ஹூண்டாய் கிரெட்டாவின் ஆதிக்கத்தை முறியடிக்க ஃபோக்ஸ்வேகன் களமிறக்கிய கார்... ஷோரூமில் பார்ப்பதற்கு வேற லெவல்!
ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Volkswagen Taigun Facelift) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட புதிய டைகுன் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையிலான வீடியோ ஒன்று 'எஸ்ஜே கார்ஸ் ரிவியூ' (SJ Cars Review) என்கிற யுடியூப் (Youtube) சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த காலங்களில் இருந்து சிறப்பாக விற்பனையான சில ஃபோக்ஸ்வேகன் கார்களுள் ஒன்று, டைகுன் ஆகும். இதனாலேயே இந்த காரை குறிப்பிட்ட கால இடைவெளியில் மறக்காமல் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அப்கிரேட் செய்துவிடுகிறது. அந்த வகையில், ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்ற புதிய டைகுன் இந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் வெளியீடு செய்யப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தற்போது டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு புதிய டைகுன் கார்கள் வர துவங்கியுள்ளன. அதாவது, 20 நாட்களுக்கு உள்ளாக கார் வெளியீடு செய்யப்பட்டு, பின்னர் விலைகள் அறிவிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது ஷோரூம்களுக்கும் வர துவங்கியுள்ளன. இதில் இருந்து, புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார்களை விரைவாக வாடிக்கையாளர்களிடம் கொண்டுப்போய் சேர்க்க வேண்டும் என்கிற ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் நோக்கம் புரிகிறது.
தற்போது ஷோரூமில் காட்சித்தந்து இருப்பது புதிய டைகுனின் விலைமிக்க ஜிடி பிளஸ் க்ரோம் (GT Plus Chrome) வேரியண்ட் ஆகும். அதாவது, ரூ.10.99 லட்சத்தில் இருந்து ரூ.19.30 லட்சம் வரையிலான விலைகளில் புதிய டைகுன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ரூ.18.94 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த ஜிடி பிளஸ் க்ரோம் வேரியண்ட் கிடைக்கிறது.

இதனை காட்டிலும் விலைமிக்க ஜிடி பிளஸ் ஸ்போர்ட் வேரியண்ட்டும் உள்ளது. ஜிடி பிளஸ் க்ரோம் வேரியண்ட்டை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் முன்பகுதி முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இந்த ஜிடி பிளஸ் க்ரோம் வேரியண்ட்டிலும் முன்பக்கத்தில் நேர்த்தியான வடிவிலான எல்இடி ஹெட்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹை மற்றும் லோ பீம்களுக்காக புரோஜெக்டர் செட்-அப் உடன் இந்த எல்இடி ஹெட்லைட்கள் உள்ளன. ஹெட்லைட்களுக்கு அருகே வழங்கப்பட்டுள்ள எல்இடி டிஆர்எல்-கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் ஃபோக்ஸ்வேகன் லோகோ ஆனது ஒளிரக்கூடியதாக உள்ளது. மேலும், இந்த டைகுன் ஜிடி பிளஸ் க்ரோம் வேரியண்ட் காரின் முன்பக்கத்தில் நான்கு பார்க்கிங் சென்சார்களும் இடம்பெற்றுள்ளன.
இது ஜிடி பிளஸ் க்ரோம் வேரியண்ட் என்பதால், அதன் பெயரை நியாயப்படுத்தும் விதமாக முன்பக்க பம்பரில் க்ரோம் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன. முன்பக்க பம்பரில் மட்டுமில்லாமல், காரின் கதவு கைப்பிடிகள் மற்றும் விண்டோ லைனிலும் க்ரோம் ஹைலைட்களை பார்க்க முடிகிறது. காரின் புதிய டிசைனிலான 17-இன்ச் அலாய் சக்கரங்கள் டைமண்ட்-கட் ஃபினிஷிங்கில் உள்ளன.
அதுவே, இதனை காட்டிலும் விலைமிக்க ஜிடி பிளஸ் ஸ்போர்ட் வேரியண்ட் ஆனது இந்த சக்கரங்களை கருப்பு நிறத்தில் பெறுகிறது. ஜிடி பிளஸ் க்ரோம் வேரியண்ட்டின் பின்பக்கத்திலும் எல்இடி டெயில்லைட்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன மற்றும் காரின் பின்பக்கத்திலும் ஒளிரும் ஃபோக்ஸ்வேகன் லோகோவை பார்க்க முடிகிறது. மேலும், பின்பக்க பம்பரும் முன் பம்பரை போல க்ரோம் ஹைலைட்களை கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 4.2 மீட்டர் நீளத்தில் காம்பாக்ட்டான எஸ்யூவி காரை பிரீமியம் தரத்திலான தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் வாங்குவதற்கு ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஏற்றதாகும். இத்தகைய காரை இன்னும் அதிகமான பிரீமியம் தரத்தில் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த ஜிடி பிளஸ் க்ரோம் வேரியண்ட் ஏற்றதாக இருக்கும். பெயருக்கேற்ப இந்த வேரியண்ட்டில் காரை சுற்றிலும் க்ரோம் ஹைலைட்கள் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








