1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் நிறுத்தமா..? ஃபோக்ஸ்வாகனுக்குப் புதிய தலைவலி!

ஃபோக்ஸ்வாகனின் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள் ஃபன் டிரைவிங் மற்றும் பெர்ஃபாமன்ஸுக்குப் பெயர் போனவை. 1.0 லிட்டர் (3 சிலிண்டர்) என்ற அளவில் சிறிய டர்போ பெட்ரோல் இன்ஜினை சர்வதேச அளவில் தங்களுடைய கார்களில் பயன்படுத்தி வருகிறது ஃபோக்ஸ்வாகன். அந்நிறுவனத்தின் தொடக்கநிலை கார் மாடல்களில் எல்லாம் இந்த இன்ஜின் தான் பயன்பாட்டில் இருக்கிறது, இந்திய மாடல்கள் உட்பட.

இந்த சிறிய இன்ஜின் தான் சற்று குறைவான விலையிலும் கார் மாடல்களை விற்பனை செய்ய ஃபோக்ஸ்வாகனுக்கு உதவி வருகிறது. ஆனால் விரைவில் இந்த இன்ஜினின் பயன்பாட்டை அந்நிறுவனம் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். ஆம், அதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருக்கின்றன. கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாகவே மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக இறுகி வருகின்றன.

Volkswagen Virtus

ஒவ்வொரு முறையும் சில இன்ஜின், கார் மாடல்கள் அல்லது தொழில்நுட்பங்கள் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்குப் பலியாகி வருகின்றன. இந்த முறை ஃபோக்ஸ்வாகனின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் காவு வாங்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த 2026ம் ஆண்டு இறுதியில் இருந்து யூரோ 7 மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஐரோப்பாவில் படிப்படியாக அமலுக்கு வரவிருக்கின்றன. இந்த மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் ஃபோக்ஸ்வாகனின் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இந்த சிறிய டர்போ பெட்ரோல் இன்ஜினின் பயன்பாட்டை முதலில் ஐரோப்பாவிலும், அதனைத் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் ஃபோக்ஸ்வாகன் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஃபோக்ஸ்வாகன் மட்டுமின்றி, ஃபோக்ஸ்வாகன் குழுமத்தில் இந்த இன்ஜினைப் பயன்படுத்தி வரும் ஸ்கோடா உள்ளிட்ட மற்ற சில பிராண்டுகளும் பாதிக்கப்படும்.

Skoda Kylaq with Engine

ஃபோக்ஸ்வாகன் இன்ஜின்களும், இந்திய மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளும்:

இந்தியாவின் BS மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளானது கிட்டத்தட்ட ஐரோப்பாவின் யூரோ விதிகளுக்கு ஒத்தது தான். யூரோவிற்கு இணையான இந்திய வெர்ஷனாக BS விதிமுறைகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். யூரோ 7 விதிமுறைகள் அமலான பின்பு இந்தியாவிலும் BS7 விதிமுறைகள் அமல்படுத்தப்படும். அப்போது இந்தியாவிலும் ஃபோக்ஸ்வாகனின் 1.0 லிட்டர் இன்ஜினை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.

இந்தியாவில் தற்போது மூன்று இன்ஜின் மாடல்கள் ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒன்று மேலே கூறிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், மற்றவை 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்கள். இதில் 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் இன்ஜின்களை தங்களுடைய மாஸ் மார்க்கெட் கார்களிலும், 2.0 லிட்டர் இன்ஜின்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கார்களிலும் பயன்படுத்தி வருகிறது ஃபோக்ஸ்வாகன்.

1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் நிறுத்தப்படும் பட்சத்தில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினே அந்நிறுவனத்தின் அடிப்படை இன்ஜினாக மாறும். தற்போது 1.0 லிட்டர் இன்ஜினுடனேயே மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வை வழங்கி வருகிறது ஃபோக்ஸ்வாகன். 1.5 லிட்டர் இன்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

கடந்த ஆண்டு தான் கைலாக் எஸ்யூவியின் மூலம் இந்தியாவில் சற்று ஊன்றி கால் பதிக்க முயன்று வருகிறது ஸ்கோடா. இந்த கைலாக் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் கைலாக்கிற்கு இணையான சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட ஃபோக்ஸ்வாகன் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 1.0 லிட்டர் இன்ஜின் நிறுத்தப்பட்டால் இந்தியாவில் ரூ.10 லட்சம் அல்லது அதனை ஒட்டிய விலையில் கூட ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா கார்களை நாம் எதிர்பார்க்க முடியாது.

மிக அதிக தொடக்கவிலையில் அதன் கார் மாடல்கள் எவ்வளவு வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என சொல்ல முடியாது. மிகவும் குறைவான விற்பனை, ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா மாடல்களின் இந்திய இருப்பையே கேள்விக்குள்ளாக்கலாம். அடுத்த சில ஆண்டுகளுக்கு இது எதுவும் நடக்கப் போவதில்லை. ஆனால் அதற்குள் ஃபோக்ஸ்வாகன் புதிய திட்டத்தை யோசித்தாக வேண்டும்.

மிகவும் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட சற்று மேம்பட்ட 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை ஃபோக்ஸ்வாகன் உருவாக்கலாம் எனப் பேசப்பட்டு வருகிறது. 1.0 லிட்டர் அளவிற்கு குறைவான விலையில் இந்தப் புதிய இன்ஜினை வழங்க முடியாது. எனினும் அதன் வெற்றிடத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளை இந்தப் புதிய இன்ஜின் ஓரளவு சரிக்கட்ட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிற்கென தனிப்பட்ட முறையில் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இங்கே அந்த ஒரு பிராண்டு மட்டுமில்லாமல், ஸ்கோடாவும் இருக்கிறது. எனவே, இந்த இன்ஜின் சூழ்நிலைக்கும் ஃபோக்ஸ்வாகன் புதிய திட்டத்தை வைத்திருக்கும் என நாம் நம்புவோம். பட்ஜெட்டைக் கடந்து பெர்ஃபாமன்ஸ் மற்றும் இன்ஜின் ரீஃபைன்மென்ட் என வரும் போது ஜெர்மன் கார்களை அடித்துக் கொள்ள முடியாது. எனவே ஃபோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா கார்கள் இந்தியாவில் தொடர்ந்து விற்பனையில் இருக்க வேண்டும் என்பதே இந்திய கார் வாடிக்கையாளர்களின் விருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நாங்களும் அதையே விரும்புகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 10, 2026, 11:29 [IST]
English summary
Volkswagens 1 litre turbo petrol engine may discontinued after euro 7 implementation
மேலும்... #volkswagen #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+