புதிய ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுக தேதி வெளியானது
இந்தியாவில் செடான் கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து இருந்து வரும் நிலையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்ட்டஸ் காரை புதுப்பித்து அறிமுகம் செய்யத் தயாராகியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான இந்த காருக்கு தற்போது முதல் பெரிய அப்டேட் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பல மாற்றங்கள் இடம்பெற உள்ளன.
புதிய விர்ட்டஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் வரும் டிசம்பர் 11ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிப்புறத் தோற்றத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வசதிகளும் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக முன்பக்க வடிவமைப்பு, விளக்குகள் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் ஆகியவற்றில் முக்கியமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

வடிவமைப்பில் மாற்றங்கள்
விர்ட்டஸ் காரின் முன்பக்கத்தில் புதிய வடிவமைப்பிலான பம்பர் வழங்கப்பட்டுள்ளது. அதில் வைர வடிவிலான அலங்கார அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும், முன்பக்க கிரில் மற்றும் பனி விளக்குகள் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மையப்பகுதியில் ஒளிரும் ஃபோக்ஸ்வேகன் லோகோ இடம்பெறுவது காரின் தோற்றத்தை மேலும் கவர்ச்சிகரமாக மாற்றுகிறது.
ஜிடி வேரியண்ட்டில் சிவப்பு நிற ஜிடி பேட்ஜ், கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற வேரியண்ட்டுகளில் இரட்டை வண்ண அலாய் வீல்கள் இடம்பெறலாம். காரின் பக்கவாட்டு வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஏற்கனவே உள்ள அதே தோற்றம் தொடர்கிறது.
பின்பக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக டெயில் லைட்டுகளின் எல்இடி அமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்பக்க பம்பரிலும் சிறிய மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. இருப்பினும், காரின் ஒட்டுமொத்த பின்பக்க வடிவமைப்பு தற்போதைய மாடலைப் போலவே தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன வசதிகள்?
புதிய விர்ட்டஸ் காரின் உட்புற வடிவமைப்பு குறித்த முழுமையான விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், டைகுன் ஃபேஸ்லிஃப்ட் காரில் இடம்பெற்றுள்ள சில வசதிகள் இதில் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் திரை எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய மாடலில் வழங்கப்படும் 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புதிய மென்பொருள் வசதிகள் இடம்பெறலாம். மேலும், 10.25 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 360 டிகிரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட குளிரூட்டும் வசதிகளும் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இவை குறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.
மேலும், முன்பக்க இருக்கைகளுக்கான வென்டிலேஷன் வசதி, மின்சார சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் தொடர்ந்து வழங்கப்படலாம். உயர்தர வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் இடம்பெறுவதற்கும் வாய்ப்புள்ளது. பாதுகாப்பு வசதிகளிலும் சில மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் விபரங்கள்
புதிய விர்ட்டஸ் காரில் தற்போதைய இரண்டு டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 115 எச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் தொடர்ந்து வழங்கப்படலாம்.
அதேபோல், 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இதனுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சினில் பெரிய மாற்றங்கள் இருக்காது.
குறிப்பாக 1.0 லிட்டர் எஞ்சின் கொண்ட ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் தற்போதைய 6 ஸ்பீடு கியர்பாக்ஸுக்கு மாற்றாக புதிய 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். ஏற்கனவே டைகுன் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா கார்களில் இந்த கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுவிட்டது. இதனால் ஓட்டுதல் அனுபவம் மேம்பட வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கும் விலை
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.10.71 லட்சம் முதல் ரூ.19.20 லட்சம் வரை உள்ளது. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சில கூடுதல் வசதிகள் இடம்பெறுவதால் விலை உயர்த்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் செடான் கார் விற்பனையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள விர்ட்டஸ், புதிய அப்டேட் மூலம் தனது போட்டியை வலுப்படுத்த தயாராகியுள்ளது. ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார்களுடன் தொடர்ந்து போட்டியிடும். புதிய வசதிகள் மற்றும் கியர்பாக்ஸ் மாற்றங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications


