வெறும் 5 லட்சம் ரூபாய் விலையில் ஃபோக்ஸ்வாகன் கார்.. இப்படி ஒரு காரை இனிமே பார்க்க முடியாது!
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் புழங்கும் கார் பிரிவு என்றால் அது சப்-காம்பேக்ட் பிரிவு தான். இந்தியாவில் வசதிகளைப் பார்த்து கார் வாங்கும் வாடிக்கையாளர்களை விட, பட்ஜெட் பார்த்து கார் வாங்கும் வாடிக்கையாளர்களே அதிகம். இதனாலேயே மிகவும் குறைவாகவும் இல்லாமல், மிகவும் அதிகமாகவும் இல்லாமல் சராசரி விலையில் கார்கள் விற்பனையாகும் சப்-காம்பேக்ட் பிரிவு நிறைய வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாக இருக்கிறது.
ஆனால் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களாலும் இந்தக் கார் பிரிவில் வெற்றிகரமாக செயல்பட்டு விட முடியாது. குறிப்பாக ஐரோப்பிய அல்லது அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள். அதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்று ஃபோக்ஸ்வாகன். இந்த ஜெர்மன் நிறுவனத்தின் இப்போதைய லைன்-அப்பில் சப்-காம்பேக்ட் கார்களே இல்லை, அதாவது 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களே இல்லை.

ஆனால் முன்னர் சப்-காம்பேக்ட் கார்களை இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறது ஃபோக்ஸ்வாகன். அப்படி அந்நிறுவனம் விற்பனை செய்த முக்கியமான சப்-காம்பேக்ட் கார்களுள் ஒன்று அமேயோ (Ameo). செடான் வகையைச் சேர்ந்த இந்தக் காரை இந்திய சந்தைக்காகவே உருவாக்கியதாக அப்போது ஃபோக்ஸ்வாகன் தெரிவித்தது. ஆனால் மற்ற எந்த சப்-காம்பேக்ட் கார்களை விடவும் கடினமான தோல்வியை சந்தித்து இந்திய சந்தையில் இருந்து வெளியேறியது அமேயோ.
2016ல் 5.25 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அமேயோ செடானை இந்தியாவில் வெளியிட்டது ஃபோக்ஸ்வாகன். அந்த நேரத்தில் சப்-காம்பேக்ட் செடான்களுக்கு இப்போதிருப்பதை விட நல்ல வரவேற்பு இருந்தது. மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாடா டிகோர் தவிர, ஹூண்டாய் எக்ஸன்ட், ஃபோர்டு அஸ்பைர், டாடா செஸ்ட் மற்றும் மஹிந்தரா வெரிட்டோ என நிறைய சப்-காம்பேக்ட் செடான் கார்கள் விற்பனையில் இருந்தன. அவற்றுள் ஒன்றாக வெளியானது அமேயோ.

இப்போதைப் போலவே அப்போதும் ஒவ்வொரு மாதமும் 20,000 யூனிட்டுகளுக்கும் மேலாக விற்பனையாகி வந்தது மாருதி டிசையர். அதனைப் பார்த்துத் தான் நிறைய நிறுவனங்கள் சப்-காம்பேக்ட் செடான் பிரிவில் தீவிரமாக செயல்பட்டன. ஆனால் மாருதியின் நம்பகத்தன்மை ஃபோக்ஸ்வாகனிடம் வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கவில்லையே. அதனை சரிக்கட்ட ஏதாவது செய்திருக்க வேண்டும். ஆனால் நிறைய இடங்களில் கோட்டை விடும் வகையிலேயே புதிய காரை அந்நிறுவனம் வடிவமைத்திருந்தது.
குறிப்பாக டிசைன். ஒரு கார் பார்க்க நன்றாக இருந்தால் தானே மேற்கொண்டு அதனை வாங்குவது குறித்தாவது வாடிக்கையாளர்கள் பரிசீலனை செய்வார்கள். அமேயோ பார்ப்பதற்கே நன்றாக இல்லை என்பது தான் நிறைய வாடிக்கையாளர்களின் கருத்தாக இப்போதும் இருக்கிறது. பெரிய காராக வடிவமைக்கப்பட்டு, கடைசி நேரத்தில் அவசரகதியில் சப்-காம்பேக்டாக வடிவமைக்கப்பட்டது போலான லுக்கை அமேயோ கொண்டிருப்பதாக நிறைய வாடிக்கையாளர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாவது முக்கியமான ஒரு காரணம் பின்வரிசை இருக்கைக்கு போதுமான லெக்ரூம் இல்லை என்பது. காம்பேக்ட் செடான் கார் என்றால் எங்கே இடவசதியை அதிகமாகக் கொடுக்க வேண்டும், எங்கே குறைவாகக் கொடுக்க வேண்டும் என்பதைப் பார்க்காமல் பின்வரிசை இருக்கைக்கு குறைவான இடவசதியைக் கொடுத்துவிட்டது ஃபோக்ஸ்வாகன். மற்ற சப்-காம்பேக்ட் கார்களை விட மிகவும் குறைவான லெக்ரூமை இந்தக் கார் கொண்டிருந்ததாக பரவலான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
வெளியான போது 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய இன்ஜின் தேர்வுகளை இந்த சப்-காம்பேக்ட் செடானில் ஃபோக்ஸ்வாகன் கொடுத்திருந்தது. விற்பனைக்கு பின்பான சேவை இந்தக் காரை வாங்குவதில் இருந்து நிறைய வாடிக்கையாளர்களைத் தடுத்தது. பட்ஜெட் வாடிக்கையாளர்கள், குறைவான பயன்பாட்டுச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவு கொண்ட கார்களையே எதிர்பார்ப்பார்கள். ஆனால் அமேயோ அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு குறைவான செலவுகளைக் கொண்டதாக இல்லை.
குறைவான விலையில் காரை உருவாக்கியிருந்தாலும், சர்வீஸ் கட்டிபடியாகமலேயே இருந்து வந்தது. சின்னச் சின்ன ரிப்பேர்களுக்குக் கூட எதிர்பாராத அளவில் வாடிக்கையாளர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியிருந்தது. சர்வீஸ் நெட்வொர்க்கும் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களின் அளவிற்கு பரந்து விரிந்ததாக இல்லை. இந்த சர்வீஸ் குறைபாடுகள் பொதுவாக அனைத்து ஃபோக்ஸ்வாகன் கார்களுக்கும் இருக்கும் என்றாலும், பட்ஜெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அமேயோவை இன்னும் அதிகமாக பாதித்தது.
அமேயோவின் DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் சிறிய பிரச்சினை என்று சர்வீஸ் செண்டரில் விட, கியர்பாக்ஸை முழுமையாக மாற்ற வேண்டும் என்று கூறி 5.8 லட்சம் ரூபாய் பில்லை நீட்டியிருக்கிறார்கள் ஃபோக்ஸ்வாகன் சர்வீஸ் செண்டர்காரர்கள். அதேபோல் மற்றொரு வாடிக்கையாளர்களுக்கும் குறிப்பிட்ட பாகத்தை ரிப்பேர் செய்யாமல், முழுவதுமாக மாற்றி 1.2 லட்சம் ரூபாய் பில்லை நீட்டியிருக்கிறார்கள். இதெல்லாம் சில இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் என்றாலும், ஃபோக்ஸ்வாகனின் பெயரை முழுமையாக பாதிக்கக்கூடியவை.
கடைசியாக 2020ல் BS6 மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் அமலுக்கு வர அமேயோவை மொத்தமாக மூட்டை கட்டிவிட்டது ஃபோக்ஸ்வாகன். 2016 முதல் 2020 ஆண்டு வரை 60,000 யூனிட்டுகளுக்குள்ளாகவே அமேயோ காரை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அந்த நேரத்தில் சப்-காம்பேக்ட் செடான் பிரிவில் இரண்டாம் இடத்தில் இருந்த ஹோண்டா அமேஸ் கூட ஒரே ஆண்டில் 70,000 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சப்-காம்பேக்ட் பிரிவில் இப்படி நிறைய தோல்விகளாலேயே ஒட்டுமொத்தமாக வெளியேறியது ஃபோக்ஸ்வாகன். இதனால் தான் இப்போது ஒரு சப்-காம்பேக்ட் கார் கூட ஃபோக்ஸ்வாகனின் லைன்-அப்பில் இல்லை. ஆனால் ஃபோக்ஸ்வாகனின் குழும நிறுவனமான ஸ்கோடா கைலாக் மூலம் சிறிய அளவில் வெற்றி கண்டிருக்கிறது. அதனை அப்படியே பிரதியெடுக்க புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி மூலம் முயற்சி செய்யவிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். இந்த முறை சப்-காம்பேக்ட் சந்தையை அந்நிறுவனம் சரியாக கணிக்கிறதா என்பதைப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications