500 கிமீ ரேஞ்சு.. 30 நிமிடங்களில் சார்ஜ் ஆகும் வசதியுடன் வெளியானது புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி
வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் சர்வதேச அளவில் தாங்கள் விற்பனை செய்து வரும் VF8 என்ற ப்ரீமியம் மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்படுத்தியிருக்கிறது. இரண்டாம் தலைமுறை VF8 எஸ்யூவி தற்போது வியட்நாமில் வெளியிடப்பட்டுள்ளது. புதுமையான டிசைனுடன் முன்பை விட சற்று சிறிய அளவில் இந்த இரண்டாம் தலைமுறை VF8 எஸ்யூவியை வடிவமைத்துள்ளது வின்ஃபாஸ்ட். இந்த எலெக்ட்ரிக் கார் குறித்த முழுமையான விவரங்களை இங்கே நாம் பார்க்கலாம்.
இந்த இரண்டாம் தலைமுறை VF8 எஸ்யூவியை அப்கிரேடு என்று சொல்வதா அல்லது டவுன்கிரேடு என்று சொல்வதா எனத் தெரியவில்லை. ஆனால் முதல் தலைமுறை காரை விட பல இடங்களில் இரண்டாம் தலைமுறை கார் சற்று கீழேயே இறங்கியிருக்கிறது. வியட்நாம் எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப இந்த மாற்றங்களை வின்ஃபாஸ்ட் செய்திருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முதலில் அளவுகள். முந்தைய காரை விட சற்று சிறியதாகவே புதிய இரண்டாம் தலைமுறை VF8 எலெக்ட்ரிக் எஸ்யூவி இருக்கிறது. நீளம் 49 மிமீ வரை குறைந்து 4,701 மிமீ ஆக உள்ளது. அகலம் 62 மிமீ வரை குறைந்து 1,872 மிமீ ஆக உள்ளது. உயரம் 3 மிமீ வரை உயர்ந்து 1,670 மிமீ ஆக உள்ளது. வீல்பேஸின் அளவு 110 மிமீ வரை குறைந்து 2,840 மிமீ ஆக உள்ளது.
அளவில் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மஹிந்திரா XUV 7XO எஸ்யூவிக்குப் போட்டியாக இந்த வின்ஃபாஸ்ட் VF8 காரைக் கூறலாம். நீளம் மற்றும் வீல்பேஸ் அளவில் VF8 சற்று பெரிதாக இருக்கும் நிலையில், அகலம் மற்றும் உயரத்தில் XUV 7XO சற்று பெரிதாக இருக்கிறது.

இப்போது பவர்ட்ரெயினுக்கு வருவோம். முதல் தலைமுறை காரில் 87.7 kWh பேட்டரி பேக் தேர்வு கொடுக்கப்பட்டு வந்த நிலையில், புதிய இரண்டாம் தலைமுறை காரில் 60.13 kWh பேட்டரி பேக் தேர்வே கொடுக்கப்பட்டிருக்கிறது. முதல் தலைமுறை காரானது ஃப்ரண்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் இரண்டு விதமான டிரைவ் தேர்வுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இரண்டாம் தலைமுறை காரில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் வசதியை மட்டுமே வின்ஃபாஸ்ட் கொடுத்திருக்கிறது.
இந்த இரண்டாம் தலைமுறை VF8 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மோட்டாரானது 228 hp பவர் மற்றும் 330 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. முதல் தலைமுறை காருடன் ஒப்பிடும் போது இது 18 hp மற்றும் 20 Nm கூடுதல் பவர் மற்றும் டார்க் அளவுகளாகும். இந்தப் புதிய பவர்ட்ரெயின் செட்டப்பானது 500 கிமீ வரையிலான சான்றளிக்கப்பட்ட ரேஞ்சையே கொண்டுள்ளது. முந்தைய வெர்ஷனை விட 62 கிமீ குறைவாகும்.
டிசைனில் தான் முந்தைய தலைமுறை காரில் இருந்து மேம்படுகிறது இரண்டாம் தலைமுறை VF8. புதிய காரின் முகப்புப் பக்கத்தில் கிரில் மற்றும் பம்பர் இரண்டும் சேரும் வகையில் ஒரே யூனிட்டாக கருப்பு நிறத்தில் பெரிதாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் இரண்டு பக்க முடிவிலும் முகப்பு விளக்குகளும் அதற்கு மேலே LED DRLலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. காரின் முழுமையான அகலத்திற்கு நீளும் சிறிய லைட் ஸ்ட்ரிப் அகலமான V வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
காரின் பின்பக்கமும் விளக்குகள் மற்றும் பம்பர் பகுதியில் கருப்பு நிறத்தின் பயன்பாடு அதிகம் இருக்கிறது. பின்பக்க விளக்குகளும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு காரின் அகலத்திற்கு பெரிய V வடிவில் நீளும் லைட் ஸ்ட்ரிப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த V வடிவ லைட் ஸ்ட்ரிப்புகள் முந்தைய மாடலிலும் இருந்த ஒரு டிசைன் தான். பக்கவாட்டில் அலாய் வீல்களும் புதிய வடிவில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தனிப்பட்ட முறையில் முதல் தலைமுறை காரின் டிசைனே எனக்குப் பிடித்திருக்கிறது. அதிகளவிலான கருப்பு நிற பயன்பாடு காரின் கேரக்டரையே மறைக்கும் வகையில் இருக்கிறது. முகப்பு பக்கம், பின்பக்க டிசைன் மற்றும் அலாய் வீல்கள் என எல்லாமே முந்தைய தலைமுறை மாடலில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
காரின் உட்புறமும் இந்த டவுன்கிரேடு தொடர்கிறது. 15.6 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளேவிற்குப் பதிலாக 12.9 இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்பிளே கொடுக்கப்பட்டிருக்கிறது. VF8 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் உட்புற டிசைனையும் முழுமையாக மறுவடிவமைப்பு செய்துள்ளது வின்ஃபாஸ்ட். இத்துடன், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், ஏர் ப்யூரிஃபையர், 6 வே பவர்டு டிரைவர் சீட், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்டு சிஸ்டம், ADAS பாதுகாப்பு அம்சங்கள், 360 டிகிரி கேமரா மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகிய வசதிகளும் புதிய காரில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தத்தில் இதனை ஒரு சிறப்பான அப்கிரேடு என்று கூற முடியாது. இந்த மாற்றங்களுக்குப் பிறகு இரண்டாம் தலைமுறை VF8 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் விலையும் சற்று உயர்ந்திருக்கிறது. இந்திய மதிப்பிற்கு 36.5 லட்சம் ரூபாய் என்ற விலையில் புதிய கார் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்தக் VF8 எலெக்ட்ரிக் எஸ்யூவியை வின்ஃபாஸ்ட் வெளியிடுவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வியட்நாம் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்பவே இந்தக் காரில் வின்ஃபாஸ்ட் மாற்றங்களைச் செய்திருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இந்தியாவிற்கு தனி எலெக்ட்ரிக் வாகன திட்டங்களை வைத்திருக்கிறது வின்ஃபாஸ்ட். அதில் சிறிய ரக VF3 எலெக்ட்ரிக் காரும் அடங்கும். அந்தக் காருக்காகவே இந்திய வாடிக்கையாளர்கள் இப்போது ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications