7 பேர் போற மாதிரி 450 கிமீ ரேஞ்சோட சூப்பர் எலெக்ட்ரிக் கார்.. ஏப்ரலில் வெளியாகுது!
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தங்களது முதல் எலெக்ட்ரிக் எம்பிவி கார் மாடலை இந்த ஏப்ரல் மாதம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 7 சீட்டர் மாடல் இந்தியாவில் வெளியிடப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் கசிந்து வந்த நிலையில், தற்போது வெளியாகவிருக்கிறது. வணிகப் பயன்பாடு மற்றும் தனிநபர் பயன்பாடு என இந்த ஒரே மாடலையே இரண்டு விதமாக இந்தியாவில் பிராண்டிங் செய்யத் திட்டமிட்டிருக்கிறது வின்ஃபாஸ்ட்.
வணிகப் பயன்பாட்டிற்கு லிமோ கிரீன் (Limo Green) என்ற பெயரிலும், தனிநபர் பயன்பாட்டிற்கு MPV7 என்ற பெயரிலும் புதிய எம்பிவி காரை வின்ஃபாஸ்ட் வெளியிடலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எம்பிவி கார் மாடல்களான, கியா கேரன்ஸ் கிளாவிஸ் EV, மஹிந்திரா XEV 9S மற்றும் BYD eMAX 7 ஆகிய கார்களுக்குப் போட்டியாக வெளியாகவிருக்கிறது புதிய வின்ஃபாஸ்ட் MPV7/ லிமோ கிரீன்.

தற்போது இந்தியாவில் VF6 மற்றும் VF7 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது வின்ஃபாஸ்ட். இந்த இரண்டு மாடல்களும் கடந்தாண்டு தான் இந்தியாவில் வெளியிடப்பட்டன. லிமோ கிரீன் இந்தியாவிற்கு இன்னும் வரவில்லை என்றாலும், சர்வதேச அளவில் பல நாடுகளில் ஏற்கனவே விற்பனையில் இருக்கிறது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் VF6 மற்றும் VF7 கார் மாடல்களுக்கும் லிமோ கிரீனின் டிசைனுக்கும் நிறையவே ஒற்றுமைகள் இருக்கின்றன. பார்த்தவுடன் அதுவொரு வின்ஃபாஸ்ட் கார் என்பதை சொல்லாமலேயே தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது.
உட்புறமும் சரி, வெளிப்புறமும் சரி, மினிமலிஸ்டிக்கான டிசைனையே கொண்டுள்ளது லிமோ கிரீன். குறிப்பாக டேஷ்போர்டு லேஅவுட் மிகவும் கிளீனாக இருக்கிறது. 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது, டிரைவர்ஸ் டிஸ்பிளே இல்லை. அதற்கு மாற்றாக VF6 மற்றும் VF7 கார்களில் கொடுக்கப்பட்டதைப் போலவே ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதவிர சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் இந்த MPV7/ லிமோ கிரீன் கார் மாடலில், 4 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 4 ஏர்பேக்குகள், EBD-யுடன் கூடிய ABS, ஸ்டீயரிங் மவுண்டட் கண்ட்ரோல்கள் ஆகிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச MPV7 மாடலில் 60.13 kWh பேட்டரி பேக் மற்றும் முன்பக்க வைக்கப்பட்டிருக்கும் ஒரேயொரு எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட பவர்ட்ரெயின் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டாரானது 204 hp பவர் மற்றும் 280 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த செட்டப்பானது 450 கிமீ வரையிலான NEDC சான்றளிக்கப்பட்ட ரேஞ்சைக் கொண்டுள்ளன. இதன் பேட்டரி பேக்கை 80 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 10% முதல் 70% வரை வெறும் 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது வின்ஃபாஸ்ட். இதே பவர்ட்ரெயின் அம்சங்களே இந்தியாவில் வெளியிடப்படும் மாடலிலும் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் இந்த எலெக்ட்ரிக் காருக்கு எக்ஸ்-ஷோரூம் விலையில் 75% வரையிலான பைபேக் திட்டம், எரிபொருள் காரில் இருந்து மாறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை சிறப்புத் தள்ளுபடி, 2029ம் ஆண்டு வரை இலவச சார்ஜிங் மற்றும் 10 ஆண்டுகள் வாரண்டி ஆகிய சலுகைகளை வழங்கியிருக்கிறது. இந்தியாவிலும் VF6 மற்றும் VF7 ஆகிய மாடல்களுக்கும் இதனைப் போலவே கடந்தாண்டு சலுகைகள் வழங்கியது வின்ஃபாஸ்ட். எனவே புதிய MPV7 கார் மாடலுக்கு மேலே கூறியது போலான சலுகைகளை நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக மாற அனைத்து விதமான முயற்சிகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது வின்ஃபாஸ்ட். மூன்றாவது காராக புதிய MPV7-ஐ வெளியிடுகிறது. போட்டியாளர்களின் தயாரிப்புகளை ஒட்டிய விலை, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வகையிலான அம்சங்களையே தங்களது முந்தைய கார்களில் கொடுத்திருக்கிறது. புதிய காரிலும் அதுவே எதிர்பார்க்கப்படுகிறது. ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் செண்டர்களை மட்டுமே நாடு முழுவதும் விரிவுபடுத்தும் பட்சத்தில் வின்ஃபாஸ்டுக்கான வாய்ப்புகள் பிராகாசமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








