ஹூண்டாய் கிரெட்டாவுக்கு போட்டியாக களமிறங்கிய 5-சீட்டர் கார்கள்! இரண்டில் நமக்கு ஏற்றது எது?
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் அதன் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift) காரை இன்று வெளியீடு செய்துள்ளது. அதாவது, விலை மற்றும் மைலேஜை தவிர்த்து காரை பற்றிய அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 2026 டஸ்டர் (Duster) ஆனது டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காருக்கு நேரடி போட்டி மாடலாக விளங்குகிறது. இந்த இரு புதிய எஸ்யூவி கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
தோற்றம்: தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார் காம்பாக்ட்டான உடலமைப்பில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புறங்களில் எளிதாக பயன்படுத்துவதற்கும், பார்க் செய்வதற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்ப அளவில் சற்று சிறியதான 17-இன்ச் அலாய் சக்கரங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், உட்புற கேபினும் பிரீமியம் தரத்திலான லெதர்களால், இயங்கும்போது இரைச்சலை தராத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மறுப்பக்கம், 2026 ரெனால்ட் டஸ்டர் கார் ஆனது நன்கு அகலமான உடலமைப்புடன், தரையில் இருந்து அதிக உயரத்தில் அடிப்பகுதியை கொண்டுள்ளது. ரெனால்ட்டின் சி.எம்.எஃப்-பி (CMF-B) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய டஸ்டர் முன்பை விட முரட்டுத்தனமாக தோற்றத்தில் காட்சியளிக்கிறது. அதற்கேற்ப அளவில் சற்று பெரியதாக 18-இன்ச் அலாய் சக்கரங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இதன் உட்புறத்தில் அதிக இடவசதி கொடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்நுட்ப வசதிகள்: டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரின் கேபினுள் அப்கிரேடான 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆனது கூகுள் ஏஐ உதவியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், ஒவ்வொரு திருப்புதலுக்கும் வழிக்காட்டுவதற்கு டிரைவருக்கு எதிரே 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் சன்ரூஃப் உள்ளிட்டவையும் சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

புதிய ரெனால்ட் டஸ்டர் காரிலும் கூகுள் சர்வீஸ் உடன் 10.1-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் திரை, 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் திரை டாஷ்போர்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் டாப் வேரியண்ட்களில் பனோராமிக் சன்ரூஃப் கிடைக்கும் என்றாலும், டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரை போன்று விலை குறைவான வேரியண்ட்களில் சிங்கிள்-பேன் சன்ரூஃப் எதுவும் கிடைக்காது.
பாதுகாப்பு அம்சங்கள்: குளோபல் என்சிஏபி (Global NCAP)-இல் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள், விபத்தின்போது அடுத்தடுத்த மோதல்களை தவிர்க்கும் வகையிலான பிரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், முன் & பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஏறுமுகமான சாலைகளில் ஏறுவதற்கான உதவி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
அதேபோல், 2026 ரெனால்ட் டஸ்டர் காரிலும் 6 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் கூடுதலாக, லெவல்-2 அடாஸ் (ADAS) வழங்கப்பட்டு இருப்பது புதிய டஸ்டர் காரை டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் இருந்து உயர்த்தி காட்டுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் காம்பாக்ட் எஸ்யூவி கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருவதை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ரெனால்ட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் அடுத்தடுத்து தங்களது இந்த கார்களை அறிமுகம் செய்துள்ளன. நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கும், நெரிசல் மிகுந்த சாலைகளில் காரை தினந்தோறும் ஓட்டிச் செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கும் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் கார் ஏற்றதாக இருக்கும் என்பது எங்களது கருத்து. அதுவே, சிறு நகரங்களில், கிராமப்புறங்களில் மற்றும் மலைப்பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ் கொண்ட 2026 டஸ்டர் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








