வேற வழியில்லை... இந்தியாவுக்காக 2 புதிய மலிவு விலை எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் வின்ஃபாஸ்ட்!
வியட்நாமைச் சேர்ந்த பிரபல எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்தியாவுக்காக குறைவான விலையில் இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சர்வதேச சந்தையில் உள்ள மாடல்களை இந்தியாவில் முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து அசெம்பிள் செய்து வரும் அந்நிறுவனம், செலவுகளை கட்டுப்படுத்தி இந்திய வாடிக்கையாளர்களுக்கு தோதான விலையில் வழங்குவதற்காக முழுக்க முழுக்க இந்தியாவிலேயே 2 புதிய கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த புதிய கார்கள் விஎஃப் எக்ஸ் (VF X) மற்றும் விஎஃப் ஒய் (VF Y) என்ற குறியீட்டுப் பெயரில்களில் அழைக்கப்படுகிறது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சந்தைப் போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களுக்கு சரியான விலையில் வழங்குவதற்கும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு இதுதான் ஒரே வழியாக உணர்ந்து கொண்டு இந்த 2 பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்களையும் உருவாக்கி வருவது தெரிய வந்துள்ளது.

(Representational Image)
வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது சர்வதேச அளவில் விற்பனையில் உள்ள விஎஃப் 3, விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7 ஆகிய கார்களுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களை அதிக அளவில் பயன்படுத்த திட்டமிட்டது. இதற்காக, இந்தியாவில் உள்ள உதிரிபாகங்கள் சப்ளையர்களிடமும் இதற்கான பணிகளை கொடுத்திருந்தது. ஆனால், இந்தியாவில் பெறக்கூடிய உதிரிபாகங்களை வைத்து தூத்துக்குடி ஆலையில் உற்பத்தி செய்தால் விலை கட்டுப்படியாகாத நிலை இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, விஎஃப் 3, விஎஃப் 6 மற்றும் விஎஃப் 7 ஆகிய கார்களுக்கான உதிரிபாகங்களை உருவாக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு இந்திய சப்ளையர்களிடம் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கேட்டுக்கொண்டது. எனினும், வெளிநாட்டில் இருந்து முக்கிய பாகங்களாக இந்த கார்களை தயாரிக்கும் பணிகளை தொடர்ந்து செய்யப்படும் என்றும் வின்ஃபாஸ்ட் கூறியது.

இந்த நிலையில், மேற்கண்ட கார்களுக்கு உதிரிபாகங்களை பெற்று உள்நாட்டு தயாரிப்பாக மாற்றுவதில் சவால்கள் இருப்பதை உணர்ந்து கொண்டு தற்போது இந்தியாவிலேயே 2 கார்களை உருவாக்கி வருகிறது. புதிதாக தயாராகும் இரண்டு மாடல்களில் விஎஃப் எக்ஸ் என்ற குறியீட்டுப் பெயரில் தயாராகும் கார்தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.10 லட்சம் விலையில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான நோக்கத்துடன் வின்ஃபாஸ்ட் செயல்பட்டு வருகிறது.
விஎஃப் 3 மைக்ரோ எஸ்யூவியை விட பெரியதாகவும், விஎஃப் 6 மாடலை விட சிறியதாகவும் இருக்கும். அதாவது, இந்திய குடும்பங்களுக்கு தேவையான தாராளமான உட்புற இடவசதியை வழங்கும் அதே வேளையில், பட்ஜெட் விலையிலும் கிடைக்கும். இது சந்தைக்கு வரும் பட்சத்தில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் காருக்கும், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கும் போட்டியாக இருக்கும்.
இதனிடையே, இரண்டாம் கட்ட விரிவாக்கத் திட்டங்களை வின்ஃபாஸ்ட் தீவிரமாக செயல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள கார் ஆலைக்கு பக்கத்திலேயே எலெக்ட்ரிக் பஸ் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான ஆலையை அமைக்கும் திட்டங்களையும் கையில் எடுத்துள்ளது.
இதற்காக, ரூ.7,000 கோடி வரை கூடுதலாக முதலீடு செய்ய உள்ளது. இதனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூத்துக்குடி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது.
Source: Reuters


Click it and Unblock the Notifications


