந்த எலெக்ட்ரிக் காரை வின்ஃபாஸ்ட் நிறுவனத்தால் வெளியிட முடியும். சமீபத்தில் வெளியான அந்நிறுவனத்தின் MPV 7 எலெக்ட்ரிக் காரானது ரூ.24.49 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. புதிய லிமோ கிரீன் கார் மாடலானது இதனை விடக் குறைவான விலையிலேயே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை தீவிரமடைந்திருப்பதால் விரைவிலேயே இந்த எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டை இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எரிபொருள் கார்களைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் கார்களும் கொஞ்சம் கொஞ்சமாக வணிகப் பயன்பாட்டு சந்தையில் நுழைந்து வருகின்றன. இந்திய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் குறைவான விலை மற்றும் வழக்கமான எஸ்யூவி, செடான் என்ற ஓடிக் கொண்டிருக்கும் போது, வெளிநாட்டு நிறுவனங்களான எம்ஜி மோட்டார், வின்ஃபாஸ்ட் ஆகியவை சந்தையின் நிலையறிந்து செயல்பட்டு வருகின்றன.
எங்கெல்லாம் இந்திய தயாரிப்பாளர்கள் இல்லாமல் இடைவெளி இருக்கிறதோ, அங்கெல்லாம் புகுந்து அடிக்கிறார்கள். எலெக்ட்ரிக் கார்களை வணிகப் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்துவது குறித்து இந்திய நிறுவனங்கள் சிந்திக்கின்றனவா என்று கூட தெரியாத நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் அந்த சந்தையில் கால் பதிக்கத் தொடங்கி விட்டன.


Click it and Unblock the Notifications