600 கி.மீ ரேஞ்ச்.. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம்!
மின்சார கார் சந்தையில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய ஐடி டிகுவான் (Volkswagen ID. Tiguan) எலெக்ட்ரிக் எஸ்யூவியை சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பிரபலமான டிகுவான் பெயரில் உருவாகியுள்ள இந்த மின்சார கார், அதிகபட்சமாக சுமார் 600 கி.மீ ரேஞ்ச், சக்திவாய்ந்த மின்மோட்டார் மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதியுடன் கவனம் பெற்றுள்ளது.
இந்த புதிய மாடல் முதலில் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. அங்கு 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மற்ற சர்வதேச சந்தைகளிலும் 2027ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. இருப்பினும், எதிர்காலத்தில் இந்த மாடல் இந்தியாவுக்கு வரும் வாய்ப்புள்ளது.

பவர்ஃபுல் மாடல்
புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி டிகுவான் மின்சார எஸ்யூவி, எம்இபி பிளஸ் (MEB+) கட்டமைப்பு தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பவர் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. தொடக்க நிலை மாடலில் 58kWh பேட்டரி மற்றும் 190 எச்பி பவர் கிடைக்கிறது. அடுத்த நிலையில் 77kWh பேட்டரி, பின்சக்கர இயக்கம் மற்றும் 286 எச்பி பவர் வழங்கப்படுகிறது.
அதிக செயல்திறன் கொண்ட மாடலில் 77kWh பேட்டரியுடன் இரண்டு மின்மோட்டார்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் 299 எச்பி பவர் கிடைப்பதுடன், ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த மாடல் அனைத்து சக்கரங்களுக்கும் சக்தியைப் பகிர்ந்து செலுத்துவதால், பல்வேறு சாலை நிலைகளில் சிறப்பான பிடிப்பையும் சிறந்த பாதுகாப்பு மற்றும் ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும்.
பேட்டரி தேர்வைப் பொறுத்து, இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 600 கி.மீ வரை பயணிக்கும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது. இந்த ரேஞ்ச் ஐரோப்பாவின் டபிள்யூஎல்டிபி (WLTP) சோதனை முறையை அடிப்படையாகக் கொண்டது. நடைமுறை பயன்பாட்டில் ஓட்டும் முறை, வானிலை மற்றும் சாலை நிலைகளைப் பொறுத்து ரேஞ்ச் மாறுபடும்.

நவீன தொழில்நுட்ப வசதிகள்
இந்த எஸ்யூவியில் ஐந்து பேர் வசதியாகப் பயணிக்கும் வகையில் கேபின் அமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் திரை, 15 அங்குல மையத் தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முன்பக்க பயணிக்கான 12 அங்குலத் திரை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், மசாஜ் மற்றும் வென்டிலேட்டட் வசதியுடன் கூடிய இருக்கைகள், ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இந்த காரில் முன்பக்கத்தில் கூடுதல் பொருட்களை வைப்பதற்கான சிறிய சேமிப்புப் பகுதியும் உள்ளது. மேலும், 2,000 கிலோ வரை எடை கொண்ட டிரெய்லரை இழுத்துச் செல்லும் திறனும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட தூரப் பயணங்களுக்கும் குடும்பப் பயன்பாட்டிற்கும் ஏற்ற மின்சார எஸ்யூவியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகமாகுமா?
புதிய ஃபோக்ஸ்வேகன் ஐடி டிகுவான் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்திய அறிமுகம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்தியாவில் மின்சார கார்களுக்கான மார்க்கெட் வலுவாக மாறி வருவதால், நிச்சயமாக எதிர்காலத்தில் இந்த மாடல் பரிசீலிக்கப்படும். இந்தியாவில் அறிமுகமானால், அதிக ரேஞ்ச் மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதி விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு புதிய தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications


