டொயோட்டா கம்பெனிக்கு இப்போவே அல்லு விட்ருக்கும்! இப்போதைக்கு 51 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும்!!
இந்தியாவில் சற்று விலையுயர்ந்த எஸ்யூவி (SUV) கார் மாடலாக அறிமுகம் செய்யப்படவுள்ள டைரான் ஆர்-லைன் (Tayron R-Line) காருக்கான முன்பதிவுகளை ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த வாகனம் இந்தியாவில் சிகேடி (Completely Knocked Down) முறையில், வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவரப்பட்டு, ஃபோக்ஸ்வேகனின் இந்திய ஆலையில் அசெம்பிள் (Assemble) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு 2026 மார்ச்சில் திட்டமிடப்பட்டுள்ளது. தற்சமயம், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டைகுன் (Taigun), விர்டுஸ் (Virtus), டிகுவான் ஆர்-லைன் (Tiguan R-Line) மற்றும் கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) போன்ற கார் மாடல்களை விற்பனை செய்கிறது. டைரான் ஆர்-லைன் (Tayron R-Line) காரின் வருகையுடன், இந்த நிறுவனம் தனது பிரீமியம் கார்கள் வரிசையை விரிவுபடுத்துகிறது.

இது ஃபோக்ஸ்வேகனின் உயர்தர காராக, உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்பட்ட மாடலாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தற்போது, டைரான் ஆர்-லைன் காருக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டீலர்ஷிப் ஷோரூம்கள் (Dealership Showrooms) மூலமாகவோ அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ ரூ.51,000 முன்பணமாக செலுத்தி இந்த எஸ்யூவி காரை முன்பதிவு (Booking) செய்யலாம்.
பிரீமியம் எஸ்யூவி கார்கள் பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள டைரான் ஆர்-லைன், வலிமையான செயல்திறன், துல்லியமான கண்ட்ரோல் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை வழங்குகிறது. உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுவதால், இது பிரீமியம் தோற்றத்திற்கும், குறைவான விலைக்கும் இடையில் ஒரு சரியான சமநிலையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டைரான் ஆர்-லைன் கார் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்குகிறது. அதிகப்பட்சமாக 204 பிஎஸ் ஆற்றலையும், 320 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி (DSG) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகனின் '4மோஷன் ஆல்-வீல்-டிரைவ்' (4MOTION All-wheel-drive) அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.
0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை வெறும் 7.3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எஸ்யூவி காரின் அதிகபட்ச வேகம் 224 கிமீ/மணி ஆகும். தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய டைரான் ஆர்-லைன் ஆனது 15-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 'வரீன்னா' (Varenna) லெதரெட் இருக்கைகள் மற்றும் 30-வண்ண கேபின் லைட்டிங் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும்.

காருக்குள் முன் இருக்கைகள் காற்றோட்டம் (Ventilated), மசாஜ் (Massage) மற்றும் மெமரி (Memory) செயல்பாடுகளுடன் பவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்யக் கூடியதாகவும், பனோரமிக் சன்ரூஃப், பல டிரைவிங் மோட்கள், ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் 3-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களில் லெவல்-2 அடாஸ் (ADAS), பார்க் அசிஸ்ட் பிளஸ், காரை பார்க் செய்த பின் பயணிகள் வெளியேறுவது தொடர்பான எச்சரிக்கை அமைப்பு, 9 ஏர்பேக்குகள், ஒளிரும் ஃபோக்ஸ்வேகன் லோகோ மற்றும் முழு LED லைட்டிங் ஆகியவை அடங்கும். புதிய டைரான் ஆர்-லைன் கார் ரூ.45-50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி (Full-size SUV) கார் மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq), எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster) மற்றும் ஜீப் மெரிடியன் (Jeep Meridian) போன்ற கார்களுக்கு போட்டியாக களமிறங்கும் ஃபோக்ஸ்வேகன் டைரான் ஆர்-லைன் ஆனது தற்சமயம் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் புதிய கார் அறிமுகங்களில் ஒன்றாகும். இத்தகைய காருக்கு தான் தற்போது புக்கிங் துவங்கப்பட்டு உள்ளதால், நிறைய பேர் இந்த காரை முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









