ரூ.10 லட்சத்தில் வரும் VinFast VF 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை... Tata Punch EV-க்கு செக்!
இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கடந்த மாதம் அந்நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை புதிய உச்சத்தை தொட்டது. இந்த நிலையில், விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக பல புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், டாடா பன்ச் எலெக்ட்ரிக் காருக்கு நேர் போட்டியான விலையில் புதிய மாடலை வின்ஃபாஸ்ட் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் சிறிய வகை எலெக்ட்ரிக் கார் மாடலாக எதிர்பார்க்கப்படும் இந்த கார் தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அண்மையில் பெங்களூரில் வைத்து சாலை சோதனை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதனால், மிக விரைவில் விலை அடிப்படையில் இந்த கார் டாடா பன்ச் எலெக்ட்ரிக் மாடலுக்கு நெருக்கடி கொடுக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

ஹேட்ச்பேக் கார்
தற்போது VF6, VF7 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களை வின்ஃபாஸ்ட் இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில், புதிய கார் மாடல் VF5 என்ற பெயரில் வர இருக்கிறது. இது ஹேட்ச்பேக் ரக வடிவமைப்புடன் வெளிநாடுகளில் இருக்கிறது. சர்வதேச சந்தையில் சிறிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்காக விற்பனை செய்யப்பட்டாலும், அதன் உயரமான பாடி அமைப்பு மற்றும் எஸ்யூவி போன்ற தோற்றம் காரணமாக இந்தியாவில் இது டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் உள்ளிட்ட விலை குறைவான எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய வாய்ப்புள்ளது.
வெளிநாடுகளில் உள்ள VF 5 எலெக்ட்ரிக் கார் 3,967 மிமீ நீளமும், 1,723 மிமீ அகலமும், 1,579 மிமீ உயரமும் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 2,514 மிமீ ஆக உள்ளது. இதன் பூட் ஸ்பேஸ் 260 லிட்டர். Tata Punch EV-ஐ விட சில பரிமாணங்களில் மாறுபட்டாலும், இரண்டுமே நகர்ப்புற பயன்பாட்டை மையமாகக் கொண்ட சிறிய எலெக்ட்ரிக் கார்களாக இருப்பதால் நேரடி போட்டி உருவாகும் என கருதப்படுகிறது.

பேட்டரி ஆப்ஷன்கள்
சர்வதேச சந்தையில் VF 5 எலெக்ட்ரிக் கார் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த காரில் 29.6 kWh பேட்டரி கொண்ட ஆரம்ப நிலை மாடலில் 95 எச்பி மின்மோட்டார் மற்றும் 135 என்எம் டார்க் வழங்கும் வகையில் உள்ளது. இந்த மாடல் ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் NEDC சோதனை முறையில் 268 கி.மீ. வரை ரேஞ்ச் வழங்குவதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு மாடலில் 37.23 kWh பேட்டரி மற்றும் 136 எச்பி பவரையும், 135 என்எம் டார்க்கையும் வழங்கும் மின்மோட்டார் உள்ளது. பெரிய பேட்டரி கொண்ட மாடல் NEDC முறையில் 326 கி.மீ. வரை ரேஞ்ச் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் எந்த பேட்டரி ஆப்ஷன் வழங்கப்படும் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்திய மாடலில் மாற்றங்கள்?
சமீபத்திய சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களில் காரின் தோற்றம் சர்வதேச மாடலைவிட சில மாற்றங்களைக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக முன்புறம், பின்புற பம்பர் மற்றும் கேபின் வடிவமைப்பில் மாற்றங்கள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
சர்வதேச மாடலில் 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரையும், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 6 ஏர்பேக்குகள், ABS, EBD, ESC உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுகின்றன. இந்திய மாடலில் இதே அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கும் விலை?
இந்தியாவில் புதிய VF 5 எலெக்ட்ரிக் கார் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலைப்பிரிவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் வந்தால், டாடா பன்ச் எலெக்ட்ரிக், டாடா டியாகோ எலெக்ட்ரிக் போன்ற மாடல்களுக்கு போட்டியை தரும்.
குறிப்பாக இந்தியாவில் சிறிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் மாடல்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், குறைந்த விலை, நல்ல ரேஞ்ச் மற்றும் அதிக வசதிகளுடன் VF 5 வந்தால் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு இது முக்கியமான மாடலாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த கார் தூத்துக்குடியில் உள்ள வின்ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.
Images Source: Team BHP


Click it and Unblock the Notifications


