ஃபோக்ஸ்வாகனில் இருந்து ஜூலை 10ஆம் தேதி களமிறக்கப்படும் புதிய எஸ்யூவி கார்!
ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தில் இருந்து டெய்ரான் என்கிற SUV வகை கார் அடுத்ததாக வருகிற ஜூலை 10ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. டெய்ரான் ஆர்-லைன் கார் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் விலை குறைவான வெர்சனாக டெய்ரான் களமிறக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த காரின் புதிய டீசர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் அதன் டெய்ரான் கார்களின் மார்க்கெட்டை இந்தியாவில் பெரியதாக்க திட்டமிட்டு வருகிறது. அதன்படி, டெய்ரான் ஆர்-லைன் கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதியதாக விலை குறைவான டெய்ரான் காரும் களமிறக்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில் புதிய டெய்ரான் காரின் வெளிப்பக்க மற்றும் உட்பக்க தோற்றங்கள் காட்டப்பட்டுள்ளன.

இந்த டீசரின்படி பார்க்கும்போது, டெய்ரான் காரின் முன்பக்க ஹெட்லைட் டிசைன் ஆனது டெய்ரான் ஆர்-லைன் காருக்கு இணையானதாக உள்ளதை பார்க்க முடிகிறது. காரின் முன்பக்கத்தில் புரோஜெக்டர் LED ஹெட்லைட்கள், கனெக்டட் லைட் பார் மற்றும் ஒளிரக்கூடிய ஃபோக்ஸ்வாகன் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இருப்பினும், முன்பக்க க்ரில் மற்றும் பம்பரின் டிசைன் இன்னும் புலப்படவில்லை.
எங்களுக்கு தெரிந்தவரையில், க்ரில் மற்றும் பம்பரின் டிசைன் ஆனது டெய்ரான் ஆர்-லைன் காரில் இருந்து வேறுப்பட்டதாக, எளிமையான டிசைனை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். பக்கவாட்டில், டெய்ரான் கார் புதிய டிசைனில் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது. இருப்பினும், சக்கரங்களின் அளவு எவ்வளவாக உள்ளது என்பது தெரியவில்லை.

டெய்ரான் ஆர்-லைன் காரில் 19-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில், டெய்ரான் காரில் பளபளப்பான கருப்பு நிறத்திலான வீல் ஆர்ச்சுகள் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவை இடம்பெறுவது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. காரின் பின்பக்கத்தில் LED டெயில்லைட்கள் இரண்டும் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு மத்தியில் ஒளிரக்கூடிய ஃபோக்ஸ்வாகன் லோகோ இடம்பெற்றுள்ளது.
முன்பக்க பம்பரை போல டெய்ரானின் பின்பக்க பம்பரும் டெய்ரான் ஆர்-லைன் காரில் இருந்து வேறுப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். டெய்ரான் காருக்கு உள்ளே இரட்டை நிறங்களில் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளதை தற்போது வெளியாகி இருக்கும் டீசர் வெளிக்காட்டுகிறது. ஆனால், டெய்ரான் காரில் பார்ப்போரை கவரும் வகையில் முற்றிலும் கருப்பு நிறத்தில் கேபின் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டாஷ்போர்டின் டிசைனில் எந்த மாற்றமும் இல்லாததை போல, டெய்ரான் ஆர்-லைன் காரில் வழங்கப்படும் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கு விபரங்களை வழங்க டிஜிட்டல் டிஸ்பிளே தான் புதிய டெய்ரான் காரிலும் வழங்கப்பட உள்ளது. இதனுடன், கேபினை சுற்றிலும் வண்ண விளக்குகள், மெட்டல் பெடல்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் உள்ளிட்டவையும் டெய்ரானில் இடம்பெற்றுள்ளன.
இதேபோன்று, டெய்ரான் ஆர்-லைன் காரின் 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தான் டெய்ரானிலும் தொடரப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 204 எச்பி மற்றும் 320 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த காரில் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் மூலம் என்ஜினின் ஆற்றல்கள் காரின் நான்கு சக்கரங்களுக்கும் செல்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுமார் ரூ.46.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட டெய்ரான் ஆர்-லைன் காரை காட்டிலும் இதன் விலை குறைவாக நிர்ணயிக்கப்படும் என்பது உறுதி. இதனால், புதிய ஃபோக்ஸ்வாகன் டெய்ரானின் அறிமுகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பினும், இதன் விலையையும் ரூ.30 லட்சத்திற்கு கீழ் எதிர்பார்க்க முடியாது.


Click it and Unblock the Notifications