ரூ.8 லட்சத்தில் புதிய காம்பேக்ட் எஸ்யூவி... இந்தியாவுக்கு உறுதி செய்தது ஃபோக்ஸ்வேகன்!!
ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படும் புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் இந்திய அறிமுகத்தை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு மூலமாக அதிகாரப்பூர்வமாக இன்று உறுதி செய்துள்ளது. இந்த கார் ஸ்கோடா கைலாக் அடிப்படையிலான காம்பேக்ட் எஸ்யூவியாக இருக்கும். வரும் 2027ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, இந்த சந்தையில் அனைத்து நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அந்த வகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இந்த சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளில் தீவிராக உள்ளது. இந்த புதிய மாடல் 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான அளவில் வடிவமைக்கப்படுகிறது.

(Representative Image)
இந்தியாவுக்காக உள்நாட்டு பாகங்களை அதிக அளவில் பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த புதிய எஸ்யூவியான ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்கோடா கைலாக் எஸ்யூவியின் அதே பிளாட்ஃபார்ம் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டு வருகிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB-A0-IN கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
இந்திய சந்தையின் தேவைகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பிளாட்ஃபார்ம் ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் பல இந்திய தயாரிப்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக உள்நாட்டு உதிரிபாகங்கள், உரிமையாளர்களுக்கு குறைவான பராமரிப்பு செலவீனம் மற்றும் செம்மையான உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்த பிளாட்ஃபார்ம் முக்கியத்துவம் அளிக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் கார்களின் முக்கிய அடையாளங்களான சிறப்பான கட்டுமானத் தரம், பாதுகாப்பு மற்றும் ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவுக்கான விதிமுறைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற எஞ்சின், கியர்பாக்ஸ் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த காரில் ஸ்கோடா கைலாக் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது இந்தியாவில் டைகுன், விர்ட்டஸ், டிகுவான் ஆர் லைன் மற்றும் கோல்ஃப் ஜிடிஐ ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகிறது.இவற்றில் டைகுன் எஸ்யூவி ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய மாடலாக இருந்து வருகிறது. அடுத்த ஆண்டு புதிய காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகமான பிறகு, இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விற்பனை ஏற்றம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அதிக போட்டி நிறைந்த காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் ஃபோக்ஸ்வேகேன் நேரடியாக அதிக விற்பனை கொண்ட மாடல்களுடன் போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், ரூ.8 லட்சத்திற்குள் ஆரம்ப விலையை நிர்ணயிக்கும் என்று தெரிகிறது. சிறப்பான கட்டுமானத் தரம் மற்றும் ஓட்டுதல் அனுபவத்தை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா 3XO, ஸ்கோடா கைலாக் ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் இது நேரடியாக போட்டி போடும். மாருதி பிரான்க்ஸ் கார் கூட மறைமுமாக இதற்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications

