ஃபோக்ஸ்வாகனில் இந்த புதிய காரை 5-சீட்டரில் வாங்குவதா (அ) 7-சீட்டர் உடன் வாங்குவதா?
இந்திய கார் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தனது புதிய 'டைரான்' (Tayron) எஸ்யூவி காரை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. வழக்கமான டைரான் ஆர்-லைன் (Tayron R-Line) கார் மாடலின் ஸ்டாண்டர்ட் பதிப்பாக வந்துள்ள இந்த புதிய 5-சீட்டர் எஸ்யூவி வெறும் ரூ.41.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கிறது.
இது ரூ.46.99 லட்சம் மதிப்பிலான 7-சீட்டர் ஆர்-லைன் காரை விட முழுமையாக ரூ.5 லட்சம் குறைவாகும். ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டாலும், இந்த இரண்டு கார் மாடல்களுக்கும் இடையே இருக்கும் அந்த 5 முக்கிய சுவாரஸ்யமான வித்தியாசங்கள் என்னென்ன தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

இருக்கை வசதியும் பிரம்மாண்ட பூட் ஸ்பேஸும்!
புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட டைரான் லைஃப் வேரியண்ட் ஒரு 5-சீட்டர் எஸ்யூவி கார் ஆகும். ஆனால், டைரான் ஆர்-லைன் மாடலோ 7 பேர் வரை அமரக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், 5 இருக்கைகள் மட்டுமே இருந்தாலும், டைரான் லைஃப் காரில் நம்ப முடியாத அளவிற்கு 885 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. ஆர்-லைன் மாடலில் வெறும் 345 லிட்டர் பூட் ஸ்பேஸ் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால், அதிக லக்கேஜ் கொண்டு செல்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதம்.
மயக்கும் புதிய வடிவமைப்பு அம்சங்கள்
டைரான் ஆர்-லைன் காரின் ஆக்ரோஷமான மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் ஒப்பிடும்போது, புதிய டைரான் லைஃப் மிகவும் நேர்த்தியான மற்றும் ஆடம்பரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதில் கவர்ச்சிகரமான L-வடிவ கிரில், வளைந்த பம்பர்கள், கருப்பு நிற ரூஃப் ரெயில்கள் மற்றும் புதிய டிசைன் கொண்ட 18-இன்ச் அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஆர்-லைன் காரில் பிரீமியம் தரத்திலான IQ.Light HD மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள் பொருத்தப்பட்டிருக்க, லைஃப் மாடலில் ஸ்டாண்டர்ட் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

உள்ளே இருக்கும் சொகுசான கேபின் அனுபவம்!
கம்பீரமான டைரான் ஆர்-லைனின் டார்க் மற்றும் ஸ்போர்ட்டி கேபினுக்குப் பதிலாக, லைஃப் மாடலில் இரட்டை வண்ணக் கருப்பு மற்றும் சாம்பல் நிற கேபின் வழங்கப்பட்டுள்ளது. ஆர்-லைனில் 30 வண்ண ஆம்பியண்ட் லைட்டிங் இருக்கும் வேளையில், இதில் 10 வண்ண ஆம்பியண்ட் லைட்டிங் மட்டுமே உள்ளது. இருப்பினும், பேஹ் (beige) நிற ரூஃப் லைனிங், ஷிப்ட் பேடில்களுடன் கூடிய ஹீட்டட் லெதர் ஸ்டீயரிங் வீல் மற்றும் இரண்டு நிலைகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லக்கேஜ் கம்பார்ட்மென்ட் போன்ற பல சொகுசு அம்சங்கள் இதில் உங்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
தொழில்நுட்பம் மற்றும் பிற முக்கிய வேறுபாடுகள்
தொழில்நுட்ப வசதிகளிலும் பல சுவாரஸ்யமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டைரான் ஆர்-லைனில் உள்ள பிரம்மாண்ட 15-இன்ச் திரைக்குப் பதிலாக, லைஃப் மாடலில் 12.9-இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. அதேபோல், ஹர்மன் கார்டனின் 11-ஸ்பீக்கர் (700W) ஆடியோ சிஸ்டத்திற்குப் பதிலாக, இதில் 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஆர்-லைன் மாடலில் மட்டுமே கிடைக்கும் பிரத்யேக 360-டிகிரி கேமரா மற்றும் ஹெட்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆகிய அதிநவீன வசதிகள் இந்த லைஃப் வேரியண்ட்டில் இடம் பெறவில்லை.
மாறாமல் இருக்கும் அந்த மாஸ் அம்சங்கள்!
விலை மற்றும் சில அம்சங்கள் குறைந்தாலும், என்ஜின் ஆற்றலில் வோக்ஸ்வாகன் எந்த சமரசமும் செய்யவில்லை. இரண்டு கார் மாடல்களிலுமே சக்திவாய்ந்த 2.0L TSI பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 204 bhp பவரையும் 320 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதுமட்டுமின்றி, 7-ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் மற்றும் ஃபோக்ஸ்வாகனின் புகழ்பெற்ற '4Motion' ஆல்-வீல் டிரைவ் சிஸ்டமும் அப்படியே தொடர்கிறது.
மேலும், ஹீட்டிங் மற்றும் மசாஜ் வசதிகளுடன் கூடிய 12-வே பவர் அட்ஜஸ்டபிள் முன் இருக்கைகள், லெவல் 2 ADAS பாதுகாப்பு அம்சம், 9 ஏர்பேக்குகள் மற்றும் பிரம்மாண்டமான பனோரமிக் சன்ரூஃப் போன்ற அனைத்து பிரீமியம் அம்சங்களும் இரண்டு கார்களிலுமே பொதுவானவையாகவே உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டைரான் என்கிற பெயரை பிரபலப்படுத்த ஃபோக்ஸ்வாகன் தயாராகி உள்ளது. இதன் வெளிப்பாடாகவே, 5-சீட்டர் மற்றும் 7-சீட்டர் என இரு விதமான சீட் ஆப்ஷன்கள் உடன் டைரான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டில் எந்த காரை வாங்க விரும்புகிறீர்கள் என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications
