கார் வாங்கும் கனவில் மண்ணை அள்ளிப் போட்ட வால்வோ! இந்த ஏப்ரலுக்குள் வாங்குவோருக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!
வால்வோ (Volvo), ஸ்வீடன் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான லக்சரி கார் நிறுவனம். இந்தியாவிலும் கார்களை விற்பனை செய்துவரும் வால்வோ வருகிற மே 1ஆம் தேதி முதல் இந்தியாவில் அதன் கார்களின் விலைகளை ரூ.1 லட்சம் வரையில் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
கார்களை உற்பத்தி செய்வதில் தொடர்ந்து அதிகரித்துவரும் செலவுகளாலும், போக்குவரத்து செலவுகளாலும் மற்றும் பணம் மதிப்பு இழப்பினாலும் ஒவ்வொரு வருடமும் கார் நிறுவனங்கள் அவற்றின் கார்களின் விலைகளை அதிகரிக்கின்றன. சில நிறுவனங்கள் ஒரே வருடத்தில் இரண்டு மூன்று முறை கூட கார்களின் விலைகளை அதிகரித்துள்ளதை பார்த்திருக்கிறோம். குறிப்பாக, லக்சரி கார் நிறுவனங்கள் இவ்வாறான விலை உயர்வுகளை அவ்வப்போது அறிவிக்கின்றன.

ஏனெனில் பெரும்பாலும் லக்சரி கார் நிறுவனங்கள் தங்களது கார்களை முழுவதுமாக வெளிநாட்டில் இருந்தோ அல்லது பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்தோ தான் இந்தியாவில் முழு காராக அசெம்பிள் (Assemble) செய்து விற்பனை செய்கின்றன. இது இல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்ற சூழலும் லக்சரி கார்களின் விலை உயர்வுக்கு மறைமுக காரணமாக உள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), பி.எம்.டபிள்யூ (BMW), ஆடி (Audi) போன்ற லக்சரி கார் நிறுவனங்கள் ஏற்கனவே கடந்த ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்தே தங்களது கார்களின் விலைகளை உயர்த்திவிட்டன. அந்த வரிசையில் வால்வோ நிறுவனம் சற்று தாமதமாக மே 1ஆம் தேதியில் இருந்து விலை அதிகரிப்பை கொண்டுவருகிறது.

வால்வோ நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் தற்சமயம் எரிபொருள் என்ஜின் கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கார்கள் என மொத்தம் 5 கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில், வால்வோ இ.எக்ஸ்30 (EX30), இ.எக்ஸ்40 (EX40) மற்றும் இசி40 (EC40) என்கிற எலெக்ட்ரிக் கார்களும், எக்ஸ்சி60 (XC60) மற்றும் அளவில் பெரியதான எக்ஸ்சி90 (XC90) என்பனவும் அடங்குகின்றன.
இவற்றின் விலைகளை அதிகரிக்க உள்ளதாகவே வால்வோ தெரிவித்துள்ளதே அன்றி, இவற்றில் எந்தெந்த கார் மாடல்கள் விலை அதிகரிப்பை பெறவுள்ளன, ஏதேனும் கார் மாடலின் விலை அதிகரிக்கப்பட போவதில்லையா என்கிற விபரத்தை வால்வோ தெரிவிக்கவில்லை. ரூ.1 லட்சம் வரையில் கார்களின் விலைகள் உயர்த்தப்பட உள்ளதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட நான்கு வால்வோ கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) தற்சமயம் முறையே ரூ.41 லட்சம், ரூ.59 லட்சம், ரூ.68.9 லட்சம் மற்றும் ரூ.97.8 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
இந்த அளவிற்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான கார்களில் ரூ.1 லட்சம் வரையில் மட்டுமே விலை உயர்வு கொண்டுவரப்பட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த புதிய விலை உயர்வானது குறிப்பிட்ட சதவீதத்தில் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கிறோம். விலைமிக்க எக்ஸ்சி60 மற்றும் எக்ஸ்சி90 கார்களின் விலைகள் அதிகப்படியாக ரூ.1 லட்சம் அளவிற்கு அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோ கார்களை வாங்கும் அளவிற்கு பணம் படைத்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அளவிலான விலை அதிகரிப்பானது பெரிய அளவிற்கு பாதகமாக இருக்காது. இதில் இருந்து பார்க்கும்போது, கார்களின் விற்பனையை பாதிக்காத வகையில் இந்தியாவில் சிறிய அளவிலான விலை அதிகரிப்பையே வால்வோ நிறுவனம் கொண்டுவருகிறது. இருப்பினும், விலை உயர்வை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க மே மாதத்தில் இருந்து கார்களுக்கு சலுகைகளையும் வால்வோ அறிவிக்கக்கூடும்.


Click it and Unblock the Notifications








