தூத்துக்குடியில் தயாராகும் காருக்கு இந்திய அளவில் கிடைத்த பெருமை! 5-ஸ்டார் ரேட்டிங்கை ஈசியா தூக்கி கொடுத்திடல!
வின்ஃபாஸ்ட் விஎஃப்7 (VinFast VF7) எலெக்ட்ரிக் எஸ்யூவி, புதிய கார்களின் தரத்தை மதிப்பீடு செய்யும் பாரத் என்சிஏபி (Bharat NCAP) கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. பாரத் என்சிஏபி என்கிற இந்தியாவின் நவீன மோதல் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்ற எலெக்ட்ரிக் கார்களில் இதுவும் ஒன்றாகும். 2025 நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட மோதல் சோதனைகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடுகள் வழங்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
வின்ஃபாஸ்ட் விஎஃப்6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரும் இந்தச் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விஎஃப்7 காரின் 'எர்த்', 'வின்ட்', 'வின்ட் இன்ஃபினிட்டி', 'ஸ்கை' மற்றும் 'ஸ்கை இன்ஃபினிட்டி' ஆகிய ஐந்து வேரியண்ட்களும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவருக்குமான பாதுகாப்புப் பிரிவுகளில் தலா ஐந்து நட்சத்திரங்களைப் பெற்று, அதன் கட்டமைப்பு வலிமையையும் பாதுகாப்புத் தரத்தையும் உறுதிப்படுத்தியுள்ளன.

பெரியவர்களின் பாதுகாப்பு (AOP) பிரிவில், விஎஃப்7 ஆனது அதிகபட்சமாக 32 புள்ளிகளுக்கு 28.54 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதில், தடுப்பின் மீது காரின் முன்பக்கத்தை மோத விட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 16-க்கு 12.54 புள்ளிகளை இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. ஓட்டுநரின் மார்புப் பகுதிக்கு சற்று பலவீனமான பாதுகாப்பு இருந்ததால் சில புள்ளிகள் குறைந்துள்ளன.
இருப்பினும், முன் இருக்கை பயணிகளின் கணுக்கால் பகுதிகளுக்கு போதுமான பாதுகாப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நகரும் தடுப்பின் மீது காரின் பக்கவாட்டு பகுதியை மோத விட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விஎஃப்7 முழு 16/16 புள்ளிகளைப் பெற்று ஆச்சிரியப்படுத்தி உள்ளது. மேலும், பக்கவாட்டு தூண் மோதல் சோதனையிலும் இந்த கார் ஏற்றுக்கொள்ளக்கூடிய மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

குழந்தைகளின் பாதுகாப்பு (COP) பிரிவில், விஎஃப்7 ஆனது அதிகபட்சம் 49 புள்ளிகளுக்கு 45.25 புள்ளிகளைப் பெற்று வலுவான பாதுகாப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளது. டைனமிக் மோதல் சூழ்நிலைகளிலும், குழந்தை பாதுகாப்பு அமைப்பு இணக்கத்தன்மையிலும் இந்த கார் சிறந்ததாக உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு (CRS)-ஐ நிறுவும் சோதனையில் விஎஃப்7 முழு 12/12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
மேலும், டைனமிக் சோதனையில் 24-க்கு 23.25 புள்ளிகளையும், வாகன மதிப்பீட்டில் 13-க்கு 10 புள்ளிகளையும் பெற்று, இந்தப் பிரிவில் அதன் சிறந்த பாதுகாப்பு மதிப்பீடுகளை வெளிப்படுத்தி உள்ளது. டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV) மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) போன்ற விற்பனையில் போட்டியாக உள்ள எலெக்ட்ரிக் கார்களை விட விஎஃப்7 காரின் COP மதிப்பீடு 0.25 புள்ளிகள் அதிகமாகும்.

விஎஃப்7 காரின் அனைத்து வேரியண்ட்களிலும், ஏழு ஏர்பேக்குகள், குழந்தை இருக்கைக்கான ISOFIX ஹேங்கர்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் மோதலைத் தவிர்க்கும் பிற ஆக்டிவ் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற விரிவான பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக வழங்கப்படுகின்றன. விஎஃப்6 மற்றும் விஎஃப்7 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களையும் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் ஒழுங்குமுறைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப் போவதாக வின்ஃபாஸ்ட் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன் மூலமாக தற்போது இந்த உயரிய மதிப்பீடு கிடைத்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார்களின் விலைகள் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 2025 நவம்பரில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டதாக பாரத் என்சிஏபி தெரிவித்துள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதன் கார்களை பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள அதன் தொழிற்சாலையில் வைத்து முழு காராக உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 5 நட்சத்திர மதிப்பீடு, இந்தியாவிற்கான அதன் கார்களுக்கு உச்சப்பட்ச பாரத் NCAP மதிப்பீடுகளைப் பெறும் வின்ஃபாஸ்ட்டின் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. மேலும் இந்த மதிப்பீடானது நேரடியாக விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். வின்ஃபாஸ்ட் விஎஃப்6 எலெக்ட்ரிக் காரின் பாரத் என்சிஏபி மோதல் முடிவுகள் குறித்து தனியாக ஒரு தொகுப்பில் விரிவாக விளக்கி கூறியுள்ளோம்.


Click it and Unblock the Notifications









